Search This Blog

Friday, October 27, 2017

திருவருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - மூன்றாம் பத்து

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************



(வேறு)
             மாதர் மையலற் றில்லற வாழ்வினை யொறுத்து
             வேத மோது மெய்ப் பொருளினை வேட்டுளத்துறவே 
             போது மென்றுசொற் றொண்டொடு மாதவம் புரிந்த 
             நீத ராமலிங் காரிய நின்னடி சரணம்...                          ...(21)

             சரணஞ் சார்ந்தவர்க் கிரங்குநற் றயவுசா லந்தக்
             கரண மேயரா மலிங்கர்தாட் கமலமே சனன 
             மரண நீங்கவென் சென்னிமேல் வைகியஞ் ஞானா
             வரணம் பேர்த்தலின் மவுனவான் சுகமரு விடுமே ...             ...(22)

             மருவு நின்னருட் பாவினில் வருமுதல் வெண்பாத் 
             தெரிவ ருங்கதி தெரிக்குநூன் முழுவதுந் தேர்வோர்
             குரவ ராயுலகோர்குறிக் கொள்ளவாழ்குவரேற்
             பொருவி லாதரா மலிங்கநின்புகழ்கண்டார் புகல்வார் ...           ...(23)

             வார மோங்குநின் றிருவருட் பாவினுள் வழுத்து
             நாரி பாகனார் திருவடிப் புகழ்ச்சிதேர் நலத்தோர்
             ஆரி யத்திரு மறைப்பொரு ளறிந்துய்கு வாரேல்
             யார ளந்தறி குவரிரா மலிங்கநின் னிசையே ...                  ...(24)

             இசையி னோடிய னாடகத் தமிழ்வடக் கெல்லை
             யசல வேங்கடம் போன்றுதண் டணிகைவே ளாருளா
             னசையு றாதமெய்ஞ் ஞானசம் பத்தெலா நண்ணு
             நிசசொ  ரூபரா மலிங்கமென் வாழ்முத னிதியே ...              ...(25)

             நிதியு மீகுவ னிடமுடனேவலு நேர்வன்
             கதியு மீகுவன் கற்பவை கற்றவ ரவையிற்
             பதியு மாகவைத் தருளுவன் றன்பதம் பரவும்
             விதியு ளார்க்கிரா மலிங்கவே ளென்பர்மே லவரே ...             ...(26)

             மேலு லாஞ்சித்தர் மதித்திடச் சித்தெலாம் விளங்கிக்
             கால மூன்றையுங் கருத்தினுட் கண்டுவாழ் நினைக்கல்
             லாலின் கீழமர் தக்ஷிணா மூர்த்தியென் றடைந்தேன்
             சீல மேவிரா மலிங்கதே சிகவருள் செய்யே ...                  ...(27)

             செய்யுண் மாலைநின் சேவடி புனைந்திடுஞ் சிறியேன்
             பையு ணீங்கியுய் பாக்கருள் பாலிக்க வேண்டு
             மையுண் கண்ணியர் மாலறவென்றரா மலிங்கத்
             துய்ய னேவடல் வாழ்வெனத் துலங்குகின் றவனே ...            ...(28)

             துலங்கு சீர்வட லருட் பெருஞ் சோதிவாழ் சவையை
             யிலங்கத் தோற்றுவித் தலகில் சித்தாடுவா னெண்ணி
             விலங்கு றாதனற் சமாதியின் மேவுமா தவரா 
             மலிங்க தேசிகா வென்றனை வாழ்விக்க நினையே ...            ...(29)

             நினையு நின்னடித் தாமரை நெஞ்சிடை நிறுவி
             வனையு மென்றமிழ் மாலையைச் சூட்டுபு வணங்கு
             மெனையு நின்றிருத் தொண்டருட் கூட்டுதற் கிசைவா
             யனையு மத்தனு மாமிரா மலிங்கவா ரியனே    ...              ...(30)



No comments:

Post a Comment