Search This Blog

Friday, October 27, 2017

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - நான்காம் பத்து

                                திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************

                                                 (வேறு)


             ஆரூரன் பசிநீங்கக்கச்சூர்க்கோயி
             லரனார்முன் சோறூட்டிக்காத்ததே போற்
             றேரூருந் திருவீதியொற்றியூரிற்
             றியாகேசர் நின்பசிகண் டிரங்கியோர்நாள்
             காரூருநள்ளிரவி லன்ன மூட்டிக்
             களைமாற்றித் தாய்நீர்மை காட்டி னாரே
             னீரூருஞ் சடைமுடியா ரிராமலிங்க 
             நெடுந்தகைநின் றொண்டுவந்தாரென்னலாமே.    ...             ...(31)

             என்னிசைப்பே னின்மகிமை வடலூர்தன்னி
             லெந்தாய்நீ மோனபதம் புகுந்தபின்னர் 
             நின்னதுசந் நிதிகண்டுபுதல்வர்சூழ 
             நேயமொடுதிரும்பியதோர் மடவாளாங்கே
             மன்னியதோர் நதிநீத்தங் கடக்கமாட்டாள்
             வருந்திநிற்க வெதிர்போந்துநீத்தந்தானே
             நன்னர்வழி விடப்பணித்துக் கடத்திக் காத்தாய்
             நற்றுணைவா விராமலிங்கச் சித்தர் கோவே   ...                ...(32)

             சித்தர்சிகா மணியேயி ராம லிங்க 
             தேசிகனே நின்கருணைக்கெல்லையுண்டோ
             வித்தகநின்னடியானோர் வணிகன் கானில்
             விடநாகந் தொடவரல்கண் டுன்மே லாணை
             வைத்தகலமுப்பகலங் கதுசெல்லாமல்
             வருந்திநிற்கும் பரிசினைமுற் றுணர்விற்கண்டே
             பத்தன்வரப் பணித்தாணை விடுவித்தாங்கே
             பணிசெலவிட்டமுதுண்டாய் நின்னேராரே    ...                  ...(33)

             நின்னருட் சீர்பாடியவே லாயுதப்பேர்
             நிபுணனுடல் வீங்கியவெம் பாண்டுநோயாற்
             பன்னரிய துயர்மேவிப்பண்டிதத்தாற்
             பலன்காணானின்கோயில் வாயிற்பள்ளி
             துன்னினனாய்க் கிடந்தழல்கண் டவனாகத்தைத்
             தூயதிரு மலர்க்கரத்தாற்பரிசித்தன்னான்
             இன்னுயிர்கா த்தனைராம லிங்கத்தேவே
             யென்னிசைப்பே னின்சித்தின் பெருமையானே  ...                ...(34)

             யானாரெங் கோனாரென் றறியாதேனை
             யினிதாளு மிராமலிங்கமணியே நீதான்
             மேனாளோர் பிரமவிராக் கதனாற்றுன்ப 
             மேவியவந் தணனின்பால் வருமுனோக்கி
             யானாதங் கமரடியார்க்கறிவித்தன்னா
             னணைபோதிலவணிருக்கப் பணிமினென்றே
             தானாகத் தனியிருந்தன் னவனைக்கூவித்
             தரிசனந்தந் திடரொழித்தாய் கருணையென்னே ...                ...(35)

            கருணைநெடுங் கடலேயிராம லிங்கக்
            கண்மணியேயடியர்புடைசூழச்சென்றோர்
            தருணமொரு பதிக்கேகியாமந்தன்னிற்
            சயனித்த புறந்திண்ணைசேரோர் வீட்டில் 
            இரணமனந் தளர்ந்து குன்மநோயான் மாழ்கோ
            ரிரெட்டி யழுங்குரலொலிகேட் டில்லத்துட்போய்ப்
            பருணிதர் மெச்சிடத்துளசிக் குடிநீ ருண்ணப்
            பணித்திடர்நீக் கினைதன்வந் திரிநீபோலும்  ...                   ...(36)

            திரியாத மனத்தன்ப னோர்வேளாளன்
            றிகழ்கூட லூருறைவான்றன்னோர்மைந்தன்
            தரியாத சுரப்பிணியா லிறுதிசாருந்
            தருணமுற நினைநாடியீன்றோ ரேத்தப்
            பிரியாத பெருஞ்சபையோர் கேட்கஞானம்
            பேசுங்காலுணர்ந்து சித்தொன்றாடிக்காத்தாய்
            கரியானா யெவ்வுயிர்க்குமிராமலிங்கக்
            கண்மணி நின்பெருமையவன் விளம்பினானே ...                 ...(37)

            விளம்புபல சித்துவிளையாடல் செய்தாய்
            வித்தகரா மலிங்ககுரு மணியே புன்செய்
            வளம்புனைசிற் றூர் மேட்டுக் குப்பந்தன்னில் 
            வசித்திடுநா ளங்கணைந்தோர் சித்தனாக 
            தளம்பல தீ யிடைவைத்தா டகஞ்செய்தீந்தான்
            தன்புடை சூழ்ந்தவர்க்கெனல்கேட்டவனைக்கூவி
            இளம்பிளை செய் யேலிதெ ன்றாய் மீட்டுஞ்செய்தான்
            இருந்தைகண்டான் கருங்குழியாரிசைப்பா ரீதே.  ...              ...(38)

            ஈதொன்றோ பலவென்பார் நின்சித்தாட 
            லினிதுணர்ந்தோர் கேட்பவருக் கிராமலிங்க 
            மூதுணர்வோய் முழுப்புலவோயென்னான்சொல்வேன்
            மூதுதவ நீ யாற்றிய நாட்சாலை தன்னில் 
            ஆதுலருக்கமுதிலையன்றடுத்தோர் கூற
            வகங்கசிந்து சிவத்தினையோர் பதிகம்பாடிப்
            பாதமலர் துதித்தனைதண் டுலம்பல்பாண்டில்
            பலபதி நின்றடைந்தன கண்டார்பல்லோரே   ...                  ...(39)


            பல்குணத்துப்பன்மாந்தர் தமக்குங்கால
            பயநீங்க நயம்படுசொல்லாலிறனந்தோர் 
            சில்கணத்திற்றம் முயிர்பெற்றெழவே செய்யுஞ்
            சித்தகுரு வருதருண மிதுவே யென்றாய்
            நல்குணவுண் டாங்கிருந்தார் நேயர்ஞான 
            நலமறியாரிகழ்ந் தொழிந்தாரிராமலிங்கத்
            தொல்குருவே யினையவருள் விளையாட்டென்று
            தொடங்குவதோ தெளியும் வணமறிவிப்பாயே ...                 ...(40)

No comments:

Post a Comment