திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி
நூலாசிரியர்:
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்'
அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" -
(வேறு)
அறிவினையறிந்தாயாங்கே யறிவினுக்கறிவு தன்னைப்
பிறிவினை யின்றிக்கூடிப்பேரொளி விளக்கம் பெற்றாய்
செறிவினை யிலாத ஞான சித்தராமலிங்க நீநல்
லுறவென வுளப்பூங்கோயி லுனைநீறி இத் துதிக்கின்றேனே ...(41)
துதிக்கெனை யியக்குஞான சொரூபனா மிராமலிங்கன்
மதிக்கொரு விளக்காநின்றான் மலவிருள் விலகச்செய்வான்
விதிக்குநானஞ்சவையான் வேட்கைதீர் விமலமுத்திப்
பதிக்குநற்றுணையுமாவான் பானுமண்டலத்தினானே ... ...(42)
பானுமண்டலத்தோர் ஞான பானுவாம்பர்க்க மூர்த்தி
தானென நமையாள்கின்ற சற்குரு ராமலிங்கக்
கோனுயர் சித்திமூன்றுங் குலவநம் பால்வழங்கு
வானென மதித்து நெஞ்சே வணங்குது மவன்றாட்போதே ...(43)
போது வீண் போதராமற் புண்ணிய னிராமலிங்கக்
கோதுதீர் ஞானமூர்த்தி குரைகழற் கமலம்பாடி
யோதுமெண் சித்திமுத்தி யொன்றிவாழ்ந்திடலாநெஞ்சே
யீதுநீ விழைந்தாயெண்ணி லிறைபணி புரிகுவாயே .... ...(44)
இறைபணி செயமலங்க ளிரிந்திடு மெனுமெய்ஞ்ஞான
மறைமொழி யுணர்ந்த நெஞ்சே வருதிநம் வடலூராளி
குறையறு மிராமலிங்க குருநமைக் குறிக்கொண்டாளத்
திறைசெலுத்துதல்போ லன்னான் சேவடி பாடலாமே ...(45)
பாடல மாலை போலப் பாடல மாலை சாத்தி
நாடல கிலாத சுத்த ஞானநம் பாலதாக
வாடல மாகியின்ப வாழ்வுற விராமலிங்கர்
தாடலை வைத்து நெஞ்சே தருக்கறத்துதித்து நாமே ... ...(46)
நாமெனு மகந்தை தீர நஞ்செய லவனதாகப்
பாமர நீங்கஞானப் படிவமுற்றருள் விலாசத்
தோமறு வடலூர்மேய தொல்லருட் பெருஞ்சோதிக்குட்
போமள விராமலிங்கன் பொன்னடி புகழுவோமே ... ...(47)
புகழுவோமிராமலிங்கன் பொன்னடி வணங்கு கிற்போ
மிகழுவோஞ் சனனவல்ல லின்னருட்டுணையினாலே
யகழுவோ மாணவத்தை யருட்பெருஞ் சோதிக்குள்ளே
திகழுவோ ஞானானந்தத் தேனினைப் பருகுவோமே ... ...(48)
பருகுமின் னமுதமொப்பான் பளகிலா விராம லிங்கன்
தருகுவ னிதுநாள் காறுந் தராதபே றெய்தும் வண்ணம்
வருகுவென் புவிவாழ்விக்க வாய்மையீ துணரென்பான்போ
லுருகுமென்னிடத்துவந்தா னுரைத்தசொற் பணிகொண்டானே ... ...(49)
கொண்டல்வந்துறங்குஞ் சோலைக் குளிர்நிழல் வடலூர்மேய
வண்டர்க ணாத னெம்மானருட்பெருஞ் சோதிக்காளாய்த்
தொண்டது செய்யப்பெற்றேன் றூயவ னிராமலிங்கன்
பண்டைநற் றவத்தாலென்னைப் பற்றிநின் றசைத்தலானே ... ...(50)
No comments:
Post a Comment