Search This Blog

Friday, October 27, 2017

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - பாயிரம் / சாற்றுக்கவி

திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்சோதி துணை

திருவருட் பிரகாச வள்ளலார்
  பதிற்றுப் பத்தந்தாதி.
----------------------------------------
இஃது
ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தலைவரும்
உத்திரஞான சித்திபுரச் சிற்சபை வகுத்தவருமாகிய
திருவருட் பிரகாசவள்ளலார்
சிதம்பரம்
இராமலிங்க சுவாமிகள் மேல்,
--------------------------------------
திரிசிபுரம் ஸ்ரீலஸ்ரீ
மஹாவித்வான் சிந்தாந்த ரத்னாகரம்
அ. வேங்கடசுப்புப்பிள்ளை யவர்களாலியற்றி
-------------------------------------
பெங்களூரில் வணிகர் குலதிலகம்
மேற்படி சுவாமிகள் திருவடிக்கன்பருமாகிய
மஹா-ராஜ-ராஜ-ஸ்ரீ ம. அப்பாசாமி செட்டியாரால்
------------------------------------
பெங்களூர் தண்டு:
நேஷனல் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
பிலவ வருஷம் மாசி மாதம் 3
-----------------------------------
1902
(Copy Right Registered)


====================================================

இஃது
சென்னை வைசியவணிகர் குலப் பெரியதனக்காரரும், திருவொற்றியூர்
அகத்தீசுரர் தேவதான தர்மகர்த்தருமாகிய
ஸ்ரீலஸ்ரீ கோவளம் அப்பாசாமி செட்டியார் இயற்றியது

சிறப்புப்பாயிரம்.

வெண்பா

பொருணயமுஞ் சொன்னயமும் பொற்பு மிகுத் தோங்குந்
தெருணயமுங் காட்டிச் சிறக்கும் - அருணன்
றுதித்தனவி ராமலிங்க வொண்குருமேற் சாற்றும்
பதிற்றுப்பத் தந்தாதி பார்.

---------------------------------
திருச்சிற்றம்பலம்

நிலைமண்டில ஆசிரியப்பா

அருட்பெருஞ் சோதி யாந்தனிச் சிவமே
தொருட்பெரு முத்தருஞ் சித்தரும் வியப்புற
உலகின் மன்னுயி ருவப்புற மலவிருள்
விலகிக் கரந்திட விளங்குபவன் மதத்தரும்
சமரசச் சுத்த சன்மார்க்கத்தினை
யமைவுட னுணர்ந்தங் கபேத நலம்பெறத்
திருவருண் மேனி சிறந்துறக் கொண்டு
வெருவற மேதினி மேலவ தரித்தெனச்
செய்தவ மனைத்துந் திரண்டு வந்துற்றென
ஐதருள் விளங்க அவதரித்திட்டவன்
சற்குணக் கடலாய்த் தழைத்ததூயவன்
சிற்குணக் கடலுளந்தெளிந்து படிந்தவன்
தயவலா லொன்றைத் தானறியாதவன்
உயவெலாச் சமயத்துண்மை கண்டுணர்ந்தோன்
ஒழுக்க மென் பனவெலா முள்ளவாறடைந்தோன்
தன்னிளங்காலையிற் சரவணோற்பவனார்
இன்னருளெய்தினோ னிருந்தமிழ்க் குரிசில்
ஒற்றியம்பதியி லுமாபதிதன்னை
நற்றிடம் பெறவே நாடொறுந்துதித்துத்
திருவருள் விளக்கஞ் சிறப்பவாய்ந்தவன்
பொருவருந் தமிழ்நயம் புணர்ந்தநன்மதுரச்
செந்தமிழ் நிதியாந் திருவருட் பாவினைத்
தந்ததயாளன் தன்னிகர் நாவலன்
ஜீவகாருணியத் திறனெலாந்தெரித்தவன்
பாவகாரியக்கொலை பண்ணாதகற்றினோன்
இருட்பிரகாச மிலாவகைமுயன்ற
அருட்பிரகாச வள்ளலாயமர்ந்தவன்
உத்தரஞான சிதம்பரமுஞற்றிச்
சித்திகள் விளையுஞ் சிற்சபைகண்டவன்
பற்பலகாலைப் பத்தர்களுணர்ந்திட
அற்புதம்புரிந்தவ னகண்ட வியாபகச்
சச்சிதானந்தம் தானாய்விளங்கி
நச்சினார்க்கினிய நாயகமானவன்
என்றுலகேத்திடு மிராமலிங்காரியன்
குன்றுறழ் பொற்றோன் குலவுபேரணியெனப்
பதிற்றுப் பத்தந்தாதிப்பெயரிய பனுவலைத்
துதித்துச் சூட்டினன் சுகுணமிக்கவன்
நாற்கவிப்புலமை நண்ணிய நாவலம்
நூற்கடல் வரம்புதேர் நுண்ணறிவுடையோன்
சுத்தசித்தாந்த ரத்தினாகரமெனப்
பெற்றசிறப்புப் பெயரொடு திகழ்வோன்
சிரகிரிதனிலுஞ் சீரான்வாயிற்
புரியினும் வாசம் புரிதரு நலத்தினன்
என்மனக்கினிய வென்னருநண்பன்
தன்மனக்கலைப் பொருள் தமியேற்கீந்தே
இளமையினென்னுட னிருந்தமிழ் பயின்றவன்
உளமலியன்பு சிவத்திடையுய்த்த
தேங்கடமனைய செந்தமிழ் வாக்கின்
வேங்கடசுப்பென விளங்கு நற்சைவன்
அப்புவியமிழ்தெனச் செப்பின்னாக
இனையவன்றருநூ லினிமைநோக்கித்
தனைநிக ரிராமலிங் காரியன்றாண்மலர்
பத்திசெய்குநர் பயின்றருள் சார்ந்திட
மாநிலம்புகழ மண்ணூர்ப்பேட்டை
தானிடமாக்கிய சற்சனர் புகழும்
உத்தமன் தமிழ்நூ லுவப்பொடு கற்பவன்
வர்த்தகச்சிறப்பின் வைசியவணிகர்
தங்குலத்திலகன் பெங்களுரென்னும்
மங்களாகரமா மன்னுகல்யாண
புரத்தினில்வாழ்க்கை தரித்தவனப்பா
சாமிவேளன்பாற் றோமிலாவச்சிற்
பத்திது நறுந்தமிழ்ப் பாருளோரெவரும்
மதிக்கவழங்கினன் மாரிபோல்பவனே.

--------------------------------

இஃது
அருட்பெருஞ்சோதியாண்டவர் அடியார்க்கடியராகிய
பெங்களூர்
நாராயணசாமி செட்டியார் இயற்றிய,

வெண்பா.

வித்துவ சிகாமணியாம் வேங்கடசுப் பேந்த்ரனருட்
சித்த னிராமலிங்க தேசிகன்மேற் - சித்தமிகு
மன்பாற் பதிற்றுப்பத் தந்தாதி பாடினான்
இன்பா லதுகற்கண்டே.

-----------------------------------

No comments:

Post a Comment