Search This Blog

Friday, October 27, 2017

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - முதற்பத்து

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி நூலின் பழம்பதிப்பு (1902) வெளியீடு.

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************

காப்பு.

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

மேகம்போற் கருணைபொழி யருட்பிரகா சப்பெருமான் மிகுதிராட்சைப்
பாகம்போன்மெனவாறு திருமுறைசேர் திருவருட்பாப்பகர்செவ் வாயான்
மோகம்போக் கியராம லிங்ககுரு பரற்கணிவான் மொழியப்புக்க
சோகம்போம் பதிற்றுப்பத் தந்தாதிக் கானைமுகன் றுணைத்தாள்காப்பே.

சித்தர்குல சேகரனி ராமலிங்க தேசிகன்மேற் செவந்திமாலை
சுத்தமுறத் தொடுத்தணியும் பரிசெனச்செந் தமிழ்மொழியாற் றொடுத்துச் சாத்தும்
பத்திவிளை பதிற்றுப்பத் தந்தாதி பாகமுறப் பகர்தற் கன்னேன்
வைத்தருளும் பெருங்கருணை துணையாக வவன்மலர்த்தாள் வணங்கி வாழ்வாம்.

இந்தமிழ்தம்போலினிப்பாள் வெண்பளிங்குபோலுருவாளிசையார்சங்கச்
செந்தமிழ் தந்தொளிர் தருமான் வெண்கமலா சனச்செல்வி திருத்தமாக
நந்தமிழ்தண் கடனிகரும் பேரருள்செய் தெனதுசெந்நா நயந்திருந்தாள்
வந்தமித வருள்பொழியி ராமலிங்கதேசிகன்சீர் வழுத்தத்தானே.

***********************
 நூல்.

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

தேருர்ந்த மேருவலன் சூழ்தருமோர் செங்கதிர்போற் றிகழ்ந்து வற்றா
நீரூர்ந்த கடலுலகி லருட்கிரணந் தனைப்பரப்பி நெடியமூலக்
காரூர்ந்த குப்பாய நீக்கியருட் பெருஞ்சோதி காணக்காட்டுந்
தாரூர்ந்த வயங்கெழுதோ ளிராமலிங்க குருவடலூர்ச் சபைகண்டோனே. 1

கண்டாய்நீ வடலுறுசிற் சபையுளருட் பெருஞ்சோதி கண்டபின்னே
கொண்டாய்நீள்மோனபதங்கல்லாலின் புடையமர்ந்தோன்கோலம்பூண்டய்
தண்டாய்நீங்காத்தொழும்பருடனின்றாயெனையுனடித்தண்டேன்மாந்தும்
வண்டாநீர் மையனாகப் பணித்தியருட் பிரகாச வள்ள லானே.  2

வள்ளலாய் வடலூருள் வருவார்க்கு னருளமுதம் வழங்கா நின்றாய்
கொள்ளலாம் பரிபாக மின்மையினாற் பரிந்தேத்திக் கொளமாட்டாம
லெள்ளலா மலத்தழுந்தி மாழாந்தே னெனக்குமெந்தா யிரங்குவாயோ
பொள்ளலா மலவுடல்பொன் னுடலாக்கு மிராமலிங்கப் புனிதத்தேவே.  3

தேவேமெய்ஞ் ஞானவருட்பிரகாச வள்ளலெனத் திகழா நிற்குங்
கோவேயெண் குணமலையே வடலுறுசிற் றம்பலத்துட் குலவுஞானப்
பூவேயப் பூமணமே மணங்கமழ்செந்தேனேநின் பூந்தாட் கென்சொற்
பாவேறத்தொண்டுகொண்டாய்முன்னெதுமா தவம்புரிந்தேன்பாதகனேனே. 4

பதமலரைக்கும்பிடுவோர் குறிக்கொண்டு நாவாரப் பாடாநிற்போர்
நிதமலரைச் சொரிந்திடுவோ ரிதயமலர் மிசையிருத்தி நினையா நிற்போர்
மதமலரை நிகருமகத் தருக்கொழிந்தோர் தரிசிக்க வடலூர் வாயற்
புதமலர வருஞான சித்தசிகா மணியேயொற் புரந்தாள் வாயே.  5

புரப்பாயிச் சிறுநாயேன் றனையெனநின் மலர்ப்பாதம் போற்றா நின்றேன்
இரப்பாருக் கிரங்குநர்போ லெனக்கிரங்கி யருள்புரிய வெண்ணுகண்டாய்
வரப்பாவ லோர்வணங்கத் தக்கவருட் பிரகாச வள்ள லேபுன்
னிரப்பாலெய்த் தவர்க்கருளுங் கற்பகமே யிராமலிங்க நிமலவாழ்வே. 6

வாழ்வனைத்து நின்மலர்க்கட் கடைநோக்கா லன்பர்பெற வழங்கி யன்னார்
தாழ்வனைத்து மவர்பகைவர் தமைச்சாரப் புறம்போக்குந் தயவு ளானீ
சூழ்வனத்து வடலூருட் கதிர்மதிதீ மண்டலத்துட் சோதிபோலூழ்
போழ்வனப்புத் திகழ்தரவாழிராமலிங்கா ரியநின்றாட் புகல்புக்கேனே. 7

புகன்றார்க்குன் சீர்நினைப்பார்க் கருள்காமதேனுவெனப் பொலிந்துளாய்நீ
யிகன்றார்முன்னெனைப்பாதுகாத்தருளும்பெருந்துணை நீ யெனவடைந்தே
னகன்றாழ்ந்தவருட்கடலே வடலுறுசிற்சபைமருவு மருட்சோதிக்கோர்
மகன்றானென் றெணவிளங்கு மிராமலிங்ககுருவேகண் மணியன்னானே. 8

அன்னையொப்பாயத்தனொப்பாயிருநிதியம்போல்வாய்நின்னடியனேற்கோர்
மன்னையொப்பா யுனதுதிரு வடித்துணையே புகலாக வழிபாடாற்று
மென்னையொப்பாருணர்வில்லார் பிறருளரோ வெனையுனருட்கிலக்காவைப்பாய்
பொன்னையொப்பா யருட்பெருஞ்சோதியைப்போற்று மிராமலிங்கப் புலவரேறே.9

புலவர்புகழ் சைவநெறிக் குரவரொரு நால்வர்பதம் போற்றி யன்னார்
நிலவுபெருங் கருணைதனக் கிலக்காகிப் பரம்பரன் சீர்நிகழ்த்தி நின்றாய்
மலவலிநீத் தருள்வலிபெற் றெல்லாஞ்செய் வல்லசித்தாய் வடலூர்வாழுங்
குலவரையே யிராமலிங்க குருமணியே குறைதவிர்த்தாட்கொள்ளு வாயே. 10 

No comments:

Post a Comment