வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் அல்லது வள்ளலார் பிள்ளைத்தமிழ்: மா.க. காமாட்சிநாதன்
பிள்ளைத்தமிழ் அறிமுகம்:
தமிழ்ச் சிற்றிலக்கியங்களிலே தலையாயது பிள்ளைத் தமிழ் என்பர். பிள்ளைத் தமிழ் இலக்கியம் தமிழுக்கே உரியதென்றும், இது பிறமொழிகளில் காணப்படாத ஓர் இலக்கியவகை என்றும் இதன் தனிப்பெருமையை எடுத்துரைப்பார் அறிஞர் மு. வரதராசனார். பிற சிற்றிலக்கிய வகைகளைவிட எண்ணிக்கையிலும் இப் பிரபந்தம் மிகுதியாகவே காணப்படுகிறது. இன்று கிடைக்கக்கூடிய பிள்ளைத் தமிழ் இலக்கியங்களைக் கணக்கிட்டால் ஐநூறுக்கும் மேல் இருக்கலாம்.
தமிழில் முதன் முதல் எழுந்த பிள்ளைத் தமிழ் இலக்கியம், சோழர்காலப் பெரும்புலவரான ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் ஆகும். ஏறத்தாழ கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த நூல் இது. இதற்குப்பின் வந்த இலக்கண நூல்களிலும் பாட்டியல் நூல்களிலும் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் இலக்கணம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 'கடவுளரையேனும் ஆசிரியரையேனும் உபகாரிகளையேனும்' குழந்தையாக வைத்துக் காப்பு முதலிய பத்துப்பருவங்கள் அமைத்து ஆசிரிய விருத்தம் என்னும் பாவகையால் பாடுவது பிள்ளைத் தமிழ் ஆகும். அது ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படுகிறது.
பிள்ளைத் தமிழில் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை அல்லது வாரானை, அம்புலி ஆகிய பருவங்கள் இரு பாலார்க்கும் பொதுவானவை. ஆண்பாற் பிள்ளைத் தமிழில் இறுதியாக, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்கள் காணப்படும். பெண்பாற் பிள்ளைத் தமிழாயின், கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் பருவங்கள் காணப்படும். செங்கீரை, சப்பாணி போன்ற சொற்களுக்குப் பலவித அர்த்தங்கள் தரப்படுகின்றன.
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் அல்லது வள்ளலார் பிள்ளைத்தமிழ்:
மேற்க்கண்ட வண்ணம் "திருஅருட்பிரகாச வள்ளலார்" என்றும் இராமலிங்க அடிகள் என்றும் மக்களால் அழைக்கப்படும் வடலூர் வள்ளல் பெருமான் மீது பல்வேறு அன்பர்களும் பிள்ளைத் தமிழ் இலக்கியம் பாடி உள்ளனர், அவற்றில்
1. வள்ளலார் பிள்ளைத்தமிழ் = வள்ளல் பெருமானின் மாணக்கர் பென்னேரி சுந்தரம்பிள்ளை பாடியது(நூல் கிடைக்கவில்லை)
2. வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் = புலவர் மா.க. காமாட்சிநாதன் பாடியது (இங்கு முழு நூலும் தரப்பட்டுள்ளது)
3. திருஅருட்பிரகாச வள்ளலார் பிள்ளைத்தமிழ் = கலைமணி பாசி என்பர் எழுதியது (இனி வெளிவரும்)
இங்கு மேற்சொன்ன இரண்டாவது நூலாகிய வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் = புலவர் மா.க. காமாட்சிநாதன் பாடியது குறித்து விளக்குவதே இத்தொகுப்பு.
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் = புலவர் மா.க. காமாட்சிநாதன்:
புலவர் மா.க. காமாட்சிநாதன் எழுதிய இப்பிள்ளைத்தமிழ் பெரும்பாலும் இலக்கிய உலகினரால் நன்கு அறியப்பட்ட நூல் ஆகும், நூலின் காணப்படும் பருவமும் பாடல் எண்ணிக்கையும் வருமாறு:
1. செங்கீரைப்பருவம் = 10 பாடல்கள்
2. தாலப்பருவம் = 10 பாடல்கள்
3. சப்பாணிப்பருவம் = 10 பாடல்கள்
4. முத்தப்பருவம் = 10 பாடல்கள்
5. வருகைப்பருவம் = 10 பாடல்கள்
6. அம்புலிப்பருவம் = 10 பாடல்கள்
7. சிற்றிற்பருவம் = 10 பாடல்கள்
8. சிறுபறைப்பருவம் = 10 பாடல்கள்
9. சிறுதேர்ப்பருவம் 10 பாடல்கள்
இன்னூல் இலக்கிய சிறப்போடு, வள்ளல் பெருமானின் வாழ்வியலையும், திருஅருட்பாக்களை மேற்க்காட்டுயும் சிறப்பாக எழுதப்படுள்ளது. நூல் முழுவதையும் அன்பர்கள் படித்து பயன்பெற இங்கு தந்துள்ளோம்.
சன்மார்க்க அன்பர் திரு மூ.பா. அவர்கள் "வள்ளலார் துதி" என்னும் நூலில் வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நூல் வேண்டிய அன்பர்கள் அவரிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
படித்து அருள் நலம் பெருக!
- ஆனந்தபாரதி
No comments:
Post a Comment