3. சப்பாணிப் பருவம்:
பாடல் 1:
கரையிலா இன்பவா ரிதியிற் குளித்துயிர்
களுக்கன்பி லாதசமயக்
காடுகளை யறவழித் துச்சைவ நெறியாங்
கவின தருவ னூடுபோகிப்
பரவுவே தாகமத் தொலிமன யிரட்டுறப்
பண்ணொடன் புங்கலந்த
பாடல்சால் முத்தமிழ் மதம்பொழிந் தறுவகைப்
பகையரண் சிதைய நூறிப்
பரவெளியில் நாதயாழ் ஒலிசெவிப் படவுலாய்ப
பசுபேத மாம்பாடூப்
பசுரொன் றிரண்டாம் படித்தலாச் சிவபோக
பாற்கவளம் உண்டுதேக்கித்
தருதலைவன் அடிமலர்ச் சேர்கைகொள் சிவக்களிறு
சப்பாணி கொட்டியருளே!
தன்னேரி லாவருட் பிரகாச வள்ளலே
சப்பாணி கொட்டியருளே!
பாடல் 2:
ஒன்றினொ டொன்றிரு திங்கள் கடந்திட
உறுமக வாகியபோ
துந்தையு மம்மையு முந்திந டந்துனை
ஒண்கர மேந்திடவே
அன்றவண் நின்றவர் இன்றிஃ ததிசயம்
அதிசய மென்றிடவே
அரகர சிவசிவ நமவென முனிவரர்
அகமுக மலர்ந்திடவே
என்றென நின்றொளிர் மன்றினி லன்றிறை
எழின்மிகு மொளிகண்டே
இதய மலர்ந்திட முகமும லர்ந்திட
எமதிரு வினையான
குன்றற நின்றுகை கொட்டிந கைத்துவ
கொட்டுக சப்பாணி
குலவும் அருட்பிரகாசப் பெருமலை
கொட்டுக சப்பாணி.
பாடல் 3:
பொங்கிடு மின்பந் தங்கிடு சொல்லணி
பொருளணி கள் பலவும்
பொற்புட னிற்பநி றைந்தசெ ழுஞ்சொல்
பொதிந்த அருட்பாடல்
மங்கல மொழியே எங்கும் நிறைந்திட
வந்ததி ருப்பாடல்
வாக்கிது போலினி துண்டுகொ லோவென
வந்தித் திடுபாடல்
துங்க மிகுந்தவர் உள்ளுதொ றின்பந்
துள்ளுத மிழ்ப்பாடல்
சொன்னவ ருள்ளத் தின்னலொழித்துச்
சுகமே தருபாடல்
கொங்குல வும்பா மழைபொழி கொண்டல்!
கொட்டுக சப்பாணி!
குலவும் அருட்பிர காசப் பெருமலை
கொட்டுக சப்பாணி.
கொங்கு = இனிமை, தேன், மணம்
வேறு
பாடல் 4:
தண்டமி ழமர்ந்திடுஞ் சான்றோர் இருந்துவச்
சபையூ டெழுந்தஐயம்
சாமிநீ தீர்த்திடத் தக்கதென் றேத்திட
தக்கநற் சான்றுகாட்டித்
தொண்டமண் டலமென்று கண்டவர் வியந்திடத்
தொல்காப்பியத் திருந்துந்
தோன்றுநூற் பாசொல்லி யூன்றிவைத் தப்புலவர்
தோத்திரம் பெற்ற பெரும!
மண்டலந் தன்னிலுயர் அண்டரென நிற்பினும்
மக்களைப் பாடிடாத
மாண்புடைய மாகவி, மாதேவன் வார்கழல்கள்
மறவாத சிவயோகிநீ
தண்டையணி காலசைத் தெண்டிசை மகிழ்ந்திடச்
சப்பாணி கொட்டியருளே!
சமயங் கடந்துவளர் சன்மார்க்க தேசிக
சப்பாணி கொட்டியருளே!
பாடல் 5:
அம்பலவர் அருளினால் ஆகந் தரித்துவந்
தான்மாக்கள் ஈடேறிட
அகரவா காரவொலி முதலெழுத் தாறைந்தும்
அண்ணான ரறிவித்தபோல்
இம்பருல குள்ளகலை யெல்லா முணர்ந்தறிந்
தேதுமறி யாதமகனா
ஏவரு நினைத்திடத் தமையனார் சொற்பொழிவில்
ஏடுவா சிப்பவரெனா
நம்பிடந டித்துவரு நாளிலொரு நாளந்த
நல்லவையி னடுவுநின்ற
நாவலர்பி ரானருண் மொழித்தேவ னார்சொன்ன
நற்றொண்டர் வரலாற்றினில்
சம்பந்தர் மாட்டியை விரித்துப் புகல்பெரும
சப்பாணி கொட்டியருளே!
சமயங் கடந்துவளர் சன்மார்க்க தேசிக
சப்பாணி கொட்டியருளே!
ஆகம் = உடம்பு, அருண்மொழித்தேவர் = சேக்கிழார்
பாடல் 6:
சொல்லெலாம் நிறைசெழுஞ் சொல்லா இலங்கிடத்
தோற்றுந் தொடக்கம்யாவும்
தூயநன் மங்களச் சொற்களாய் நின்றிடச்
சொல்லித் துதித்தபேர்தம்
இல்லெலாம் நிறைசெழும் பொன்னாய் விளங்கிட
எண்ணுவோ ரிதயமெல்லாம்
இறைநலங் கனியுமொரு பேரிரக் கந்தோன்ற
இருந்துசற் றேகேட்டிடில்
கல்லெலாம் உருகிடுங் கனிவது திகழ்ந்திடக்
கண்கள்நடு வூடிருந்து
கன கசபை யாடலைக் காண்மினென நல்லருட்
கவிகளாற் காட்டுவித்துச்
சல்லெலாம் மாற்றவரு வள்ளலார் பெருமநீ
சப்பாணி கொட்டியருளே!
சமயங் கடந்துவளர் சன்மார்க்க தேசிக
சப்பாணி கொட்டியருளே!
சல் = வீண்வாதம், துன்பம், பொய்
பாடல் 7:
புவியெலாம் போற்றிடும் பொன்னருட் பாவெனும்
பொதுமறையை எம்மறிவினால்
புக்குத் திளைத்திளைத் தாராய முற்படுதல்
பொன்மேரு கிரியினளவாய்
அவியளைந் தேற்றியுள சர்க்கரையை யோரெறும்
பாவலொடு முற்பட்டுநின்
றளந்திடுத லொக்குமென் றறிஞர்புகல் வாரஃ
தறிந்துளோம் அஃதன்றியும்
நவில்தொறும் நூல்நயம் மிகுமென்று வள்ளுவர்
நன்மொழியு முண்டாதலால்
நாவலர் பெருமநின் சொற்படி நடப்பதே
நங்கள்கட னென்று கொண்டேம்
தவறுதல் வந்திடா தடியேமு முய்ந்திடச்
சப்பாணி கொட்டியருளே
சமயங் கடந்துவளர் சன்மார்க்க தேசிக
சப்பாணி கொட்டியருளே.
புவி = உலகம், புக்கு = புகுந்து, அவி = நெய்
பாடல் 8:
கானலிடை நீரெனத் தோற்றுமொரு ஞாலமிது
கண்டுள மயங்குவதுவீண்
காணென வுணர்த்துநின் பேரருட் பாவினைக்
காழ்ப்புடைய சிற்றறிவினோர்
மானமிகு பாடலிஃ தன்றருட் பாவெனும்
மாட்சியுமி தற்கொவாது
வாதமிட வருகவென நீதிமன் றத்தினில்
வழக்கிட் டிழுத்தபோழ்தில்
ஆனபெரி யோர்மனம் புண்படா வாறந்த
அவையூடு நீதோன்றியே
ஆண்டமர்ந் தோரெலாம் ஈண்டியிரு கைகுவித்
தஞ்சலித் தேத்தவாதைத்
தானமதி லேவென்ற மோனபர ஞானியே
சப்பாணி கொட்டியருளே!
சமரச முணர்த்திடுஞ் சன்மார்க்க தேசிக
சப்பாணி கொட்டியருளே!.
மானம் = பெருமை, தகுதி. வாதை = வழக்கினை
பாடல் 9:
பற்றுவது பந்தமப் பற்றறுதல் வீடிஃது
பரமவே தார்த்தமென்று
பணிபினோடு நீசொலும் பாங்கினையு ணர்ந்துலகு
பரமசுகம் எய்தவொரு நாள்
தெற்றுகட லுலகினிற் றிரிசிரா புரம்வரும்
தேசிகர் மாவித்துவான்
திருவாளர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைநின்
திருவருட் பாவைவாங்கி
ஒற்றியிரு கண்ணிலும் உச்சிமிசை வைத்திதனை
யோதுவது சாலநன்றாம்
உரைசொலற் கெம்போல்வ ரெத்துணைய ராவரென
றுற்றுரைத் தேத்துமாறு
சற்றுமயர் வற்றுநல முற்றவுயர் நற்றவா
சப்பாணி கொட்டியருளே!
சமரச முணர்த்திடுஞ் சன்மார்க்க தேசிக
சப்பாணி கொட்டியருளே!
பாடல் 10:
கண்ணுதற் கடவுளாய் வந்தருள் புரிந்துசிற்
ககனவெளி தன்னை நோக்கி
கன்னித் தமிழ்ப்பதத் துன்னித்தி ளைத்திடுங்
கட்டழ கிருந்துகொஞ்ச
விண்ணப்ப மென்றுகலி வெண்பா வுரைத்ததனில்
மேன்மைசால் பதிகள்யாவும்
மிக்கொளி ரியற்கையுந் தக்கதல மாட்சியும்
விரித்துப் புகன் றபுலவ!
நண்ணுதற் கரியபர வேதாந்த சித்தாந்த
நாதாந்த போதாந்தமும்
நற்கலாந் தத்தொடு யோகாந்த முந்தாண்டி
நவநிலை யடைந்தமுனிவ!
தண்ணளி மிகுத்தெமக் கண்ணித் துரைபெரும
சப்பாணி கொட்டியருளே!
சமரச முணர்ந்திடும் சன்மார்க்க தேசிக
சப்பாணி கொட்டியருளே.
No comments:
Post a Comment