வருகைப் பருவம்:
பாடல் 1:
கண்ணே வருக! கண்மணியே
வருக! கலைச்செல் வாவருக!
கருதற் கெட்டாச் சிவஞானக்
கனியே வருக! தமிழ்மணந்த
பண்ணே வருக! பண்ணின் விளை
பயனே வருக! சுவைமுதிர்தீம்
பாகே அமிழ்தே வருக! அன்பாம்
பண்ணே இன்பே வருக! பர
விண்ணே வருக! பத்திநெறி
வித்தே வருக! பிறவியற
வீட்டு நெறியைக் காட்டுமணி
விளக்கே வருக! தமியேங்கள்
உண்ணே ராவி யினுமினிக்கும்
ஒருவா வருக வருகவே
ஒப்பில் வடலூர்க் குருபரனே
உவந்து வருக வருகவே
பாடல் 2:
தொன்மைப் புலவோ ரிதுவரையும்
சொல்லற் கரிய வொரு நூற்றுத்
தொன்ணூற் றிரண்டு சீர்கொண்ட
தூய செய்யுட் செய்தருளி
முன்வைப் படியாய் வடநூலில்
முழுங்கும் மறையை முழுதாக்கி
மூன்றி லொருபங் குத்தமிழை
முதலுக் கயலாம் படியாக்கி
பொன்வைப் பனைய தமிழ்மூன் றாய்ப்
பொதிந்து மூன்றாம் அடியினிலே
பொருந்து நான்கே தமிழ்முழுதாய்ப்
புகன்ற புகழ்ச்சிப் பாட்டினிலும்
நன்மைக் குரிய தமிழ்ப்பெருமை
நவின்றோய் வருக வருகவே
நலமார் வடலூர் வள்ளல்குரு
நாதா வருக! வருகவே!
பாடல் 3:
தமக்குத் தெரியா ஒருநிலையுந்
தாரணி தன்னில் இலையென்று
தருக்குந் தருக்கே மனிதரது
தரமாய்ப் பலரும் அமைந்திருக்க
கமைக்கிங் கிடமாய் எழுந்தருளிக்
கடவுள் செயலும் புரிந்தருளிக்
காயம் விழா தொளியாக்குங்
கடின வழியைக் கைக்கொண்டும்
எமக்குத் தெரியா நிலையெல்லாம்
எளிய வழியில் எடுத்தீந்தும்
எல்லாம் இறைவன் திருவருளால்
இயல்வ தாகும் இதுவன்றி
நமக்குத் தெரியா தெதுவுமென
நவில்வோய் வருக வருகவே
நலமார் வடலூர் வள்ளல்குரு
நாதா வருக வருகவே
கமை = பொறுமை, அடக்கம்
பாடல் 4:
கற்றோர் கல்வி யறிவுகொடு
காணற் கொண்ணாப் பேரறிவும்
கல்விக் கடலின் நிலைகட்கோர்
கரைகண் டுணருஞ் சீரறிவும்
உற்றோர் பெரிய முனிவரென
உரைத்த கீரன் வாக்கிற்கே
ஒருசான் றாகத் திகழ்கின்றோய்
உண்மைப் பொருளைப் புகழ்கின்றோய்
மற்றோர் சொல்லேன் மாதேவ
மாலை யொன்றே சாலும்மே
மாண்பும் நோன்பும் மிக்கோயெம்
மட்டாற் சொல்லற் கேலும்மே?
அற்றோர்க் கெல்லா முற்றோயெம்
ஐயா வருக வருகவே
அருள்சேர் வடலூர் அப்பாஎம்
அன்பே வருக வருகவே!
பாடல் 5:
சீரார் புகலிச் சம்பந்தர்
செப்புங் கருணை மொழிதன்னைச்
சிறந்த குருவின் மொழியென்று
தெரிந்து கொண்ட நூலோனே
பாரார் போற்ற எங்கெங்கும்
படர்ந்த பற்பன் மொழியுள்ளும்
பாரித்துளநற் கலையெல்லாம்
படியா துணரும் மேலோனே
வாரார் கொங்கை மடவார்தம்
மையல் ஒழித்த வழிதன்னில்
வளருங் கற்ப நெறிநன்கு
வரவும் பெற்ற பெரியோனே
ஏரார் வடலூர் வருவள்ளால்
எம்மான் வருக வருகவே
இரக்க மேதன் உருவான
இறைவா வருக வருகவே!
பாடல் 6:
உடம்பும் பிறர்க்குத் தெரியாமல்
ஒளித்து மறைத்துக் கைகட்டி
உயிர்க்குச் தேதம் வாராமல்
உருகி ஒதுங்கி ஓரமதாய்
நடந்த பொழுதில் அடிநிழலும்
நண்ணு நிலத்தில் தோயாமல்
நாரா முள்ளும் நீராறும்
நடுவே துந்தடை யாகாமல்
கடந்து சென்றோய்! சித்தாடல்
காலத் தைவீண் ஆக்கலொடு
கலையே நிலையென் றெண்ணுதலுங்
கடையென் றெள்ளிக் கடவுணிலை
அடைந்து நின்ற வடலூரெம்
ஐயா வருக வருகவே
அன்பின் விழையும் மன்பதைகட்
கருள்வோய் வருக வருகவே.
பாடல் 7:
பேசத் தகுமொழி மூவா யிரமிப்
பேருல கினிலுளவே
பேரரு ளாளர்க ளவையுணர் வாரது
பேதையர் தாமறியார்
ஏசற் றொருநான் மொழியறி சிறியவர்
ஏதே தோவினவி
இன்னல்விளைத்திட எண்ணிநின் எதிரே
இறுமாப் புடன்வரவும்
கூசுற் றொருசிறு பாலனை யவரெதிர்
கூஉய்வைத் துக்கேட்க
குலவிடு மாறேழ் மொழியறி வேனெது
கொள்ளினுங் கொள்ளுகென
வாய்செற் றழுதனர் வந்தவ ரதனால்
வரமருள் புரிகுருவே
வள்ளலெ னச்சொலும் வடலூர் மணியே
வந்தருள் வந்தருளே.
கூஉய் = அழைத்து
வேறு
பாடல் 8:
செந்தா மரைச்செல்வி செந்தமிழ்ச் செல்வியொடு
சேரத்து தித்துநிற்கத்
திருவொற்றி யூரில்வளர் வடிவாம்பிகை கைத்தேவி
திருவுள மிரங்கிவந்து
பைந்தா மரைத்தளிரில் இந்தாரும் அமுதொத்த
பாலன்ன மதனையீந்து
பசியோ டிருப்பதே னுண்டிடுக எந்திருப்
பாலனே யென்று சொல்லித்
தந்தா மரைக் கைகொடு முகமுதுகு தைவந்து
தண்ணளியுபு ரிந்த போழ்தில்
தாயுவந் தீந்ததென நீயுவந் துண்டுநற்
றமிழ்மாலை செய்தளித்தாய்
வந்தாரை யீடேற்ற வல்லவட லூர்வள்ளல்
வருகசற் குருவருகவே
வையமுய் யச்செய்ய வழிசொல்லு மையனீ
வருகசற் குருவருகவே!
பாடல் 9:
தில்லைப் பெரும்பதியி லன்றுநிக ழாதிரைத்
திருவிழாக் காட்சிகாணத்
திரண்டுவட லூர்வந்த அன்பர்கட் காங்கொரு
திரைச்சீலை தன்னிலந்த
எல்லைப்பெ ரும்வெளி யிலானந்த நிர்த்தமிடும்
இறையவன் மாட்சிதோன்ற
இனியபல காட்டியுங் காட்டிடக் கண்டவர்கள்
இன்பமய மாகிநின்று
தொல்லைவினை தீர்ந்தெங்க ளையனே அப்பனே
தோன்றிவரு மெம்ஆண்டவ
துரியவெளி நடுநின்ற பெரியபொருள் கண்டவ
ஜோதிமந் திரம்விண்டவ
வல்லையென் றேத்திட; ஒன்றுமறி யார்போன்று
வாருங்கள் போதுமென்று
வாய்மலர் திருவருட் பிரகாச வள்ளலே
வந்தருள்க வந்தருள்கவே!
பாடல் 10:
ஏழைக்கி ரங்கிநா டோறும்ப கிர்ந்தீயும்
இன்னடிசி லாக்கவொருநாள்
எப்பொருளு மில்லையால் என்செய்வோ மென்றவண்
இருந்தவர் புலம்பிநிற்க
மாழைக்கி ரங்கிடேல் வேண்டியன இறையருள்
வலத்தாற் கிடைக்குமென்று
மவுனமாய் நீயன்று நிட்டைசா தித்தபின்
மாட்டுவண் டிகடம்மிலே
வாழைக்கு ருத்தினொடு காயரிசி பொருளெலாம்
வந்துவந் தேயிறங்க
வருமவரை நின்றவர்க ளீதா ரளித்ததென
வள்ளலா ருத்தரவினால்
தாழைத்தி றந்தெமது தலைவர்தர வந்ததென;
தாள் பணிந் துலகமேத்துந்
தங்கமே குருராம லிங்கமே நின்னருள்
தந்தருள வந்தருள்கவே.
மாழை = பொன், பொருள்
No comments:
Post a Comment