- செங்கீரைப்பருவம்:
பிள்ளைத்தமிழ்ப் பருவம் பத்தனுள், குழந்தை பிறந்த ஐந்தாம் மாதத்தில் தன் தலையை நிமிர்த்து இங்குமங்கும் அசைத்தாடுவதைச் சிறப்பித்துக்கூறும் பகுதி செங்கீரைப் பருவம் ஆகும், வள்ளலார் பிள்ளைத்தமிழில் பத்து பாட்டுகள் இப்பகுதியில் அமைந்துள்ளது,
1 முதல் 6 பாடல்கள் "ஆடுக செங்கீரை" என்றும் 7 முதல் 10 பாடல்கள் "செங்கீரை ஆடிஅருளே" என்றும் ஈற்றடி நிறைவுருகின்றன். பல திருஅருட்பாக்களும் இங்கு பாடல்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. படிக்கவும் எண்ணி இன்புறவும் சிறந்த அடிகள் பலவற்றை இப்பகுதி கொண்டுள்ளது.
பாடல் 1:
முழுமதி புரைதரு திருமுக மண்டில
முன்றிற் சுற்றுசடை
முயலுறு கறையினை மானப் புன்னகை
முகிழ்செய் கனிவாயின்
எழுதொறும் உமிழ்நில நினிலரு குறுமிருள்
எங்குமி ரிந்தோட
இன்பச் சிவஞா னத்தேன் ஒழுகுவ
தெனவாய்க் கடையூறல்
பொழியப் பரமா னந்தக் கடலில்
பொற்புற மூழ்குதலைப்
போலுடல் வளைய இனிப்பிற வாவிப்
புவிகடை முறை நோக்கி
அழிவற உயிர்கட் கொளிவரு கருணையன்
ஆடுக செங்கீரை
அன்புத தும்பிவ ழிந்திடு பாவலன்
ஆடுக செங்கீரை.
புரை தரு = ஒப்பான
மான = ஒப்பாக
பாடல் 2:
நன்றிய தில்லா நவையுடை யுலகர்
நட்பினை யுள்ளாமே
நகையொளிர் முத்தம் பொன்மணி பொருள்மேல்
நசையது கொள்ளாமே
குன்றையெ றிந்து கொன்றவன் அடியைக்
கூடிப் பிரியாமே
குலவுத மிழ்க்கவி கூறும் இலக்கணக்
கோடது கோடாமே
கொன்றை அணிந்து நின்றதோர் குன்றக்
குவடது வெம்பாமே
கொண்டலெழுந்து கொட்டுவ தென்னக்
கொட்டும் அருட்கவியே!
அன்றொடு மின்றும் என்றும் இருப்பவன்
ஆடுக செங்கீரை
அருள்வட லரசே பொருள் தருமணியே
ஆடுக செங்கீரை.
கோடாது கோடாமே = வாம்பு கடவாமல்
நசை = விருப்பம்
பாடல் 3:
சங்கமி ருந்துவ ளர்ந்த தமிழ்க்கவி
தருமுயர் இன்பமெலாம்
சாரநி னைந்திடில் வாருமி தோவெனத்
தழுவியு ரைப்பதுபோல்
இங்கித மாலை என்றொரு நூலையி
யற்றிஅ தன்கண்ணே
இலகும் கச்சுவை பொதுளநி றைத்துடன்
இறைநல மதுதுள்ள
தங்குமி ரண்டிரு கேள்விக ளுக்குந்
தகுமொரு சொல்லில்இறை
தரவுரை வல்லவன் கரவுரை யில்லவன்
தடைநட வாதென்றோன்
அங்கொடு மிங்கும் எங்கும் இருப்பவன்
ஆடுக செங்கீரை
அருள்வட லரசே பொருள் தரு மணியே
ஆடுக செங்கீரை.
இறைநலம் = பேரின்பம், இரண்டிரு கேள்வி = நான்கு கேள்வி
இறைதா = விடை கொடுக்க, கரவுரை இல்லவன் = வஞ்சனைப் பேச்சு இல்லாதவன்
பாடல் 4:
தூய்மைமி குந்திடு மேன்மைபொ ருந்திய
தொல்காப் பியநூலின்
சொன்மர புக்கொரு தன்மையி லக்கது
தோன்றிடு மாப்போல்,
சேய்மைக டந்தவர் நோய்மையொ ழிந்தவர்
சேடார் வளமென்றே
திகழுவெ டுத்தொரு கோடா கோடி
திருவளர் தாமரையாம்
தாய்மையும் வந்திடு தாமரை நூறொரு
சங்கம் தாயிடுமாம்
தாதா தாமுத் தாவெனின் மூன்று
தந்ததி முத்தியதாம்
ஆய்கவிவ் வாய்மையை என்றுபு கன்றவன்
ஆடுக செங்கீரை
அருள்வட லரசே பொருள் தரு மணியே
ஆடுக செங்கீரை.
சேய்மை = தூரம், பிள்ளைமை
நோய்மை = பிணி
பாடல் 5:
தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்
செய்ததி ருக்குறளில்
திகழ்துற வுக்கரு ளுடைமையை முதலார்
செய்துதொ டுத்தனரால்
உய்வகைத் தருமத் துறவுக் குயிலாம்
உயர்பே ரிரக்கமதே
உடலுயி ராதிய னைத்தும் எனக்கொண்
டுலவிடு திருவுருநீ
மெய்மைத் தகுறட் கிலக்கியம் நீயெனல்
மிகைபடு சொல்லன்றே
மேலுற நோய்பவர் காலனு தைப்பது
மெய்யெனல் பொய்யலவென்
றைவைத் திடுவெம் மரணமொ ழித்தவன்
ஆடுக செங்கீரை
அருள்வட லரசே பொருள் தரு மணியே
ஆடுக செங்கீரை.
பாடல் 6:
பகுதி தகுதி விகுதியெ னும்வாய்
பாடொரு மூன்றினிலே
பகுதிப சித்திரு தகுதித் தனித்திரு
விகுதிவி ழுத்திருவாம்
இகலற நடுவிலி ருக்குங் குவ்வை
இரட்டித் தறுகாக்கி
ஈசற் கணியிற் பதவியும் முத்தியும்
எய்துவ தாமெனவும்
தகுதிமி குத்திடு தாவேழ் எழுதித்
தலையிலெ ழுத்தெனவும்
தாதா வென்பது வள்ளல டுக்குத்
தருமிரு பொருளெனவும்
அகவுட னுரை தருபோதன சைந்திங்
ஆடுக செங்கீரை
அருள்வட லரசே பொருள் தரு மணியே
ஆடுக செங்கீரை.
பாடல் 7:
எவ்வுயிரும் பொதுவென்றும் பொதுவென்ப
திறைதங்கும் இடமா மென்றும்
எண்ணியறிந் தவ்வுயிர்கள் இதம்பெறவே
நலம்புரிவார் எவரோ அந்தச்
செவ்வியரே நாம்வணங்குந் தெய்வமவர்
செய்பணியே சிறந்த தென்றும்
திரை கடல்சூழ் வையமெனத் தேவருறை
வானமெனச் செப்பா நின்ற
அவ்வியலாம் பலகோடி அண்டமெலாம்
இறைவர்திரு வடியி லுற்ற
அணுத்துகளென் றகெனவும் அறிவித்த
பெருங்கருணை அமுதே ஞானத்
திவ்வியமா முனிவர்தொழுந் திருவருட் பிரகாச
செங்கீரை ஆடியருளே
சிதம்பரந் திருராம லிங்கநற்றேசிக
செங்கீரை யாடியருளே.
பாடல் 8:
ஒருமைமன தாகியே வழிபா டியற்றுவோர்
உத்தமர்க ளாவரவர்தம்
உறவுகொளல் வேண்டுமஃ தல்லாத பேர்களுற
வுறுதலே கூடாதென
அருமைபெறு பெரியார்த் துணைக்கொள்க சிற்றினம்
அஞ்சுதல் செய்கவென்றே
அரியமறை வாய்மையை எளியமுறை யாகயாம்
அறியத் தெரித்தலுடனே
மருவுதல் தொழிலெனும் வரைவிலா மகளிர்தோள்
மருவவிழை யாமைவேண்டும்
மனமுடல் பிணியற்று மதிநலம் பெற்றருள்
மன்னிடப் பெருகவென்றோய்!
திருவுமிக மொற்றிவரு திருவருட் பிரகாச
செங்கீரை யாடியருளே
சிதம்பரந் திருராம லிங்கநற்றேசிக
செங்கீரை யாடியருளே.
பாடல் 9:
திருவருளு மருதூரில் இராமையா பிள்ளையவர்
செய்திருப் பணியினாலும்
செந்தமிழ் நாடுமெஞ் சின்னம்மை யார்செய்த
தெய்வநன் நோன்பினாலும்
உருவளரும் உலகுயிகள் ஆற்றுந்த வத்தாலும்
ஊனுடம் பேந்திவந்தே
ஒளியுடம் பாக்கியிவ் வுலகெலாம் உய்ந்திட
உயர்வழியெ லாம் உரைத்தாய்
கருவளரும் வழியொழிய எண்ணிமனம் நையுமவர்
கண்ணினீர் தன்னின் மூழ்கிக்
கருணையொடு தோன்றிநின் றஞ்சிடே லென்றுகை
காட்டுங் கருணை வடிவே
தெருவளருஞ் சென்னைசேர் திருவருட் பிரகாச
செங்கீரை யாடியருளே
சிதம்பரந் திருராம லிங்கநற் றேசிக
செங்கீரை யாடியருளே.
பாடல் 10:
மகமெலாஞ் செய்யினும் மாதிரஞ் சுற்றினும்
மாகமே போய்மீள் கினும்
மாநிலந் தன்னில்வரு மக்களை மாற்றுவோர்
வல்லமை காட்டினாலும்
அகமெலாம் நெக்குநெக் குருகியரு ளேத்திடும்
அன்பிலா துயிருடம்மை
அறுத்துப் புசிக்குங் கருதுடைய னாவனேல்
அவன்ஞானி யாகானென!
உகமெலாம் நின்றிடத் திருவருட் பாவெனும்
ஒண்மறை தீட்டியதனுள்
ஒருநூறு குறையநா லாயிரம்(3900) முறையருள்
ஒலித்திடச் செய்தபெரியோய்
செகமெலாம் போற்றிடுந் திருவருட் பிரகாச
செங்கீரை யாடியருளே
சிதம்பரந் திருராம லிங்கநற்றேசிக
செங்கீரை யாடியருளே.
மகம் = யாகம்,
மாதிரம் = திசை
மாகம் = வானம்
1. மருவாணைப் பெண்ணாக்கி என்று தொடங்கும் திருஅருட்பா பாடல்
2. அருள் என்னும்சொல் திருஅருட்பாவில் 3900 முறை வந்தள்ளது.
No comments:
Post a Comment