2. தாலப் பருவம்:
பாடல்: 1
உலகம் அளந்தோன் கண்பரிய
ஒருவன் இருதாள் மலரையணு
யுள்ளஞ் செறித்த அருட்கடலே
ஓதா துணர்ந்த கலாநிதியே
பலரும் புகழும் வடமொழியில்
பாரித் துளநான் மறையணுவாய்ப்
பண்ணார் சுவைத்தீந் தமிழ்மறையே
பைம்பொற் குன்றாம் எனினும் ஒவ்வா
நிலையிற் றெனவா ரூர்நம்பி
நிமலற் பாடி முதலையின்வாய்
நின்று மதலை வரவழைத்த
நீர்மை வியக்கும் தமிழ்த்தவமே
கலவ மயில்வா கனத்தணிகைக்
கடவுட் கன்பா தாலேலோ
கணக்கை யறிந்தும் விடேனென்னுங்
காளாய் தாலே தாலேலோ.
பாடல் 2:
சின்மய தீபிகை ஒழிவி லொடுக்கம்
திருமந்திர முறையும்
திருவா சகமுந் தேவா ரம்மொடு
திகழ்தர நின் றருளும்
நன்னய நூல்கள் அனைத்தும் உணர்ந்திடு
நாவலர் பெருமானே
நஞ்சென நெஞ்சை ஒறுத்து மடக்கிய
நல்லவர் மருமானே
என்மய மென்பதும் நின்மய மென்பதும்
இன்றியி ருந்திடென
என்னுளி ருந்துநல் இன்னருள் செய்திடும்
என்னுயிர் நாயகனே!
தன்மய மற்றிடு நன்மய முற்றவ!
தாலே தாலேலோ!
சமரச சத்திய சங்கத் தலைவா!
தாலே தாலேலோ.
பாடல் 3:
நித்திய உலகியல் என்னுமொ ழுக்கொடு
நியமம் பலசொல்லி
நினைந்து நினைந்தழு துருகிநெ கிழ்வது
நின்வழி யென்றுபுகன்
றெத்திசை யும்நிறை சித்தரு வந்திட
இறவா வழி கூறி
இருந்து கனிந்துநி னைந்தவர் தம்மொ
டிருந்துந லம்பாடி
இத்தினம் இவ்வுயிர் அத்தனை யும்நலம்
என்போல் எய்துகென
எங்கும்நி றைந்தொளிர் கங்கைய ணிந்தவன்
இன்மலர் அடிதொழுவோய்
சத்திய சமரச சங்கத் தலைவ
தாலே தாலேலோ!
தவமுனி வரர்தொழு சிவமுனி வரரே
தாலே தாலேலோ!
பாடல் 4:
கல்விய தில்லாக் கயவர்க டம்மைக்
காணவும் ஆகாதே
கடவுளை உணராப் பேதையர் வாய்மொழி
கற்றலும் ஆகாதே
நல்வித நூலையு ணர்ந்து மடங்கார்
நட்பது ஆகாதே
நாவை யடக்கா தீவினை யாளரை
நண்ணவு மாகாதே
அக்கிடு முடல்நா னென்பவர் பக்கல்
அணுகவு மாகாதே
ஆணவ மற்றவர் தாணுவை யொப்பவர்
அகலவு மாகாதே
மல்கிடு மாறிது வென்றுமொ ழிந்தவருள்
மன்னவ தாலேலோ
வள்ளல ருட்பிர காசநன் மணிகண்
வளருக தாலேலோ.
தாணு = கடவுள், மல்கிடுமாறு = பெருகும் வழி
பாடல் 5:
நல்வினை தீவினை யென்னுமி ரண்டொரு
நவவடி வாகியதே
நவதுளை பெருமொரு வுடலிதை நானென
நம்புதல் தகுதியதே?
பல்வித மாயப ராபரன் உண்மை
பகிர்ந்திடு பான்மையதே?
பற்றற விட்டவர் அல்லது மற்றவர்
பார்த்திட லாகுமதே?
சொல்விதமாகிய சும்மையொ ழிந்திடல்
சுகவழி யாகுமதே
துரியவெ ளிப்பதி யுறைதரு பெரியவர்
சொன்மொழி யாகுமிதே
மல்கிடு மாறிஃ தென்றுமொ ழிந்தருள்
மன்னவ தாலேலோ
வள்ளல ருட்பிர காசநன் மணிகண்
வளருக தாலேலோ.
சும்மை = சுமை
பாடல் 6:
முன்னர்நி னைப்பது பின்னர்வி னைப்பய
னாகமு ளைத்திடுமால்
மொழிசெய லெல்லாம் அவரவர் வினையாய்
மூண்டெதிர் நின்றிடுமால்
நன்ன ருளத்தொரு பின்னம தில்லா
நம்பனை எண்ணிடுவோர்
ஞானிக ளாமவர் ஏவலி னால்வரு
ஞாலம் நடந்திடுமால்
உன்னிடும் உயிருடல் உளவகை ஏதஃ
தொன்றுதல் எவனெனவே
உன்னியு சாவுதல் நின்னிலை தருவதொ
ருயர்வழி யாமெனவே
தன்னிகர் தமிழ்கொடு சாற்றிடு பெரும!
தாலே தாலேலோ!
சமரச சத்திய சங்கத் தலைவ
தாலே தாலேலோ.
பாடல் 7:
நெருநளி ருந்தவர் இன்றிலை என்பது
மெய்ம்மொழி தருமறையே
நின்றவ ரின்றுட னாளையி ருப்பது
நிச்சய மின்றெனவே
தருதவ முனிவரர் ஓருரை தந்தனர்
தாயென நின்றவரே
தந்திட வுண்டிரை நொந்தென மாய்ந்தது
தருமந் திரமுறையே
வருகணம் மலவுடல் வாழ்ந்திடு மோவென
மாற்றிய துன்னுரையே
மற்றது கண்டுமென் உளமுல கியலை
மறந்திடல் செய்திலதே
சருகென வுதிர்கினு முருகிடு மனமுடை
தயவே தாலேலோ
சமரச சத்திய சங்கத் தலைவா
தாலே தாலேலோ.
பாடல் 8:
அன்பெனும் மலையே அருளெனும் நிலையே
அறம்வளர் கடலமுதே
அறிவெனும் நிறைவே செறிவெனும் உறைவே
அறிஞர்பெ ரும்பொருளே
இன்பெனும் உருவே எழின்மிகு திருவே
என்றெனும் ஒளிர்சுடரே
இயல்வளர் தருவே உயல்தரு குருவே
எம்மவர் நல்லுறவே
வன்பறு நவமே துன்பறு தவமே
வருபவ மறு சிவமே
மயர்வறு மணியே அயர்வறு கனியே
மதியில்வ ருங்கனிவே
தன்பெரு நிலையருள் வள்ளல் பெருந்தகை!
தாலே தாலேலோ!
சமரச சத்திய சங்கத் தலைவ!
தாலே தாலேலோ!
பாடல் 9:
கன்னலெ னத்தகும் இன்னமு தத்தமிழ்
கடவுள் தருந்தமிழே
கற்றிட வுற்றிட நற்றவர் பெற்றருள்
கண்டது செந்தமிழே
தென்னக மன்னவ ரன்னவ ரெல்லாந்
தேர்ந்தது பைந்தமிழே
தேடுத லற்றுயர் பாடல்வ ழுத்திடச்
செய்வது வண்டமிழே
முன்னிய வெல்லாம் மின்னிய லேதரும்
மொய்ம்புள துந்தமிழே
மூவுல குந்தொழ நாவல ருந்தொழ்
மூத்தது முத்தமிழே
என்ன விரித்துரை சொன்ன தமிழ்க்கடல்
எந்தாய் தாலேலோ
எங்க ளருட்பிர காசப் பெருமலை
இறைவா தாலேலோ.
மொய்ம்பு = வலிமை
பாடல் 10:
அஞ்சிடு மாசையை அஞ்சவ டித்திடும்
அஞ்செனும் மந்திரமே
ஆறிட வெகுளியை நூறியொ ழித்திடும்
ஆறெனும் மந்திரமே
எஞ்சிடு வினைமேல் எழுதல் அடக்கிடும்
எட்டெனும் மந்திரமே
இருளற ஒளியுற இனிமைப யந்திடும்
இம்மெனும் மந்திரமே
தஞ்செய லற்றப ரஞ்சுடர் என்பது
தத்பத மந்திரமே
தருதுவ மாவது நியே; ஆமெனல்
தானசி* மந்திரமே
சஞ்சல மற்றிரு வென்றுபு கன்றவ
தாலே தாலே தாலேலோ
தனையுணர் கென்றருள் வள்ளல்பெ ருந்தகை
தாலே தாலேலோ.
* தத்துவமசி
No comments:
Post a Comment