Search This Blog

Tuesday, April 4, 2017

6. அம்புலிப் பருவம்:


அம்புலிப் பருவம்:


பாடல் 1:


மாதிரம னைத்துமதி யோனெனச் சொல்லலால்

மன்னுயி ரெலாம்புல்லலால்

வண்டமிழ் மொழியெனச் சாந்தந் ததும்பலால்

வள்ளலார் பொருளென்னலால்

சோதிமலை யாமென்று தோன்றலால் நல்லவர்

தொழுவவழி பாடூன்றால்

சொல்விளைய வைத்தலால் இன்பமுள வாக்கிமேல்

துன்பந் துடைத்திடுதலால்

வாதிகளு மேத்தலால் வந்துகலை முற்றலால்

மானுவா யென்னநின்னை

வள்ளற்பெ ருங்கருணை யுள்ளத்தி லெண்ணலால்

வருகெனப் பெறு கிறாய்நீ

ஆதிபுர நாதர்வடி வம்பிகைக் கினியனுடன்

அம்புலீ ஆடவாவே

அருட்பெருஞ்சோதியெந் தனிப்பெருங்கருணையுடன்

அம்புலீ ஆடவாவே


மதியோன் = சந்திரன், அறிஞர்

நல்லவர் = சான்றோர்கள்

சொல் = நெல், பாட்டு

வாதி = மருத்துவன், வழக்காளி

மானுவாய் = ஒப்பாவாய்


பாடல் 2:

 

பொன்னையே பின்னையாக் கோடலால் அன்பர்கள்

பூரணைப் பூசைசெயலால்

புத்தமுத மேவலால் நித்தனும் விரும்பலால்

புலவரவர் போற்றுமுறவால்

நின்னையோர் புடையேனு மொப்பென மதித்ததோ

நினைவென்ன வோவறிகிலோம்

நீடுலகின் ஆடியென வூடுநின் றாடிவரும்

நீணிலாக் கற்றைநின்னைத்

தன்னையே தானறிந் தின்பமுற நீயுமொரு

தந்திரஞ் சொலவருகுவாய்

தண்மைமிகு வெண்மதீ யென்றழைத் தானெங்கள்

சன்மார்க்க சங்கநாதன்

அன்னையே ரொற்றிவடி வம்பிகைக் கினியனுடன்

அம்புலீ ஆடவாவே

அருட்பெருஞ்சோதியெந் தனிப்பெருங்கருணையுடன்

அம்புலீ ஆடவாவே

 

 

 

பாடல் 3:

 

குறைவிலாக் கலைமுற்றும் நிறைமதியன் இவன்:நீ

குறைந்துமா யுங்கலையினை

கோதுமிகும் ஆணவ இருட்பகைவன் இவன்:நீ

குறித்திடி னுடற்கறையினை!

மறையாது மறியொணாப் பொருளையுணர் வானிவன்

மறைவாய்ப் பகற்கண் மங்கி!

மதனனை எரித்தவற் கன்புமிகு வானிவன்;

மற்றவற் குறுகவிகைநீ!

இறைபணியை மேற்கொண்டு மகிழ்வனிவன்; ஓர்பணிக்

கேங்கியஞ் சுங்கோழை நீ!

ஏந்திழையர் மாலுறா யோகியிவன்; இருபதோ

டெழுமாதர் சையோகிநீ!

அறிகிலான் பிறர்பிழையை மதியென மதித்துளான்

அம்புலீ ஆடவாவே

அருள்வன்வட லூராளி வருகென விரும்பினான்

அம்புலீ ஆடவாவே.

 

மறை = வேதம்

 

பாடல் 4:

 

அண்டாண்ட கோடிபக ரண்டபிர மாண்டங்கள்

அத்தனையும் விண் வெளியிலே

அணுவெனச் சுழப்பவை அறியாது சுற்றும்நீ

அவற்றுளே மிகவுமெளியை

பிண்டாநு பவமுணர் யோகிய ரகத்துளே

பிறையெனத் தோற்றி நிற்பாய்

பேசுமிவை யாவுமேல் பேசரிய நிலையுமெம்

பெருமான் தனைக்கேட்டிடில்

கண்டாநு பவமுடன் கரதலா மலகமாக்

காட்டிக்கொ டுப்பதோடு

கடவுணிலை யுந்தந்து நின்னையொப் போர்வந்து

கைகூப்பு மாறிருப்பான்

அண்டுதற் கரியதொரு பெருமையா மிவனழைப்ப‌

அம்புலீ ஆடவாவே

அருட்பெருஞ்சோதியெந் தனிப்பெருங்கருணையுடன்

அம்புலீ ஆடவாவே

 

 

 

பாடல் 5:

 

தான்வந்த நிலவுலகின் உபகிரக மாகநீ

சஞ்சரித் திடுவதாலும்

தக்கபல வற்றிலும் மிக்கவரு காமையில்

தானிருக் கின்ற தாலும்

பான்வந்த கதிரவன் ஒன்பது கோடியிரு

பதுலட்சம் மைல்கள்மேலான்

பார்க்கிலிரு லட்சத்து முப்பதெட் டாயிரம்

படருமைந் நூறுமைல்கள்

வான்வந்த வெளியுளாய் என்றறிந் தும்நினை

வாவெனக் கூறினானெம்

வள்ளற் பெருஞ்சோதி யையனீ வந்திடில்

வரமெலாம் பெற்றுவாழ்வாய்

ஆன்வந்த கருணைவடி வம்பிகைக் கினியனுடன்

அம்புலீ ஆடவாவே

அருட்பெருஞ்சோதியெந் தனிப்பெருங்கருணையுடன்

அம்புலீ ஆடவாவே

No comments:

Post a Comment