Search This Blog

Tuesday, April 4, 2017

வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - முழுவதும்

10. சிறுதேர்ப் பருவம்

சிறுதேர்ப் பருவம்

 

பாடல் 1:

 

ஒருபரையொ டியைபரா பரனடிக் கமலத்தில்

உலவாத இன்பநற்றோன்

உண்ணப் பிறந்தஎம் பெருமநினை நினைதலால்

உள்ளமின் பத்தில்மூழ்கும்

பரவுபுன் னகைநிலவு செம்பவள வாய்தரும்

பண்முதிர் சுவைத்தீந்தமிழ்ப்

பாடல்செவி யூடுபுக் குணர்வினைக் கெளவியுயர்

பத்தியின் பத்தழுத்தும்

விரவுசெம் பொருளெளிய நடைகற்க நாவூறி

மேம்படச் சுவையுண்ணுமால்

வேகமிகு சொல்லொலாஞ் சிவமணங் கமழ்தலால்

வேண்டிநா சியுமின்புறும்

திருவடிவ ணங்கவூற் றின்புறும்வி ழிக்கினிய

சிறுதே ருருட்டியருளே,

சித்தாந்த வேதாந்த நாதாந்த போதனே

சிறுதே ருருட்டியருளே.

 

 

பாடல் 2:

 

மருவோங்கு செங்கமல மலர்மகள்ம ணாளனும்

மறையோது மலர்வாயனும்

மாமயில்வி பாவனும் மாடநக ரையனும்

மாதுபா கத்தினானும்

உருவோங்கு கணபதியும் முனிவோரு முற்றபே

ருவகையொடு வாழ்த்திநிற்ப

உட்கவரு தீநடுவில் உட்கார்ந்து நீயன்று

யோகுசெய் கின்றபோழ்தில்

கருவோங்கு மொருவன்வந் தந்நெருப் பிடறினான்

கால்வெந்து கதறினான்; நீ

கனலெலாம் பட்டுமோ ரிடையூறு மின்றிக்

கடுந்தவம் முடித்தெழுந்தாய்

திருவோங்கு நினதுநிலை சிறியேமு முறவந்து

சிறுதே ருருட்டியருளே

தெருவோங்கு தமிழ்கந் தனிலோங்கு மருதூர

சிறுதே ருருட்டியருளே.

 

 

 

 

பாடல் 3:

 

பண்ணாத வினையெலாம் முன்னோடு பிறவியிற்

பண்ணித் தொலைத் தபவமோ

பாழான விம்மனங் கணமேனு நில்லாது

பதறிக்கு தித்தாடிடும்

எண்ணாது மெண்ணிடும் ஏங்கிடும் தூங்கிடும்

எங்கோ விரைந்தோடிடும்

ஏமாந்து காமந்த காரசா மாந்தரா

மெம்மைப்பி டித்தாட்டிடும்

உண்ணாது பன்னாள் உறங்காம லேயிருந்

தொருமைமன தாகிநீயும்

உருகியறி வானந்த மயமான தன்மையை

உன்னினா லுயிர்வாடிடும்

திண்ணாய மனமுருக வழிசொல்லு மையநீ

சிறுதே ருருட்டியருளே

திருவோங்கு தமிழகந் தனிலோங்கு மருதூர

சிறுதே ருருட்டியருளே.

 

 

 

 

பாடல் 4:

வாக்கொழிய மனமொழிய மதியொழிய நிற்பதே

வழியென் றுணர்த்து குருவே

மன்னுமெய் யறிவிலே யுறுவாகி நானென்னு

மயமற்ற அந்நெறியிலே

போக்கொழிய வரவொழிய நிறைகுறை வொழியமேற்

பூரணா காயமாகிப்

பொங்குமா னந்தமாய் நின்றநிலை யிற்கண்ட

புதுமையைப் புகலுதற்குக்

காக்குநிலை ஆக்குநிலை போக்குநிலை செய்திடுங்

கடவுணிலை கண்டபேரும்

கைகட்டி வாய்பொத்தி மெய்வைத்த சைகையொடு

காணாது நிற்பரதனைத்

தேக்குசெந் தமிழினாற் சொல்லவல் லமையுளாய்

சிறுதே ருருட்டியருளே

திருவோங்கு தமிழகந் தனிலோங்கு மருதூர

சிறுதே ருருட்டியருளே.

 

 

 

 

 

பாடல் 5:

 

பட்டமே வேண்டுவார் கட்டமில் லாதுசிலர்

பதவியே வேண்டிநிற்பார்

படியாத புல்லரும் பட்டறிவு ளோர்தமைப்

பார்த்துச் சிரித்திகழுவார்

சட்டங்க ளைக்காட்டி மற்றவரை யேமாற்றித்

தாங்கொணாத் தீமைபுரிவார்

சான்றிதழ் மட்டுமே சம்பளந் தந்திடும்

சரியாக வேலைகள் செயார்

சுட்டறிவி லாதவரும் நாவலர் முதுபுலவர்

சொல்லருட் பாவினரசர்

துறவிமா வித்துவான் அடிகளார் என்றுபெயர்

சூடித்து டித்தாடுவார்

திட்டெலாம் அற்றிவர் சீர்மதி பெற்றிடச்

சிறுதே ருருட்டியருளே

திருவோங்கு தமிழகந் தனிலோங்கு மருதூர

சிறுதே ருருட்டியருளே.

 

 

 

 

பாடல் 6:

 

அட்டாவ தானியார் கல்விச்செ ருக்கொழி

அன்றியற் கடிதமெழுதி

அவரெழுத்து தகரவரி என்றவொரு பாடலுக்

கரியபொரு ளுங்கொடுத்து

நிட்டானு பூதியை விரும்புவோர் தத்தமது

நெற்றிக்கு ணேர்விளக்கு

நிற்பது நினைந்திடுக நின் னிலைமை என்னருளின்

நின் றேயு ணர்ந்திடுகமேல்

எட்டாத அத்துவித நிலைதுவித நிலையின்றி

எட்டாத தாகுமென்றும்

இதயமே கோயிலாக் கொண்டுபா மாலையால்

ஏத்துகென வும்புகன்றோய்!

தெட்டாத போர்க்கன்றி எட்டாத செல்வமே

சிறுதே ருருட்டியருளே

திருவோங்கு தமிழகந் தனிலோங்கு மருதூர

சிறுதே ருருட்டியருளே.

 

 

 

 

பாடல் 7:

 

அருட்பெருஞ் சோதி அகவல் ஆயிரமும்

ஆறுநா லடியுமாய் விரவி

அமையவோ ரிரவில் எழுதியுள் ளுருகி

அருமறைப் பொருட்டெரித் தாங்கே

இருட்பெரு நிலையில் இன்னுலுற் றேமும்

இன்புறக் கருணைசெய் இறையே

இதனினும் நினது பெருமையை அறிய

ஏதுவும் பிறிதுவேண் டுதுமோ?

பொருட்பெரு நிலையே நிலையெனக் கருதும்

பொய்யருக் கெட்டிடாப் பொருளே!

போற்றிடும் புரவலர் திருவே

தெருட்பெரு நிலையிவ் வுலகெலாங் காணச்

சிறுமணித் தேர்விடுத் தருளே

திருவளர் தோங்கும் திடல்வடலூர!

சிறுமணித் தேர்விடுத் தருளே.

 

 

 

 

 

பாடல் 8:

 

பிறவாத நிலைபெற்ற பெரியவர்! நின்னையோர்

பிள்ளையாக் கொண்டுயாமும்

பிள்ளைத்த மிழ்பாடல் தக்கதோ! என்றிடில்

பேதையேம் சிலசுறுதும்

இறவாத பெருமானி ராமலிங் கம்பிள்ளை

என்றுலகர் சொல்வதாலும்

ஈசனாரின்பிள்ளை நேசனார் நற்பிள்ளை

இளையபிள்ளை யானென்றுமே

அறவாநின் சொற்களும் வதனாலும் ஏழையேம்

ஆசையின் மிகுதியாலும்

ஐயாஎம் அம்மாவெம் அப்பாநின் பேரருள்

ஆட்கொள்ளு மென்பதாலும்

சிறியேமு ரைததுளேம் தெய்வமே! தள்ளாது

சிறுதே ருருட்டியருளே

திருவோங்கு தமிழகந் தனிலோங்கு மருதூர

சிறுதே ருருட்டியருளே.

 

 

 

 

பாடல் 9:

 

மகமேரு மலைதன்னை வில்லா யெடுத்திந்த

வையமாந் தேரின்மீது

மாதேவ னேறுநாட் கணபதிவ ராமையால்

மட்டேரு மச்சிற்றதாம்

இகமேவு தற்கரிய முத்துநவ ரத்தின

மிழைத்ததேர் நீ பெற்றுளாய்

இனியகனி கடலைபொரி அமுதுமே னும்படைத்

தேத்தினோம் கணபதியும்

அகமேவு மிவ்வுலகில் எவ்விதத் துன்பமும்

அணுகிடா தைய! நின்பேர்

அன்புடன் சொல்லுவோர் இன்புடன் வாழ்ந்துநல்

ஆன்மஞா னம்பெறுகுவார்

செகமேழு மேத்திடத் திருவுள மகிழ்ந்துநீ

சிறுதே ருருட்டியருளே

திருவோங்கு தமிழகந் தனிலோங்கு மருதூர

சிறுதே ருருட்டியருளே.

 

 

 

 

பாடல் 10;

 

வாழியென் னாண்டவன் என்றெடுத் தேத்துநின்

வார்கழல் வாழ்கவாழ்க!

வையகம் வாழ்கைஇவ் வையகம் போற்றிடும்

வண்டமிழ் நீடுவாழ்க!

ஆழிமலை வண்முகிலும் ஆறுகுளம் ஏரிதரு

ஆவினம் வாழ்கவாழ்க‌!

அன்புமிகும் உள்ளத்து மக்கள்சேர்ந் தின்பமுற

ஆளும்நல் அரசுவாழ்க!

ஊழிபல செல்லினும் மேன்மேலு மோங்கிய

உன்னருட் பாடல் வாழ்க!

உயிரெலாம் வாழ்கஅவ் வுயிரினுக் குயிராகி

ஓங்கிடும் உண்மைவாழ்க!

சேழிடம் வாழ்தருந் தேவரும் வாழ்ந்திடச்

சிறுதே ருருட்டியருளே

திருவோங்கு தமிழகந் தனிலோங்கு மருதூர

சிறுதே ருருட்டியருளே.

8. சிறுபறைப் பருவம்

சிறுபறைப் பருவம்:

 

பாடல் 1:

 

விரிதரங் கக்கடலின் உளர்வளியின் வெந்தீயன

மேவுமண் ணில்தோன்றியே

விரவும்ஒலி விண்ணினுக் குரியஒலி சடஒலி

விலக்கியமா யாகாரியத்

துருவொலியும் நால்வகை சூக்குமையை சந்தியோ

டுற்றமத் திமைவைகரி

ஓதுமிவை சிற்றறிவி னர்க்குரிய தெதனினின்

றுற்பத்தி யாகுமோ அப்

பரநாத முங்கண்டு சுகவாரி யில்திளைப்

பவன்நீ அதற்கேற்பவெம்

பாசப் பெருங்கடலில் வீழ்ந்துகரை காணாத

படரினேம் செவிகுளிரவும்

திருவம் பலக்கூத்தன் ஆடலுக் கேற்பவும்

சிறுபறை முழக்கியருளே

சீராம லிங்கவள் ளாலெங்கள் குருநாத

சிறுபறை முழக்கியருளே.

 

 

பாடல் 2:

 

அன்பறிவு பண்பழகு கற்புநா ணாதிசேர்

ஆருயிர்க் காதலாளின்

ஆகமது தோய்ந்தசிற் றின்பந் தனக்குவமை

அம்மம்ம சொல்லவென்றால்

தன்பொருள்ப கிர்ந்தளித் துத்துனது மனையிலே

தானிருந் துண்டதொக்கும்

தரமறிக வென்றுசெந் தமிழ்தந்த வள்ளுவர்

சாற்றினார்; ஐயநீயும்

இன்பமே வடிவாய இறையருட் பேரின்பம்

எற்றோ எனக்கேட்டிடில்

இன்சுவை பொருள்கள் பல ஒன்றா யமைத்தளித்

திதனினும் மிக்கதென்றாய்!

தென்புலவர் கேட்டிஃது நன்றென மதித்துளார்

சிறுபறை முழக்கி யருளே

சீராம லிங்கவள் ளாலெங்கள் குருநாத

சிறுபறை முழக்கியருளே.

 

 

 

 

பாடல் 3:

 

நன்மார்க்க மாஞ்சுத்த சன்மார்க்க நெறிதனை

நன்றா யறிந்திடாமல்

நாவுக்கு ருசியாக வுண்டுன் டுறங்கியும்

நல்லோர்த மைப்பழித்தும்

துன்மார்க்கநெறி செலும் வன்மார்க்க வீணரவர்

சுத்தசன் மார்க்கரென்று

சொல்லிக்கொ ளும்ஒலியும் அன்னார்தமைச்சேர்ந்த

துட்டர்கை தட்டுமொலியும்

பன்மார்க்க அரசியற் போர்வையை மூடியே

பண்ணாத தீமைபண்ணும்

பாதகர் சிரிப்பொலியும் ஏதிலர் கலக்கொலியும்

பார்விட் டகன்றுபோகச்

சின்மாத்தி ரந்தெரித் தெம்மையாட் கொண்டவா!

சிறுபறை முழக்கியருளே

சீராம லிங்கவள் ளாலெங்கள் குருநாத

சிறுபறை முழக்கியருளே.

 

 

 

 

பாடல் 4:

 

அகரவொலி உகரவொலி மகரவொலி பிரணவம்

ஆகிப்பி றங்குமொலியும்

அவ்வொலியை உள்ளத்தில் உள்ளாமல் உள்ளுமவர்

ஆங்கறிதல் நாதவொலியாம்

பகருமவ் வொலியினைக் கேட்டுருகி மேற்சென்று

பதியிடம் பார்க்க முயல்வோர்

பாராது பார்ப்பதும் கேளாது கேட்பதும்

படியென் றறிந்துமேலாஞ்

சிகரவரை சென்றங்கு பரையோ டிருந்தருள்

செய்கின்ற செய்யவெளியைச்

சித்தா யறிந்துபே ரானந்த மயமான

சிவமா யிருப்பரென்றே

திகழுமொரு சொல்லா லெடுத்துத்தொ டுத்தமுனி

சிறுபறை முழக்கியருளே

சீராம லிங்கவள் ளாலெங்கள் குருநாத

சிறுபறை முழக்கியருளே.

 

 

 

 

பாடல் 5:

 

யானைபரி அரிமுதல் கொசுகெறும் பீறாய

யாவையுங் கூர்ந்துநோக்கி

யாவுமுண வுண்ணலும் யாநலமும் நண்ணலும்

யாண்டுமுள வாறறிந்தும்

ஊனமிகு பிறவிகள் அனைத்துமா னிடரினும்

உயர்நலம் விழைதலோர்ந்தும்

உயிரிரக் கங்கொளா தவைகொல்ல, எண்ணுவோர்

உண்ணநா நீரூறுவோர்

வானையுறு முயர்கொண் டிறந்தாரை மீட்கினும்

மாற்றியாண் பொண்ணாக்கினும்

மாதவஞ் செய்யினும் அவர்புறத் தாரென

மலர்வாய் திறந்துசெய்ய

தேனைநிகர் பாடலறி வித்துவரை கையினால்

சிறுபறை முழக்கியருளே

சீராம லிங்கவள் ளாலெங்கள் குருநாத

சிறுபறை முழக்கியருளே.

 

மருவாணைப் பெண்ணாக்கி என்று தொடங்கும் அருட்பா

 

உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்களெல்லாம்

உறவினத்தார் அல்லரவர் புறவினத்தார் ‍= அருட்பா

வேறு:

 

பாடல் 6:

 

தோன்றிற் புகழொடு தோன்றுக வின்றேல்

தோன்றுதல் தீதெனவே

சொல்லிய வள்ளுவர் சொல்லிற் கொருசிலர்

சூதுகள் சூழ்ந்தனரே

ஆன்றவர் போலந டித்திடு கின்றார்

அறிவறி யார்சிலரே

அள்ளித் தருமொருவள்ளல் யாமென‌

அறிவிப் பார்சிலரே

தேன்றரும் உரையால் செய்த்தி தாளில்

தினம்வரு வார்சிலரே

தீயவிளம்பர மும்புக ழென்றுள்

தேர்கின் றாரிவரே

மூன்றுல குந்தொழ வோயிவர் மயலற‌

முழக்குக சிறுபறையே

முனிவரெ லாம்புகழ் வடலூர் வள்ளால்

முழக்குக சிறுபறையே.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாடல் 7:

 

கற்பனை யேயிவ் வுலகிய லென்றுட்

காணவு மியலா தார்

கனகமெ னும்பதி யதில்வள ரும்பதி

கண்டுள முருகாதார்

சொற்பன மாகம றைந்திடு மின்பத்

துன்பமி துணராதார்

சுகமிகு மறிவறி துரியநி லைப்படி

தூங்கவு மறியாதார்

அற்பர்க ளிவரொடு நிற்பது மாகா

தகலவி ருந்துனுளே

அரகர சிவசிவ நமவென வோதுதல்

அதுசிவ நெறியெனவே

முற்படு நோன்பால் வந்து புகன்றவ‌

முழுக்குக சிறுபறையே

முனிவரெ லாந்தொழு வடலூர் வள்ளால்

முழக்குக சிறுபறையே.

 

 

 

பாடல் 8:

 

முந்திய பொதுவினில் அம்பிகை யோடம்

முனிவர் தமக்காயும்

முன்னொரு மன்னன் முன்னிய தற்கும்

முதல்வன் தாள்தூக்கி

தந்திமி தோதித் தாதித் தீதித்

தமிதமி தாதூதி

தாந்தமி தந்திதி தகுதகு திகுவென

தான்நின் றாடிடுநாள்

நந்தி முழக்கிடு மத்தள வோசையும்

நாணியி டைந்திடவும்

நானில மெல்லாம் கேட்டிது நன்றாம்

நன்றா மென்றிடவும்

முந்துத மிழ்க்கவி எழுதிய கையால்

முழக்குக சிறுபறையே

முனிவர் வணங்கும் வடலூர் வள்ளல்

முழக்குக சிறுபறையே.

 

 

 

 

பாடல் 9:

 

உலகமி யங்கிட எண்ணிய நல்லோர்

உருள்பண மாக்கியதை

உணரா தொருவரே யத்தனை யும்பெற்

றுயரநி னைக்கின்றார்;

அலகில பொருளை வைப்புழி யாதஃ

தற்றார் வயிறெனவே

அருமறை சொல்வதை அறியா தாரிவர்

அறிவுதி ருந்திடுக!

விலகிட வுரியவி ரப்பது நாட்டில்

மேவா தேகிடுக

வீரமும் ஈரமும் மானவி வேகமும்

மேவி மகிழ்ந்திடுக

கொலுமொரு வினையறு கென்றுபு கன்றவ

கொட்டுக சிறுபறையே

குலவிடும் வடலூர் வள்ளல் பெருமான்

கொட்டுக சிறுபறையே.

 

 

 

 

பாடல் 10:

 

அவரவ ருள்ளத் திறைவனி ருப்பதை

அறியா மையினாலே

அவரவர் வஞ்சனை யாகந டந்தழி

கின்றார் மண்மேலே

அவரவர் செய்யுங் கடமையை யுண்மையொ

டாற்றிடு வதனாலே

அருளொடு பொருளுந் தெருளொடு திறலும்

அணுகிடும் மிகமேலே

எவரெவ ரெத்தொழில் செய்யினும் அதையே

ஈசனின் முன்னாலே

இன்புடன் ஆற்றிடும் அன்புறு பூசனை

என்றுசெய் வதுமேலே

தவமஃதாகும் என்றவ நன்கு

முழங்குக சிறுபறையே

தமிழ்வளர் வடலூர் ஐயா நன்கு

முழங்குக சிறுபறையே.

7. சிற்றிற்பருவம்:

சிற்றிற்பருவம்:

 

பாடல் 1:

 

சுழத்தி நிலையி லுருத்தெரியாத்

துயர்க்கே வலத்தா ணவத்தோடத்

துவித மாகக் கிடப்பேமைத்

துயர்தீர்த் தருளுங் கடப்பாட்டான்

இழுத்தோ ரசுத்த மாயையினால்

இயன்ற இருந்தேம்; சுத்தநிலை

எய்தும் நினைக்கீ திழிவேயாம்

பழுத்த அறிஞர் செய்கையைப் போல்

பாலர்விளை யாடிட லியற்கை

பயனா மெங்கட் கெனத்தோன்றும்

பரிசை நீயெங் ஙனமறிவாய்?

அழுத்தும் கற்கள் நின்னடியை

அடியேஞ் சிற்றில் சிதையேலே

அருளுத் தரசிற் சபையோனே

அடியேஞ் சிற்றில் சிதையேலே.

 

 

பாடல் 2:

 

சீரார் குடிசைப் பகுதியிலோர்

சிறிய பகுதி தீப்பற்றிச்

சிறிதும் அணையா தோங்குதலும்

தேம்பும் மக்கள் ஏங்குதலும்

பாரா மனது நெகிழ்ந்துருகிப்

பரிந்து தன்மேல் ஆடையினால்

பைய வீசித் தீயதனைப்

பரவா தணைத்தெவ் வுயிருக்கும்

நேரா வின்பம் விளைவித்த

நிமல வடிவே யாஞ்செய்த

நேர்த்தி யற்ற மணல்வீட்டை

நினது கால்கொண் டழியாதே

ஆரா வமுதே சின்னம்மை

அளித்த வள்ளற் பெருமானே

அடியேஞ் சிற்றில் சிதையேலெம்

அன்பே சிற்றில் சிதையேலே.

 

 

 

 

பாடல் 3:

 

கண்ணிற் படுமிவ் வுருவெல்லாம்

கடவுள் நிலையென் றுணராமல்

கரவும் பொய்யும் வஞ்சனையுங்

கடுத்த முகமுங் கொண்டூடி

மண்ணிற் புகுவோர் தமையெல்லாம்

மனதைத் தெளிவித் தறிவீந்து

மாயைக் கூத்தின் மயல்காட்டி

மன்றக் கூத்தன் செயல்காட்டி

எண்ணற் கொண்ணாப் பேரின்பாம்

இறவாக் கதிதந் தீடேற்ற

எண்ணிக் குறுகுந் திருமேனி

இறைவா நின்றன் கால்நோகும்

திண்ணற் கினிய அன்பாள

சிறியேஞ் சிற்றில் சிதையேலே

செல்வம் பெருகும் வடலூரா

சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

 

 

 

 

வேறு:

 

பாடல் 4:

 

அம்மையொடு செவிலியுந் தந்தலைவி மேலணங்

கச்சுறுத் தென்றுகொண்டே

யாடறுத் தேடவிழ் முருகனை யழைத்துவெறி

யாடிடச் சூழ்ந்தகாலை

இம்மைய லால்தையல் நொந்தன ளெனத்தோழி

இசைத்திடும் போதிலம்மை

என்னென் றதட்டிடவும் மாவென் றடுக்கினாள்

இருபதுக் கொன்றுகுறைவாய்

வெம்மை மதனஞ்சுமா! வேதனையு மாறுமா

வேந்தனுக் கெட்டுமாவிவ்

வெறியாட் டெனும்பொருள் தொனிக்கவென் றஞ்சொலான்

விளையாடு மையனே நீ

எம்மையிச் சிற்றிலாட் டேனென் றழித்திடுதல்

ஈகையோ நடுவுநிலையோ

ஏர்செய்வட லூராளி நின்பதம் வணங்கியே

ஏத்தினோம் சிற்றில் சிதையேலே.

 

 

பாடல் 5:

 

சாண்பிள்ளை யானாலு மாண்பிள்ளை யென்றுலகு

சாற்றுஞ்சொ லுண்மையாலும்

சன்மார்க்க சங்கமது தாபிக்க வந்தகுரு

சாமிநீ யாதலாலும்

மாண்புமிகு அம்மானி ராமையா பிள்ளையெம்

மாமிசின் னம்மைசெய்த

மாதவத்தால் வந்த பேரழகு வடிவான

மைந்தனீ யாதலாலும்

காண்பதே பேறெனக் கொள்ளுமெளியேம் நினைக்

காணத்து டித்துநின்றோம்

கடவுள்நீ வருமளவு சிற்றிலா டுதுமெனக்

கருதித் திரும்பிவிட்டோம்

சேண்வருதல் காணினும் நின்றுதொழுவோம் வெய்ய

செருக்கோ டிருந்ததில்லை

திருவடிவ ருந்தியங் குருமண லழுத்திடும்

செல்வமே சிற்றில் சிதையேலே.

 

சேண் ‍= தூரம்

 

பாடல் 6:

மதியமுத முண்டுபர மானந்த வெள்ளத்து

மண்டித் திளைத்திருக்கும்

மாண்பார்ந்த மேலவர் பார்வையிற் கலைஞான

மார்க்கஞ் சிறார்செய் திடும்

வதியுறு மணற்சோறொ டொக்குமென் பாரவ்

வழக்குக் கழிந்திடாமல்

மணல்வீடு கட்டிவிளை யாடினோம் நினதுதிரு

மலரடிவ ருந்தநேரும்

பொதியமலை யமருமுனி இமயமலை வளருமுனி

புங்கவர் மகிழ்ந்துவாழ்த்தப்

பொதுவென்ப தெவ்வுயிரு மாமென் றுரைத்தபர

போதவே தாந்தகுருவே

திதியருளூ மொரு பெருந் திருவருட் பிரகாச

செல்வமே சிற்றில் சிதையேலே

சீராம லிங்கநற் றேசிகா எமையாண்ட

தெய்வமே சிற்றில் சிதையேலே.

(சின்னஞ் சிறியவர்கள் செய்த மணற் சோற்றை யொக்கும்

மன்னுங் கலைஞான மார்க்கம் பராபரமே ‍... தாயுமானவர்)

 

திதி ‍=  நிலைபேறு (திதி பக்கம் நிலைபேறும் பேர் = நிகண்டு)

பாடல் 7:

 

இலகு மைந்து தொழில் புரிய

எனக்கே தந்தா னென்று சொலும்

எங்கள் பெரும! அத்தொழிலில்

இயற்றுந் தொழிலும் ஒன்றன்றோ!

உலகும் பல்வே றுயிருமவை

ஊக்குந் தொழிலும் உளவாக்கி

உய்யும் படிக்கே உயிர்கள் தமை

உயர்த்தும் நினது சீரடியால்

மலகஞ் சுகத்துச் சிறியேஞ்செய்

மணல்வீ டழித்தல் மரபாமோ?

மல்லல் மிகுக்கும் வயற்பரப்பில்

மாட்டே ருழற்குப் பதிலாகச்

செலவு மிகுந்த பொறிக்கலப்பை

செழிக்கக் கிளரும் மருதூர!

சிறியேஞ் சிற்றில் சிதையேலெம்

செல்வா சிற்றில் சிதையேலே.

 

1. மல + கஞ்சுகம், கஞ்சுகம் = மெய்ப்பை

2. பொறிக்கலப்பை = இயந்திரக் கலப்பை

பாடல் 8:

 

அதிருங் கழலோன் நின்றாடும்

அழகிய பொதுவின் வடபாலோர்

அரிய பெரிய ஞானசபை

அமைத்துத் தைப்பூ சத்தன்று

கதிரும் மதியும் கீழ்மேலாக்

கலந்து கண்ணில் நின்றிடவும்

கற்பூ ரத்தின் ஒளிநெற்றி

கண்ணா மென்று தோன்றிடவும்

உதிரும் மனிதச் சடலத்தை

ஒளியாய் மாற்றி ஓங்கிடவும்

உலகம் அறியத் தெரிவிப்போய்

உண்மை யெல்லாம் புரிவிப்போய்

குதிரங் கொள்ளா நென்மலைகள்

குவியப் பெருமம் மருதூரா!

குறியேஞ் சிற்றில் சிதையேலெங்

குருவே சிற்றில் சிதையேலே.

 

1. கீழ்மேலா = கிழக்கு மேற்காக

2. குதிர் = நெல் முதலிய வைக்குங்கூடு

பாடல் 9:

 

மதியோர் மதித்துப் புகலும் அருள்

வழியிற் செல்லா துலகியலாம்

மார்க்கத் துழன்று மாழ்கிடுவீர்

வம்மின் உய்ம்மின் என்றுரைத்தும்

கதியே யறியாச் சிறியேம்நின்

கருத்தை மதியாக் கடையரெனக்

கருதா திழைக்கும் மணல்வீட்டைக்

கண்டுட் கோபங் கொண்டாயோ!

நிதியோன் வந்து பணிகேட்கும்

நித்தா வெங்கள் அத்தாவெம்

நெஞ்சங் கவரும் பெம்மான்நீ

நிலையில் உயரும் அம்மான்நீ

திதியேம் உனது பொருளாவேம்

செல்வா சிற்றில் சிதையேலே

தெய்வப் பதியாம் வடலூரா

சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

 

திதி = காத்தல்; நின்னால் காத்தற்குரியேம்

 

 

பாடல் 10:

 

விருப்பு வெறுப்பற் றானடியை

மேவும் அடியார் தங்கட்கே

மிண்டுந் துன்பம் இலவென்னும்

மேலாம் மறையின் சொல்லுக்கே

ஒருப்பட் டுள்ள சான்றாக

உரைத்தா யிறக்க ஆசையிலை

உலகில் இருக்க ஆசையிலை

ஒன்றும் இல்லை யாலெனவே

கருப்பு வில்லி தனைவென்று

கற்ப நிலையுங் கைகண்டு

கடையே முள்ளந் தனினின்று

கடவுங் கடவுள் மணியேமேல்

திருப் புகன்ற திருமருதூர்ச்

செல்வா சிற்றில் சிதையேலே

செல்வம் பெருகும் வடலூரா

சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

 

1.      கருப்புவில்லி = மன்மதன்