Search This Blog

Wednesday, December 25, 2013

பொன்னேரி சுந்தரம் பிள்ளை அவர்கள் பெருமானார் மீது பாடிய - திருஅருட்பிரகாச வள்ளலார் "ஞான சிங்காதன பீடத் திருஅருட் செங்கோல் ஆட்சி"

வள்ளல் பெருமானாரின் மாணாக்கரும்,

பெருமானாரின் அண்ணன் மருமகனும் ஆகிய
பொன்னேரி சுந்தரம் பிள்ளை அவர்கள்

பெருமானார் மீது பாடிய
திருஅருட்பிரகாச வள்ளலார்
"ஞான சிங்காதன பீடத் திருஅருட் செங்கோல் ஆட்சி".
திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க!
விருத்தம்
அருளுருவாய் வருகுருவை யறிபொருளா யகத்துன்னிக்
கருணைவளர் ஞானசிங் காதனமென் றங்கெழுநிலைமேல்
இருண்மூல பந்தமற வெங்கள்குரு ராமலிங்கன்
மருளறச்செய் தருட்செங்கோல் மதித்துறச் செய்வகையுரைப்பாம். - 1


ஓய்ந்தமன மொருவீட்டிற் கொருதுணையா கும்புறத்துச்
சாய்ந்தமன மெழுநரகந் தள்ளுதற்குத் துணைதானென்
றாய்ந்தமன மகற்றுதற்கோ ரருட்குரவ னருளியவா
றேய்ந்தமன மடக்கும்வகை யெங்குரவன் துணைப்பட்டான். - 2


நில்லாது போமனதை நிராசையாற் றானிறுக்கி
வெல்லாமல் வென்றதனை வேரறுத்து வினைகளைந்து
சொல்லாமல் சொன்னபொருட் சுயஞான முறவிளக்கி
எல்லாரும் தொழுந்தானா யினையிலியா யிருந்தனனால். -3


இருந்தமுறை தனைக்கேண்மின் இன்னுமே யெங்குரவன்
ஒருசத்தின் மயம்மனமாய் ஒருசிவத்தின் மயம்அறிவாய்
ஒருபரநன் மயம்வெளியாய் ஓங்குருசிற் பரமாதி
அருளுதற் பரமாகு மநாதிமுப்பா ழகன்றவிடம். - 4


பேரொளியே நாதாந்தப் பெருஞ்ஜோதி சீவப்பாழ்
நேரொளியை அஞ்செழுத்தால் நேர்ந்துதத்வ ஞானமது
சேரொளியே சிவப்பாழாய்ச் சேர்ந்துமுதற் பரஞான
வேரொளியே பரப்பாழாய் உயரும்அது தனையொதுக்கி. -5


நின்றதத்து வங்கடந்த நிலைசீவப் பாழாகி
நின்றவிடம் பிரமமென்று நிகழ்த்தினுமா யாப்பிரமம்
மன்னுமிட மாகுமது மாண்டவிட மந்திரமாய்ப்
பன்னுமொரு பிரமமது சிவப்பாழா மதுகடந்தே. - 6


தாண்டுமிடந் தாரகநற் பிரமந்தான் பரப்பாழாய்
ஆண்டவெளி பெருவெளிவா ழரும்பாக முறுநிலையுஞ்
சேண்பகிமா தாரஞ்சித் தாந்தநிரா தாரமமே
வேண்டும்வே தாந்தநிலை மேலாகு மீதானம். - 7


கடந்தவிட நாதாந்தங் காத்தருளு ஞானமது
கடந்தவிடம் பரஞ்ஞானங் கருவிலுதிப் பொடுமிறப்புந்
தொடர்ந்தவிட மாகுமது தோயாது மீதானம்
அடர்ந்தபிறப் பிறப்பின்றி யமருமிட மானந்தம். -8


இந்தநிலை யுருவறிந்தே யிருந்தவண்ட பிண்டநிலை
பந்தமித யந்தனக்குப் பாங்குறுமேல் கீழொன்றாய்த்
தொந்தமுற்ற பிரமாண்ட நிலையறிந்து தூயநிலை
சிந்தனையிற் றெடக்குண்ட சிவந்தானாய்த் தானதுவாய். - 9


இருந்தநிலை யாற்றன்னை யறிந்தெல்லாந் தானாகப்
பொருந்துமொரு தலைவனையே புணர்ந்துறுநன் னிலைவேண்டி
அருந்துணையா யாருயிருக் கருங்கதிதந் தருள்வானாய்ப்
பெருந்துணையெம் பெருமானாய்ப் பிரமனய னறியானாய். - 10


ஒருருவா யோருருவு மில்லானா யொளிக்குமிடம்
பேருருவாய்ப் பெருவெளியாய்ப் பெருவெளிக்குள் பெருவெளியாய்
வேருருவாய் விளங்குமிரு வினையில்லா விடத்தொளிரும்
நேருருவாய் நினைவில்லா விடத்தொளிரு நின்மலமாய். - 11


பதிஞானந் தானாகிப் பசுஞானந் தானாகி
விதிஞான மிரண்டின்றி விளங்குமெலாந் தானாகிக்
கதிஞானப் பொருளாகிக் கனமோனப் பொருளாகி
அதிபிரமப் பொருளாகி யதற்குளெலாந் தானாகி. - 12


அண்டபிண்டந் தானாகி யதற்குமப்பா லாம்பிரமம்
அண்டமுந்தா னாகியுறு மசரசர மாம்பூத
அண்டமத னுட்பிரிவா யானதத்வ வண்டமெலாங்
கண்டபெரு மாயையுந்தான் காணாத பொருளாகி. - 13


ஆக்கலொடு காத்தலுமங் கருளுமவ னாகியுறு
சூக்குமனல் வடிவாகித் தூலவடி வாகியவன்
நோக்கும்விழிக் கெட்டாத நுண்ணயநற் பொருளாகிச்
சூக்குமமுத னாங்காகித் தோன்றியுறு வாக்காகி. - 14


வேறு
அந்தமும் இறுதியில்லா அளப்பருஞ் ஜோதியாகிப்
பந்தமும் வீடுமாகிப் பதிபசு பாசமாகிச்
சிந்தனைக் கெட்டாதிகித் திரிக்கெனும் பொருளதாகி
எந்தையு மாகியென்னுள் இருப்பவ னாகியென்றும். - 15


தோன்றுமா மறைகளாகித் துரிசிலா கமங்களாகி
ஏன்றநற் கலைகளாகி யென்னுயிர்க் குயிருமாகி
ஆன்றவா தாரமாறுக் கப்பாலு மாகியென்னுள்
தோன்றிடும் பொருளுமாகித் தோன்றாத துணையுமாகி. -16


இத்தனை பொருளுமாகி யெங்குரு வானசித்தன்
சத்திய வடிவன்சாந்த சச்சிதா னந்தன்றானாம்
நித்தியன் வருவதெப்போ தென்றுள முருகிநிற்பன்
சுத்தமா மிராமலிங்கன் றுயரிலான் வரவுநோக்கி. - 17


                                                                     வேறு

எந்தைதா னெவ்வுருக்கொண் டெழுந்தருள்வான றிகிலன்யான்
சந்தமறைத் தவிசமைக்கச் சார்ந்ததன்மே லிருப்பவனை
அந்தமுத லில்லாத வருட்குருவென் றறிவனென்றே
இந்தவு லகம்போற்ற விதுசெய்தா னெங்குரவன். - 18


                                                                     வேறு

அருளொளி யகலாதோங்கு மருட்பர சாக்கிரந்தான்
இருண்மனப் பகுதிபோன விடமதற் கப்பாலான
பொருள்பர சொற்பனத்திற் பொய்ப்பொருண் மாயைநீங்கும்
தருணமச் சீவர்க்கேற்ற தகுமன வடக்கந்தன்னில். - 19


ஆனந்தந் தோன்றுமந்த வானந்த நிலைபெறாது
போனவவ் விடவசுத்தம் பொங்குமச் சொற்பனத்தில்
ஆனவங் கதுபோமென்னி லாங்குறு வாசமாழ்ந்து
ஊனமுற் றொடுங்கலாகு முயர்ந்துறு பரசுழுத்தி. - 20


சர்வசங் காரதத்வஞ் சம்பவந் திதியிரண்டாங்
கர்மமங் கதனைத்தீர்க்க வந்தன மென்னத்தோன்றும்
தர்மமங் ககலாதுற்ற தனிவிடம(இக்)தா மப்பால்
பிர்மசாக் கிரத்திற்சுத்த மாயையின் ப்ரக்ஞையாகி. - 21


உலகியல் மறைத்தாங் கோங்கு முயர்திரோ பவமுறுந்தான்
விலகுறு மரியபிர்ம்ம சொற்பனம் விந்துதன்னைப்
புலனுற விளக்குநாதம் போமிட மருள்விளக்கம்
கலகமில் லரியபிர்ம்ம சுழுத்திமா மாயைநீக்கம். - 22


அவ்வருள் விளக்கம்பெற்றே மென்பதும் போமிடந்தான்
அவ்விய மகல்சொரூப மதுகுரு துரியந்தன்னில்
பவ்வமா மிருளொழிந்து பரமநல் லின்பந்தோன்றுந்
திவ்வியவிந் நிலையின்றன்மை தெரிந்தவ ருரைப்பாரம்மா. - 23


ஆனவிவ் வெழுநிலைப்பே ரடிநிலை முதலாமேழும்
தானதை மறைக்கும்மாயைத் தன்னுருத் திரைதடுத்து
வானவில் லொளிவிட்டோங்கி வயங்குமத் தன்னைமாறா
ஞானசிற் சபையையிங்கே நாட்டிய பின்னுமாங்கே. - 24


நடுநிலை தன்னுள்ஞானத் தாரகச் சொரூபந்தானாம்
படுமல ரயன்வியப்பப் பன்மணிப் பளிங்குகொண்ட
வடுவற விளங்குநல்ல மறைகடாம் போற்றஞ்சைவ
நடுநிலை யிராமலிங்க னயமுறச் செய்வித்தானே. - 25


அருமையவ் வெழுநிலைக்கண் மேனிலை யதன்மேலோங்கும்
பொருவில்பூ ரணவானந்தப் பொற்கோச குருவைக்காணா
துருவரு விரண்டுமின்றி ஒளிவிடுந் தவிசமைத்தே
அருளுரு வாகுமெங்கள் அரியமெய்க் குரவனாளும். - 26


நோக்குறா நோக்கையன்பால் நோக்குமந் நிலையால்நோக்க
நோக்குறா நோக்கமன்றே நோக்குமென் றுறுதிநாடித்
தாக்கதிக் ராந்தமெலாஞ் சமவேத முடிவிலோங்கும்
நீக்கரு நிலையைநாடி நினைந்துநைந் துருகிநின்றான். - 27


எச்சமயத் தினுள்ளோ ரெவருமே நோக்குந்தோறும்
பொச்சமில் எங்கள்தெய்வப் பொதுச்சபை யெனப்புகன்று
அச்சபை மணித்தெய்வந்தா னருள்நட ராஜனாகுங்
கொச்சமப் பொதுசிறப்பைத் தூக்கியே வியப்பரன்றே. - 28


தற்போதந் தானகன்று தண்ணருள் நினைவாற்செய்த
பொற்கோயி லாகுமன்னாப் புவியுளார் போதங்கொண்டு
கற்கவா லமைத்துயர்ந்த கணக்கது போலுமாகா
சிற்சபை தனக்கீடில்லை யென்னுரை செய்வரன்றே. - 29


வெறுவெளி யாசனந்தான் விதித்தது கேட்டவிப்பார்
உறுமறி விடையரியாரு முற்றதன் வடிவுநோக்கிப்
பெறும்பொரு ளிதன்மேலுண்டோ விலையெனப் பேசிப்போந்து
பொறுமைகொண் டுயரும்ராம லிங்கத்தே சிகனைப்போற்றி. - 30


இருந்தன ரிருந்தண்கூடல் எந்தைகொண் டுறுபீடம்போற்
பொருந்துமெய்ஞ் ஞானபீடம் போந்துவாழ் பவனெம்மானன்
குருவரு ளாகுமீச னெருவனே யேறுதற்குப்
பொருந்துமென் றுரைக்கவல்ல புண்ணிய பீடந்தன்னில். - 31


வருவதென் நாளோவந்து வாழ்பெரு கருணைதன்னைத்
தருவதெந் நாளோவெல்லாந் தந்தருள் சித்தசாமி
இருளறுத் தன்பர்காண இருக்குநா டென்றுபின்னும்
உருகியே நாடியுள்ளே யுற்றுற்றுப் பார்க்கும்பின்னும். - 32


வேர்க்குங்கண் ணீர்ததும்பி மெய்நடுக் குற்றுச்சோறும்
பார்க்குங்கம் பிக்கும்வார்த்தை பழுதற நழுவும்பின்னும்
போக்குமெய்ப் புளகமிந்தப் பொலிவுறு தேட்டங்கொண்டு
ஆர்க்குமா னந்தக்கண்ணீ ராற்றுக்கு ளழுந்தும்பாடு - 33


ஆனந்தக் கூத்துமாடு மாறாகு மந்தரபீஜ
மோனமாம் பீடமொன்றி முன்னிற்பா னெங்குமாகி
ஊனந்தா னில்லாசித்த னொருவனே யெனக்குளாகித்
தானந்த மில்லாதெங்குந் தானாகுஞ் சாட்சியாகும். - 34


சற்குரு வரவுநோக்கிச் சாந்தரை நோட்டமாதி
தற்புரு மவத்தைபத்துங் கடந்தவம் முடிவில்தானே
பொற்புற விருக்கவல்ல புண்ணியன் வருநாளெண்ணி
நிற்பனக் காட்சிகாண நின்றனர் பலருமம்மா. - 35


                                                       விருத்தம்

திருவக லாதஞானச் செல்வமுற் றோங்குமன்பர்
உருவள ரியந்தேடி யுட்கும் இராமலிங்கன்
ஒருபுவி யறிவுறாமல் உழற்றிய அணைமேல்வந்து
ஒருகுரு மேவுந்தன்மை ஒன்றையார் உரைப்பாரம்மா. - 36


பொற்பக லாதஞானப் பொலிவனை புரிந்தவாண்டு
பற்பல வாயிற்றின்னம் பரமசற் குரவன்வந்து
நிற்பதென் நாளோயானும் அறிகில னென்றுநெஞ்சக
துற்பல மாகமிக்கத் துயருழந் திருக்குங்காலை. - 37


ஒருபக லெம்மையாளும் ஒருவன்றன் உளம்புகுந்து
வருங்குறிப் புணர்ந்து வாழ நாளிற்றா னடைந்ததன்மை
ஒருவன்யான் தெரிந்துரைக்க வொண்ணுமோ வொண்ணாதாளும்
அருட்குரு பரன்றான்றேன்றும் அருணிலையுரைப்பன் கேண்மின். - 38


அருட்பிர காசவள்ளல் அருள்விழி தோளுநாளும்
ஒருவிடப் புறமதாடும் உண்மைகள் பலவுங்கண்டு
அருள்நிலை விளங்குங்காட்சி யதிசய மதனைவாயால்
அருள்செய்யும் இராமலிங்க னற்புதக் காட்சிகேண்மின். - 39


சோதிநன் மலையுந்தோன்றுந் தோன்றுநல் வீதியுந்தன்
வீதியின் நடுவில்மேடை மேடைமேல் கூடமாங்கு
ஆதியேழ் நிலைகொள்மாடம் அங்ஙனந் தோன்றுமந்த
நீதியி னடக்கைகேட்கி னெஞ்சந்தா னுருகுமம்மா. - 40.


அருட்பெருஞ் ஜோதியாகு மச்சிவ மலையிற்றோன்றும்
கருணைநல் வீதியாகுங் காருண்ய சத்தியமார்க்கம்
அருணனி சுரக்கும்மேடை யாத்மசிற் சத்திகூடம்
இருளொளி யாகுமூலப் பகுதியுள் இருந்துதோன்றும் - 41


ஏழ்நிலை மாடபேத மிருண்மல சத்திபேதம்
வாழ்நிலை யீசனாதி குருசாக்ரம் வயங்குமீறாக்
தாழ்வுறா வாதியந்தம் ஒத்தநன் னிலையேயாகிச்
சூழ்வுறு சூட்சிகாணுந் தூயநற் பெரியோனாகி - 42


ஒன்றதொன் றாகியுள்ளே யொளிக்குந்தத் துவங்கடந்து
நின்றிடம் போற்றுமந்த நிலையொன்றே யாகுமாங்கே
சென்றிடக் காணும்சத்தி யனந்தமாய்த் தேய்ந்தகன்ற
பின்தத்வ முடிபைக்கண்ட பேர்ந்துமும் மடியாயோங்கும் - 43


கொடுமுடி தில்லைசச்சி தானந்தங் கோதிறானே
ஒளியுறு விரண்யகோச மொப்புயர் வில்லாவாயிற்
படிகடந் துறுமவ்வேலை பரிபாக சத்திகூடம்
முடிவிலா துயருங்காட்சி முந்தோன்றக் காணுங்காலே. - 44


ஆங்கவர் வெண்மையாதி யைவண்ண மாகிநிற்கும்
ஆங்கவர் தமைக்கண்டப்பா லன்புடன் சென்றக்கோயில்
தீங்கிலாத் திருவாய்க்கண்ணே திருவள ரைம்பெண்சத்தி
பாங்குறு சம்புபட்சப் பார்வையும் வென்றப்பாலே. - 45


மணிவாயில் பெண்ணோடணாய் மாண்புறு விளக்கமாகித்
துணிவுறு விரண்டுவிந்து நாதநற் ஜோதியாகிப்
பணிவுடன் விளக்கமாங்கே பார்க்கொணாக் காட்சியாகும்
அணிவளர்ந் துறுமணுக்கத் திருவாயி லாங்கேதோன்றும். - 46


அப்பொருட் பின்னசத்தி யருண்ஞான மறிதுயிற்கு
ஒப்புரு வாகுந்தில்லை கோவிந்த னொருவன்வாழும்
செப்புஞ்சிற் றம்பலத்தின் திருமுன்னா மதனைக்கண்டே
தப்பிலா னந்தவல்லி தானுறுங் காட்சியாகும். - 47


அருட்சித்தி யாட்சியன்பா லனுபவந் தோன்றக்கண்டு
பொருட்சத்தி சலனசத்தி யாதார போதஞானத்
திருநட ராஜன்றன்னைத் தரிசித்தே வந்தபேறு
ஒருபொரு ளாகுஞ்சுவாமி யொருவனே யறிவானென்று. - 48


சொன்னது முண்மைஞானச் சபையான்மச் சோதியாகும்
மன்னவ்வெவ் ளிக்குட்ஜோதி யாயதக் கடவுளாகும்
மன்னுமவ் வொளியெழுந்தும் மாண்புட னசைதலேநன்
கின்னடந் தோன்றுறாமைக் கிடஞ்சிதம் பரமதாகும். - 49


அச்சிவ சிதம்பரத்தினனுபவச் சொரூப காட்சி
பொச்சமி லாட்சிதன்னைப் பொய்படா தறிந்தவெந்தை
எச்சமயத் தோர்தாமு மிசையவே கூறியாங்கு
நச்சுற விருந்துளோர்க்கு நாவினென் றுரைக்கலுற்றான். - 50


பந்தந்தா னகலநீவீர் பந்தக்கா னாட்டுமிங்கள்
சொந்தபூங் காவனத்தின் றூயநல் லணியிஞ்ஜோதி
இந்தப்பார் முழுதுமேத்த வினிதணி மின்களென்றே
இந்தொளி மழுங்கவிந்நா ளெழிலுறச் செய்வித்தானே. - 51


அங்ஙன மியற்றுந்தோறு மனுபவக் காட்சிக்கேற்ப
மங்கலக் கோலம்கொள்ளும் மாண்புகள் பலவுண்டம்மா
அங்கதை யறியவொண்ணா தெவர்க்குமென் றளப்பான்சத்யன்
சங்கதி வேறொன்றில்லை சத்தியமீ தென்றபின்னும். - 52


புண்ணிய குருநம்மூருட் புகக்கொடி கட்டினன்றென்
றெண்ணுமின் னெங்கள்சாமி யித்தினம் வருநாளென்றே
பண்ணுமின் பணிகள்யாவும் பாடுமின் பசிக்கிலாங்கே
உண்ணுமி னுணவையென்றே யுரைத்தபி னுரைக்கும்பின்னும். - 53


                                                       விருத்தம்

வேதாகம மிரண்டின்விரி பொருள்க ளனைத்தும்
விரித்துரைப்பா ரிவ்வுலகி லில்லையென்றே விரிக்கும்
வேதாந்தம் போலுரைக்கும் வேதாந்த முடிவில்
விளங்குமே சித்தாந்த வித்தகநன் முடிவு
நாதவந்த போதந்தா னழுவினர்க்கே யாகும்
நாடுமிங்க ளென்றவல்ல நடுநிலைநன் னிலையே
வாதமற்ற போர்க்கேயிவ் வாழுவுபெறக் கூடும்
வாய்ப்பறைகொண் டேயறைமின் மன்னுசக மறிய. - 54


பரபட்ச முழுதுமே பார்த்துணருங் காலை
பார்த்தறிவ தெல்லாம்பொய் பகுத்தறிவதத் வைதம்
தரமுறுங் கேவலாத் துவிதமே நானீ
தானேயென் போன்மாயா வாதியிவ னுக்குள்
உரனுறும் மதவாதி யுலகமெலாந் தானாய்
ஓங்குவான் றனக்குமே லொருவனில் லானாய்ச்
சிரமெடுத்துக் கொண்டாடிக் குதுகலிப்பா னிவன்றன்
சிரமுறுவான் வேதாந்தி நீநானென் போனே. - 55


தோன்றுகே வலாத்துவித மி(ஃ)தொழித்துச் சுத்தந்
தோய்ந்தவே தாந்தநிலை யத்வைதப் பொருடான்
ஆன்றவரு மறைகளொன் றெனவருமை நோக்கி
ஆகமுப் பொருளென்றென் றறைந்திடுநற் சூது
ஏன்றவிரண் டின்மையிரண் டன்மையிரு பொருளின்
ஏற்றமுண்மை யி(ஃ)தறியா ரிரண்டொன்றென் றுரைப்பர்
சான்றநற் றுவிதமத் வைதவறி வதனைச்
சாற்றுமுண்மை யறிபவர்கள் தமையறிவர் ரிலையால். - 56


                                                வேறு
ஏர்பெறுஞ் சுருதியுக்தி யனுபவ மூன்று மேற்றுப்
பேர்பெருஞ் சமரசத்தின் றன்மையித் தன்மையென்றே
பார்முழு துணரமாட்டாப் பண்பினை யிராமலிங்கன்
சூர்பெரும் அருட்பிரகாச வள்ளறான் சொல்லலுற்றான். - 57


ஆதியாங் கடவுளாகும் பசுபதி பரமனாங்கே
சோதியா கமத்திந்திண்மை துணிபொரு ளொன்றேயன்றே
ஓதிய துண்மையாமிவ் வுண்மையச் சோதித்துப்பார்
பேதியா திருக்கமாட்டா வென்றுந்தங் கன்மத்தாலே. - 58


                                                வேறு

நீதிவேத முடிவின்மா வாக்கியம்நீயே யதுவானாய்
ஆதியாகுந் தொந்ததசி யதுவேகிரி யாவுபதேசம்
சோதியது நீயானாயென் பதுவேசுத்த ஞானவனு
பூதிதத்வ தரிசனமென் றுரைக்கப்புகுந்த பின்னுமே. - 59


தேகமுதலா முபாதிகளேழ் தேருமவனே யாத்மாவாம்
போகஞான நீயேதற் போதவுபாதி கூடிலறி
மோகமூக்ய மதுநீங்கு மிடமேலட்சிய மோட்சமுறு
தாகமின்றி தானென்பதது வேசுத்தந் தானுடல்தான். - 60


அல்லேனென் பதுசுத்த மதுவேவிட்ட விலக்கணையாஞ்
சொல்லுமன்ய மாகாமே சொரூபமோக மாயிருக்கை
வெல்லும்விடாத விலக்கணையாம் விளங்குஞான வானந்தம்
ஒல்லும்விட்டும் விடாதவிலக் கணையாமென்றங் குரைத்தபினும். - 61


                                                  வேறு

வகைகண்ட கடவுளாத்ம வளமுறுதொகை யீதென்றெ
பகையறு நூல்களாலும் பண்புறு முத்தியாலும்
தகையுட னுரைக்கினாங்கே தடைபடுங் கடவுடாஞ்செய்
சிகைபடும் பணிகடாமச் சீர்மையை யுரைக்கொணாதே - 62


ஆதலி னனுபத்தி லருள்சிவ மிரண்டுமொன்றாய்
வாதனை யற்றுவேத மாகம வழக்குநீங்கும்
சோதனை தனக்குமெட்டா துரிசற விளங்குமெங்கள்
நாதனை யெளிதிற்காண நல்லரு ளெளிதேதோன்றும். - 63


என்றுரைத் திட்டவெந்தை யினியநல் இராமலிங்கம்
நங்கருட் ப்ரகாசவள்ளல் நங்கருட் டுணையாநின்று
மன்புவி முழுதும்வென்று வாழருட் செங்கோலாள
மன்னிய குருகடாட்சம் வாய்த்தநன் காட்சியீதே. - 64



மேற்கோள்
(திருவருட்பா "சத்தியவான் வார்த்தை" - 
6-ந் திருமுறை, பதிகம் - 134, பாட்டு - 3)

திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடிகள் வாழ்க!

- பொன்னேரி சுந்தரம் பிள்ளை.


ஞானசிங்காதபீடத் திருவட் செங்கோலாட்சி முற்றியது.


===========


தாய்மலர்ந்த பெருங்கருணை தத்துவனா ரெங்கள்
சனிப்பிறப்பை யொறுத்துவினைத் தனித்தொடக்கை யறுக்க
வேய்மலர்ந்த கருணைதிரு மேனிகொண்ட காலத்
தெண்டோளோ இருதோளோ முக்கண்ணோ விருமை
ஆய்மலர்ந்த அருட்கண்ணோ நாமமெழுத் தைந்தோவன்றி
யருளிராம லிங்கஅற் புதம்பொற் பெயரோ
வாய்மலர்ந்த தீரிரண்டுமறையோ மூவிரண்டு மாமுறையோ
வகுத்துரையீர் மயக்கொழி மாத வரே. - 1

அகத்தியனோ வான்மிகியோ ஆதிசேடன் தானோ
மகத்துவாம் சம்பந்த வள்ளலோ - இகத்தில்
சச்சிதா னந்தத்தின் தண்ணளியோ யென்னென்பேன்
மெச்சுமதி இராமலிங்க வேள். - 2 


திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க!

- பொன்னேரி சுந்தரம் பிள்ளை.

No comments:

Post a Comment