Search This Blog

Wednesday, December 25, 2013

திருஅருட்பிரகாச வள்ளலார் மீது கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் அருளிச்செய்த "வருகைப் பதிகம்".

இராமலிங்காய நம:
திருச்சிற்றம்பலம்
திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க அடிகளின் திவ்விய சிறப்புகளை மக்கள் உணரும் பொருட்டு பெருமானாரை தலைவராய் கொண்டு அடிகளின் மீது
கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் அருளிச்செய்த

"வருகைப் பதிகம்".
உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! ஓதாதே
உற்றகலைகள் அனைத்தினையும் உணர்ந்தோய் வருக! ஒன்றுஇரண்டு அற்று
இலகும் பரமானந்த சுக இயல்பே வருக! இம்பர் தமை
இறவாக் கதியில் ஏற்றுகின்ற இறையே வருக! என்போல்வார்
கலகம் தவிர்த்து கதியளிக்கும் கண்ணே வருக! கண்ணிறைந்த
களிப்பே களிப்பில் ஊறுகின்ற கனிவே வருக! கலைமதிதோய்
வலகம் செறிந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (1).


வெளியில் சிறந்த சுத்தபர வெளியே வருக! வெம்மலமாம்
வெய்ய திமிரம் ஒழிக்கவரு விளக்கே வருக! வேதாந்தத்
தளியிற் சிறந்த மெளநறுந் தருவே வருக! சன்மார்க்கம்
தழைக்க உலகில் அவதரித்த தலைவா வருக! சமநிலையாம்
அளியில் சிறந்த பெருங்கருணை அப்பா வருக! ஆப்தரெலாம்
அண்ணிப் பரவும் புண்ணிய மெய் அருளே வருக! வதிநலம்சேர்
வளியிற் சிறந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (2)


கருணை நிறைந்து வழியும் அருட்கடலே வருக! கற்பகத்தில்
காய்ந்து முதிர்ந்து பழுத்தநறும் கனியே வருக! கருதுகிற்போர்
இருணை யுறவே யெரிவிளக்கா மிறையே வருக! எழுமையினும்
இம்மை யம்மைப் பயனளிக்கும் எந்தாய் வருக! இடைசெயும்ஓர்
மரணந் தவிர்த்து வாழ்வளிக்கும் மருந்தே வருக! என் இதய
மலரை மலர்த்தும் வான்சுடரேசெம் மணியே வருக! வழுத்தஅறிதாம்
வருண நிறைந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (3)


வேதமுடிவில் விளங்கும் அருள் விளக்கே வருக! மெய்ஞ்ஞான
வீட்டின் பயனாய் ஓங்குகின்ற விருந்தே வருக! விளங்குபர
போத மயமாய் ஓங்கும்உயர் பொருப்பே வருக! ஆனந்தம்
பொங்கி ததும்பி வழியும் அருட்புனலே வருக! பூரணமாய்
ஏதம் அகன்றார் உள்ளகத்தில் இருள்போய் வருக! இதம்அகிதம்
இரண்டு கடந்த இறுதிசுகம் ஈவோய் வருக! எஞ்ஞான்றும்
வாதம் அகன்ற வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (4)


செப்பும் சடாந்தநிலை முழுதும் தெரித்தோய் வருக! திரிவிதமாம்
தீக்கை* உடையார் பரவும் அருட்செல்வா வருக! செகதலத்தில்
ஒப்பும் உயர்வும் நீத்த பர உருவே வருக! ஒற்றியிலே
உவட்ட அமுதம் உண்டுஉவக்கும் உணர்வே வருக! உருபசியாம்
வெப்பும் தவிர்த்து சுகமளிக்கும் விபுவே வருக! விண்ணோரும்
வேண்டிப்பரவும் ஒருதெய்வ வெளியே வருக! விழுமியர்தம்
வைப்பென்று இலகும் வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (5)


பத்தி சுவைக்கும் உயர்ஞானப் பழமே வருக! பரவுகிற்போர்
பந்தம் தொலைக்க வந்தகுரு பரனே வருக! பழிச்சரிதாம்
சித்தி நிலைகள் பலபுரிந்த சிவமே வருக! முத்தேக
திறம்பெற்று அழியாது ஓங்குஅருட் செல்வா வருக! சிவயோக
முத்திநிலையாம் சோபான மொழிவோய் வருக! முழுதுணர்ந்த
முனிவர்அகத்தும் புறத்தும் ஒளிர் முத்தே வருக! மூவாசை
மத்தர் அறியா வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (6)


ஓடும்பொருளும் ஒன்று எனக்கண்டு உவப்போய் வருக! ஓங்காரத்து
உண்மை அறிந்த யோகியர் தம் உளவே வருக! உவப்புடனே
பாடும் தொழிலை மேற்கொண்ட பதியே வருக! பதிநிலையிப்
பாரில் உரைக்க அவதரித்த பண்பே வருக! பரிவுடனே
கூடும் அடியார் குழுஅமர்ந்த குருவே வருக! குணமெனும் ஓர்
குன்றில் விளங்கும் எமதுகுலக் கொழுந்தே வருக! குவலயத்தில்
வாடும் தகவுஇல் வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (7)


பாசக் கிழங்கை பறித்தெடுக்கும் பரசே வருக! பழவடியார்
பகரும் வேத ராசியமாம் பண்ணே வருக! பவப்பிணியை
நாசம் புரிந்து நலம்அளிக்கும் நட்பே வருக! நாதாந்த
நடனம் காணும் திறலளித்த நாதா வருக! நதிமதியம்
வீசும் சடையோன் அருள்வடிவாம் வித்தே வருக! வியனிலத்தில்
விருப்பும் வெறுப்பும் அற்றசுக விழைவே வருக! விளம்புபல
வாச நிறந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (8)


கண்டால் இனிக்கும் அதிமதுர கனியே வருக! காதலித்தோர்
கன்றங் கழியக் கண்களிக்கும் களிப்பே வருக! கடவுளர்தன்
தொண்டால் யாவும் வருமென்றே சொல்வோய் வருக! துரியபரஞ்
ஜோதி நிலையைக் காட்டவந்த துரையே வருக! சூக்குமத்தை
விண்டால் அனைத்தும் விளங்கும்என விரிப்போய் வருக! விண்ணோரும்
வேண்டும் பரமானந்த சுக விளைவே வருக! வியன்பொழிலில்
வண்டார் வலஞ்சூழ் வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (9)


சாகாக் கல்வி கரைகண்ட சதுரா வருக! சாந்தமெனும்
தவளக் கலையை உடுத்துஅமர்ந்த தலைவா வருக! சற்குணர்க்கே
வேகாக் காலை விளம்பவந்த விபுவே வருக! வெறிவிலக்காம்
வெண்பா உரைத்த தமிழ்த்தலைமை வேந்தே வருக! வியனிலத்தில்
பாகார் மொழியார் பற்றறுத்த பரமே வருக! பத்திதனைப்
பாரில் எவர்க்கும் படவிரிக்கும் பாங்கே வருக! பல்காலும்
வாகார் தெய்வ வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (10)

- கூடலூர் சிவ துரைசாமி தேசிகர்.

2 comments:

  1. ஆஹா என்ன அற்புதமான வரிகள். இதயம் இனிக்கும் வருகை பாடல்கள்.நன்றி ஐயா

    ReplyDelete
  2. அருள்மணிSeptember 29, 2024 at 10:44 PM

    நன்றி பல கோடி

    ReplyDelete