Search This Blog

Wednesday, December 25, 2013

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் தோத்தரித்து அருளிய "சற்குரு துதிகள்" என்னும் "வள்ளலார் தோத்திர திரட்டு".

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது

கூடலூர் சிவ துரைசாமி தேசிகர்


தோத்தரித்து அருளிய

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது
கூடலூர் சிவ துரைசாமி தேசிகர்
தோத்தரித்து அருளிய
"சற்குரு துதிகள்" என்னும் "வள்ளலார் தோத்திர திரட்டு".


நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் திறத்தை,
அருட்பாவின் திறத்தை,
முழுதும் உணர்ந்தவர் சன்மார்க்க சீலர் .கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் ஆவார்,
இவரின் தோத்திரம் ஒவ்வொன்றும் மிக அருமை, அற்புதம், அருள் சிறப்பு மிக்கவை,
சொல் நயம், பொருள் நயம், எதுகை, மேனை நயம், என அனைத்து நயமும் ஒருங்கே உள்ளது இப்பாடல் தொகுப்பு,
வள்ளல் பெருமானையும், திருஅருட்பாவையும் இப்படி தோத்தரித்தவர்கள் யாரும் இருக்க
முடியாது என்னும் படி ஒவ்வொரு பாடலும் அமைந்துள்ளது,

அன்பர்கள் அனைவரும் அன்புடன் ஓதி வள்ளலின் அருள் நலம் பெருக!



"சற்குரு துதிகள்" என்னும் "வள்ளலார் தோத்திர திரட்டு"
பத்திவரும் பழவினைகள் பறந்தோடு மூலமலப் பகுதி மாயும்
புத்திவரும் புலைகொலைகள் புறம்போகும் மானந்தம் பொங்குஞ் சாந்த
முத்திவரும் அழியாநன் மோக்கமுறு முதுகடல்சூழ் உலகில் எல்லாச்
சித்திவரும் இராமலிங்க தேசிகன்தன் அருட்பாவைச் சிந்திப் போர்க்கோ. (1)

மைக்காலன் தனைஉதைத்து மறையவனுக்கு அருள்புரிந்த வள்ளன்மீதே
அக்காலம் பெரியரெலாம் அரியநறுந் தமிழ்உரைத்தார் அதனை ஓர்ந்தே
இக்காலந் தெளிநடையால் அருட்பாஎன்று ஒருநூலை இயம்ப உன்னை
முக்கால அறிந்தபிரான் ஏவினனோ இராமலிங்க முனிவ ரேறே. (2)

புலைமறந்த புண்ணியர்கள் புகழுகின்ற இராமலிங்கப் புனிதா நீதான்
கலைமறந்த அனுபவத்தால் கனிந்துரைத்த அருட்பாவை கழறுந் தோறும்
முலைமறந்த குழவிகள்சொன் முகநோக்கும் விலங்கினங்கள் முற்றும் பொல்லாக்
கொலைமறந்த செவியேற்றிஇங்கு அருண்மயமாய் விளங்கும்எனில் கூறலென்னே. (3)

அண்டரெல்லாம் கடைந்தெடுத்த அமுதமெங்கோ ஐங்கரனாற்கு அரனார்ஈந்த
மண்டுசுவைக் கனியெங்கோ வள்ளிமுனம் வேட்களித்த மலைத்தேன் என்கோ
கண்டவர்கள் அதிசயிக்கக் கவிபொழியும் இராமலிங்கக் கடவுண்ஞானி
தண்டமிழா லுரைத்ததிரு அருட்பாவின் சுவையதனைச் சாற்றுங்காலே. (4)

காவென்றால் கற்பகமே கனியென்றால் கதலியதே கண்ணிற் கானும்
தேவென்றால் கதிரவனே திருஎன்றால் அருட்திருவே செய்யாள் வாழும்
பூவென்றால் தாமரையே புலமென்றால் மெய்யறிவே பொருந்து மேலாம்
பாவென்றால் அருட்பாவே பதிஎன்றால் பசுபதியே பகருங்காலே. (5)

பனியினிக்கும் மொழிராம லிங்கஅருட் பண்ணவனே பண்பான் மிக்க
தனியினிக்கும் மனமுடையார் சந்ததமும் பரவுபெருந் தகையே நீதான்
நனியினிக்கும் படியுரைத்த நல்லருட்பாச் சுவையதனை நாடாரெல்லாம்
கனியினிக்கும் கரும்பினிக்கும் கண்டினிக்கும் என்றென்றே கழறுவாரே. (6)

செழுந்தமலர்க் குழலுமையால் சிவகாம வல்லியொடு திருமன் றாடும்
முழுத்தலைமைத் தனிக்கடவுள் முளரிமலர்ப் பதமதனில் முயன்று நாளும்
அழுத்தமுறும் இராமலிங்க அண்ணால்நீ வாய்மலர்ந்த அருட்பா தன்னில்
எழுத்தெழுத்தும் இனிக்கும்என்றால் என்சொல்கேன் சீர்த்தி என்சொல்கேனே. (7)

தற்போதம் தனைக்கொண்டு தனைஅறியாச் சந்தத்தார் தருக்கிப்பேசும்
துற்போதச் சுணங்கரொடு சேராமல் நெஞ்சேநீ சுகமெய்ஞ் ஞானச்
சிற்போத சோதிதனை காட்டிதிறல் ராமலிங்க தேசிகன் தான்
சொற்போத அருட்பாவைத் தொழுததினுட் சுவையருந்தி சுகித்திடாயே. (8)

அருட்பிரகாச அருட்பெரும் சித்தர் அருட்பெருஞ் ஜோதியார் மீது
தெருட்பிரகாச திருஅருட்பாவாம் தீபம்ஒன்று ஏத்தினார் அதுதான்
இருட்பிரகாம் தொலைத்துஎழு நிலைமேல் ஏற்றி எட்டா நிலையாம்
பொருட்பிரகாசம் தம்மோடு பொருந்திப் புரையிலாப் போகம் ஈந்திடுமே. (9)

சினத்தை அவித்த சித்தரெலாம் செப்பும் இராமலிங்கம் எனும்
கனத்த யோக தற்பரநின் கனிவாய் மலர்ந்த வாசகம்தான்
தனத்தி னடத்தும் தனமுடையோர் தங்கள் இடத்தும் தாவுகின்ற
மனத்தை ஒழித்துஇங்கு அன்பை மலைபோல் வளரச் செய்திடுமே. (10)

ஒருதரம் படிக்கின் உடல்பொறி கரணம்ஓய்ந்து உயிர்அனுபவம் கூடும்
இருதரம் படிக்கின் எண்ணிலா சித்திஓந்து அருள்அனுபவம் கூடும்
மறுதரம் அதையே முத்தரம் படிக்கின் மண்ணிறை அனுபவம் கூடும்
கருதரும்வள்ளல் கனிவுடன் உரைத்த கவின்அருட்பாவில் ஓர்கவியே. (11)

பத்தி கடலே சிவஞான பதியே என்நற் பாக்கியமே
முத்திக்கு அரசே இராமலிங்க முனியே மோன முழுப்பொருளே
பித்தில் கிடந்தே அறிவுஅழிந்த பேயேன் உன்தாள் பெறலன்றோ
சித்தி வளாகத் திருமடத்தில் திகழும் தெய்வ திருவிளக்கே. (12)

வாணியும் சோமியும் வானத்தின் மேவி வயங்கு இந்தி
ரானியும் போற்ற ரசிதாம் பரத்தில் ரமிப்பவன் தாள்
பேணியும் வந்திடும் ராமலிங் கேந்திரர் பேசிய நூல்
ஏணியும் ஆகும்அன்றே முத்தி வீட்டினில் ஏறுதற்கே. (13)

பேய்மதம் கொண்டவர் பால்அணுகா அருட் பேற்றினராம்
செய்மதம் கொண்டவர் தம் மீதுவைத்தவெம் சீற்றத்தினால்
நாய்மதம் கொண்டுபின் கேடுற்ற வாறென நானிலத்தில்
வாய்மதம் கொண்டு பிதற்றுகின்றார் நெஞ்ச வஞ்சகரே. (14)

தக்கனைச் செற்றவர்க்கே தகரின்றிலை தந்தவந்த
நக்கனைப் பாடிய நாவல ருள்ளம் நயந்திடவே
கற்கரையும் படி இராமலிங்கேசர் கரந்த தமிழ்
சற்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்திட்ட தன்மையதே. (15)

பீடார் திருஅருட் பாவாணார் வந்திப் பெரு நிலத்தில்
பாடாத பாட்டையும் பாடிடுவர்எனப் பாமடந்தை
ஏடார் கமலத் திராதயனாவினி லிருக்கல் உற்றார்
ஓடா வனந்தனும் பாதலம் புக்கங் கொளித் தனனே. (16)

ஊர்பாடுவார் சிலர் ஓயாமல் செல்வம் உதவி செய்வார்
பேர்பாடுவார் சிலர் பிரியாவிடை எனும் பெண்கள் குணச்
சீர்பாடுவார் சிலர் ஸ்ரீராமலிங்கநல் தேசிகர் போல்
ஆர்பாடுவார் கேட்ட போதே புலங்கள் அடங்கிடவே. (17)

அருட்பா எனாது மருட்பா எனச்சொல்லி ஆணவத்தால்
இருட்பாடு உலகினி லேறேயென வுழலீனர் கட்கே
பொருட்பாள் அளிப்பவர்களுக்கும் நரகம் பொருந்தும் என்றால்
தெருட்பாவிகள் படும்பாட்டையும் கேட்டையும் செப்ப வற்றே. (18)

அருவருப் பாகிய நோய் அணூகார் அந்தகரணம் என்னும்
ஒருபெரும் பாழ்நிரை யமபுக்கிடார் உலகத்தில் நிறபார்
தெருவருட் சித்தர்எனும் இராமலிங்கநல் தேசிகர் சொல்
திருவருட் பாவில் ஒரு கவியேனும் தெரிந்த வரே. (19)

பொன்னாலே சூழுல்உலகம் புகழுகின்ற இராமலிங்கப் புனிதஞான
மன்னாலே வாய்மலர்ந்த மன்னருட்பா மாமுறையை மகிழ்வினொடும்
சொன்னாலே நாவினுக்கும் கேட்டாலே உளம் இனிக்கும் துதித்தபேர்க்கு
முன்னாலே செய்தவினை முற்றொழிந்து கைகூடும் மோக்கம் தானே. (20)

எந்நாளும் இறத்தல்இல்லா இறையவனை பொருட்படுத்தி இம்பரெல்லாம்
பந்நாளும் படித்துஅதன்உட் பயன்அறிந்து பரகதியில் பதியும் வண்ணம்
இந்நாளில் இராமலிங்க இறையேநீ வாய்மலர்ந்த இனிய பாக்கள்
அந்நாளில் இருக்குமெனில் அதிசயித்தே அமுதுஅருந்தார் அமரர் தாமே. (21)

வான் என்கோ வான்திரட்டு அமுதம் எங்கோ
வழுத்தறிதாம் கனிஎன்கோ மதுர மான
தேன் என்கோ தெவிட்டாத சீனி என்கோ
செங்கரும்பின் சாறுஎன்கோ திராட்சி என்கோ
ஊண் என்கோ ஊனிருக்கும் உயிர்தான் என்கோ
உயிர்உடம்பாய் ஓங்குகின்ற உணர்வு முற்றும்
தான்என்கோ இராமலிங்கத் தலைவா நீசொற்
றனியருட்பா வெனும்பொருளின் தன்மை தானே. (22)

தந்தையுனும் தயவு உடைய தனிஇராமலிங்க தலைவா நின்னை
வந்தனைசெய் கின்றவர்கள் வானுலகத்து இன்பம்எல்லாம் வலியஎய்தி
இந்திரர்போல் நீண்டுஇருந்து இங்கு இறுதிதனில் இசைக்க ஒன்னாத
சுந்தரமாம் பெரும்போகம் தோய்ந்திருப்பார் எனில்உன் சீர் சொல்லற்பாற்றோ. (23)

தாய்உரைத்த வார்த்தையினும் தனி இராமலிங்க அருட்தலைவா மிக்க
நீயுரைத்த வார்த்தை யென்றே நிதநிதமும் சிந்தித்து நிட்டைகூடி
ஆயுலகச்செயல் மறந்தே அகம்ஒடுங்கி அத்துவிதா ஆனந்தம் என்னும்
தூயஅனுபவம் அடைந்து சுகித்திருப்பார் அறிஞரெனில் சொல்வது என்னே. (24)

ஆரியர்கள் உரைத்தநெறி அத்தனையும் நீஉரைத்த அருட்பா என்னும்
சீரியஓர் நூலதனில் திடமாக காணுகின்ற திறத்தை நோக்கிப்
பேரியன்ற பெரியரெலாம் பெரிதுவந்து வந்திதார் பீழை யுற்றப்
பூரியர்கள் நிந்தித்துப் போய்நரகம் புக்கிஅவம் போகின்றாரே. (25)

அண்டவரைக் கடந்தவரை அகத்தவரைப் புறத்தவரை அளவில்ஏலாப்
பிண்டவரைக் கண்டவரைப் பெரியவரை அறியவரைப் பிரம ஞானம்
விண்டவரைப் பொருள்படுத்தும் வியன்ராமலிங்க விபுவே நின்னைக்
கண்டவரைக் கண்டாலே கலிதீரும் கடிதுஅகலும் கவலை தானே. (26)

வஞ்சமிலா ராமலிங்க வள்ளால்நீ வாய்மலர்ந்த
செஞ்சொல்அருட் பாமுறையைத் தெய்வமெனப் பாவித்தும்
விஞ்சவதைப் பூசித்தும் விருப்பமுற வாசித்தும்
அஞ்சுபவமே ஒழித்தார் அவனியுளார் அதிசயமே. (27)

கள்ளமிலா ராமலிங்க கண்யவருட் பிரகாச
வள்ளலார்வாய் மலர்ந்தமுறை மாமறைஎன்று அறிஞரெலாம்
உள்ளபடி உரைத்து உகந்தார் புலமும் அறியாதார்
எள்ளுனர் என்றால் அதனை எவர்பொருட்டாய் என்னுவரே. (28)

அரும்புமலர் காய்கனி போல் அவரவர்க்கு அனுபவமாய்
பெரும்புகழ்சேர் அருட்பாவாம் பெயரியஓர் நூலதனைக்
கரும்புஉகைக்கும் படிஉரைத்திக் காசினியைக் கனிவித்த
தரும்புகழ்சேர் ராமலிங்க தலைவாநின் சதுரென்னே. (29)

அருகாத செல்வ அருட்பிரகாசர் அளந்துவைத்தக்
கருகாத நல்அருட்பாவெனும் நூலைக் கனிவுகொண்டு
பெருகா தரத்தொடு பாடப் படிக்கஎப் பெற்றியரும்
உருகாத தன்மையுண்டோ சொல்வீர் உலகிடையே. (30)

பால்அடிசில் கொண்டு பைம்பொன் கலத்தில் பரிந்து எடுத்து
மேலடி மெத்தையில் மேலிருந்தால் ஒருமேன்மை இல்லை
ஆலடி வீற்றிறுந்தோன் புகழாம் அருட்பாவில் உள்ள
நாலடி கற்றுணர்ந்தால் வருமே முத்தி நாடதுவே. (31)

பொருட்சோதனை உற்ற பூதலத்து என்றும் பொருந்திமிக்க
தெருட்சோதி தெய்வதிருநிலை ஆய்ந்திடும் சிந்தை உள்ளீர்
மருட்சோதனை அற்ற இராமலிங்கேந்திர வள்ளலன்றி
அருட்சோதி தெய்வத்தை யார்காட்டினார் இவ்வகலிடத்தே. (32)

சாத்திரம் கற்றுச் சமயம் தெரிந்தசற் சங்கமத்தீர்
நேத்திரம் போன்ற அருட்பிரகாசர் நெகிழ்ந்துரைத்த
தோத்திர ரூபமயதாய அருட்பாவை தொழுதுநிதம்
பார்த்திருந்தாலும் பழவினையாவும் பறந்திடுமே. (33)

பாலில் கலந்த பழம்போல் ருசிக்கும் பாடல்செய்து
மேலில் கலந்தவர் மேம்பாட்டைக் கேட்டு வியத்தலின்றி
மாலில் கலந்தவர் தம்பாட்டைக் கேட்டு மகிழ்வதெல்லாம்
தாலில் கலந்த சுவைவிட்டு திப்பிகொள் தன்மையதே. (34)

வாராத வல்வினைநோய் வந்தாலும் வன்மையொடு
சேராத பாவமெலாம் சேர்ந்தாலும் - தீராதென்று
யார்சொன்னார் எங்கள் அருட்பிரகாச பெருமான்
பேர்சொன்னால் போமே பிணி. (35)

வாழி வடற்சிற்சபையில் வாய்ந்தநட ராஜரருள்
வாழி யவண்பூசிக்கும் மாதவர்கள் - வாழிஎன்றும்
வள்ளல் ராமலிங்க மன்னடி யார்களெல்லாம்
புள்ளலிலா இன்பம் இயைந்தே. (37).

- கூடலூர் சிவ. துரைசாமி தேசிகர்.

No comments:

Post a Comment