Search This Blog

Wednesday, December 25, 2013

"திருஅருட்பா வரலாறு - 2" - தொழுவூர் வேலாயுத முதலியார்



தயவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
"திருஅருட்பா வரலாறு" -
சன்மார்க்க சங்கச் சாதுக்களின் வேண்டுகோளின் படி
வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் இயற்றப்பட்டு
"திருவருட்பிரகாச வள்ளற்பெருமானின்ஒப்புதலின் படி
திருஅருட்பா முதல் பதிப்பில் பதிப்பிக்கப்பட்டது "
 
உரை : வடலூர் . புலவர். சீனி. சட்டையப்பனார்
 
வெளியீடு :
வள்ளலார் இளைஞர் மன்றம் - கோட்டக்கரை - வடலூர்
வள்ளலார் குடில் - விருத்தாசலம். 
வள்ளலார் பெருவெளி இணையதளக் குழுவினர் - நியூ ஜெர்சி - அமெரிக்கா
 ======



(வெளிப்படும் காலம் விரைந்திடல்)

பொய்யோட பொய்யோடாப் புறநிலைகள் புலம்போட
மெய்யோடா வைதிகச்செம் மொழிஒன்றான் வெய்யமல
மையோட மையோடு மனமோட மலிபிறவி
ஐயோடும் இறப்போட அருளொடு கண்ணோடி.   (11)

உரை:

பொய் நெறிகள் போய் ஒழிந்திட - பொய் நெறிவிட்டு அகலாத உலகியல் நிலைகள் புலம்பி அழிந்திட - மெய் நெறிவிட்டு நீங்காதசிவ நெறி விளங்கிட - சிவ நெறி நின்று உரைத்தருளும்
ஒரு சொல்லால் ஐவகை மலங்களும் அகன்றிட, அதனால் குற்றம் குறைகளிலேயே பழகிய மனநிலை மருகிக் கெட்டிட, அம்மலங்களின் பேதங்களால் பிறவிக்கு உண்டாகும் மரணம் அறவே விலகிட, நம் பெருமான் அருட்பாங்குடன் கண்ணோட்டம்(பரிவு) செய்திடும் காலம் விரைந்து வந்து கொண்டிருந்தது.   

                                                           ============


 (அன்பே உருக்கொண்டிடல்)

போக்குவர வில்லது புறங்கீழ்மேல் உள்நடுசார்
பாக்கும்இடை அறஇருந்த அதிசூக்கத் தொருதனிமை
நோக்கருநோ குணர்வருளான் நோக்குறஎட் டுருவாதி
தாக்கருதாக் குறஅன்று கொண்டதொரு தகைமைஎன.   (12)

உரை:

போக்கும் வரவும் இல்லாதது, உள்ளும் புறமும், கீழும் மேலும், நடுவும் பக்கமும் நீக்கமற நிறைந்தது, மிக நுண்ணிய வெளிஇயல்பு உடையது, ஒப்பற்ற தனித்தலைமை வாய்ந்தது, உள்முகத்து நோக்கி உணர்ந்து நோக்குதற்கும் அரியது, அருள் உணர்வால் நோக்கிட அகப்படுவது, அட்ட மூர்த்தமாய் நின்றது, யாதொன்றிலும் சார்பு இல்லாதது எல்லாம் வல்ல இறை, அத்தகைய எல்லாம் வல்ல இறைவன், இராமலிங்கத் திருவுருத்தாங்கிட அருள் கூர்ந்து அருளிய காலம் தழைத்திடலாயிற்று.   


                                                            ============


 (அவதாரம் செய்தமை)

ஊரொடுபேர் உருஒன்றும் இல்லாத ஒப்பில்உணர்
வோர்உருஈர் உருமுக்கண் நால்இருதோள் ஐந்துமுகங்
கார்உறுகண் டமும்ஆறு கவர்சடையு மறைத்தருளி
ஏர்உறவந் தெழுந்துவோ அன்றிஇமை யவர்க்கன்று.   (13)

உரை:

முன்பு ஒருமுறை விண்ணுலகத்தவரின் வாழ்க்கை நிலைகுலைய நேரிட்டது, அவரது வாழ்க்கை நிலைகுலையாமல் இருக்கமுருகப் பெருமான் எழுந்தருளினார், வேலினை ஏந்தினார், அரக்கரை வெற்றி பெற்று விண்ணுலகவர் வாழ்க்கையை நிலைப்படுத்தினார், அத்தகைய தந்தையாகிய முருகப் பெருமான்பன்னிரெண்டு தோள்களும், அருள் ஒழுகும் ஆறு முகங்களையும் மறைத்தருளி தெய்வதிரு மருதூரில் திரு அவதாரம் செய்ததுஎன வள்ளற் பெருமான் ஆங்கு அவதாரம் செய்தருளினார்கள்.   


                                                            ============


(அவதாரப் பொருண்மை)

பொன்நாடு தனைவழங்கப் போர்காட்டி எஃகேந்தி
எந்நாளும் என்ஆளும் எந்தைஆ றிருதோளும்
மன்ஆறு முகமும்ஒளித் துற்றதெனல் அலதுமற்றிங்
கென்ஆவ தன்னார்பால் இருஞ்சேய்மை தனைப்புனைந்து.   (14)

உரை:

சிவபரம் பொருளோ அன்றி முருகப் பெருமானோ அவ்வாறு உதயம் செய்தருளினார் என்று கூறாமல் வேறு வகையில்நம்பெருமானின் அவதாரத்தை அணிந்துரைக்க முடியும்?

                                                            ============


(திருமுலைப்பால் உண்டமை)

அறுமீனார் முங்களிப்ப அனிலநாள் கொண்டதென
உருகன்னி அறுவைமீன் கொண்டருளி யுலகமெலாம்
பெறுகோல மதுகாட்டி உதயஞ்செய் பிள்ளையார்
வறியோம்பான் முளைஉண்டார் மகிழ்கிந்தனைபான் முலைஉண்டார்.   (15)

அனில நாள் - விசாக நட்சத்திரம், கன்னி - புரட்டாசி, அறுவைமீன் - சித்திரை நட்சத்திரம்

உரை:

கார்த்திகைப் பெண்டீர் களிப்படைய வைகாசி விசாகத்திரு நாளில் முன்பு முருகப்பெருமான் உதயம் செய்தாருளினார், அவ்வாறே பொருந்துகின்ற புரட்டாசித் திங்களில் சிறந்த சித்திரை விண்மீனில் நம் பெருமான் மானுடக் கோலம்தரித்தருளினார்கள்.   

அத்துடன் மானுடக் கோலம் தரித்தருளியதை உலக மக்களுக்கு உணர்த்திக் காட்ட தெய்வத் திருமருதூரில் தற்பொழுதுஅவதாரம் செய்தருளினார்கள்.   

அப்படிப் பிள்ளைப் பெருமான் அவதாரம் செய்தருளியதால் எளியவராகிய நம்மிடத்து ஏற்படும் வினை, காமம், வெகுளி, மதம், மலம், மாயை என்னும் தீய களைகளின் முளைகளை உண்டருள முற்பட்டாற்கள்,

அத்துடன் அமையாமல் உள்ளம் உவந்து புண்ணியமே பொருந்திய சின்னம்மையிடத்தும் திருமுலைப்பால்உண்டருளினார்கள்.   


                                                        ============


(திருப்பெயரின் மேன்மை)

திருமுகங்கண் டவர்யாரே ஆயினுங்கண் டளவேதீ
தொருவிமயக் கொழிந்தவர்தாஞ் செய்வனவும் முறுவனவும்
தரும்உணர்ச்சி முக்குற்றத் தடையறஆங் குறலானும்
அருள்அன்பின் புறலானும் அல்லல்எலாம் அறலானும்.   (16)

உரை:

தெய்வத் திருமருதூரில் உதயம் செய்தருளிய நம்பெருமானின் தெய்வ சந்நிதானத்தைக் கண்டவர் எத்தகைய தாழ்ந்தநிலையிலும் இருந்திடலாம், அத்தகையவர் நம் பெருமானின் திருச்சமுகத்தை அன்போடு கண்ட அளவில் உண்டாகும்மாற்றங்கள் இவையே!

அவ்வாறு தீமைகள் அகற்றப்படும், ஐயம், திருபு, மயக்கக் குற்றங்கள் ஒழிக்கப்படும்.   பிறவித் துன்பங்கள் முற்றாகப்போக்கப்படும் உடன் அன்பும், அருளும், இன்பமும் உரித்தாக்கப்படும்.   

அவ்வளவோ? ஐம்பெரும் பாவங்களும் அறுக்கப்படும், சூது, வாதுகள் அனைத்தும் தொலைக்கப்படும்.   


                                                            ============

(பெரும் பெயரின் பெற்றிமை)

பாதகசூ தகங்கள்அறப் பணலானும் பாவணையாய்க்
கோதறுபா வனைக்கெட்டாக் கொள்கைத்தாய் உறலானும்
மேதகுதன் நிலைஆக்கி நிலைப்பயனாகக் குறல்ஆதி
வேதகத்தா னும்பொருள்கொள் வெளிப்படையிற் புலப்படவே.   (17)

உரை:

நம் பெருமானின் அருட்பெயரோ தெய்வ பாவனைக்குரிய மறைமொழியே ஆகும்.   மற்றும் குற்றங் குறைகள் சற்றும் இல்லாததெய்வ பாவனைக்கும் எட்டாத கோட்பாடு உடைய மறைமொழியும் ஆகும்,

அத்தகைய தெய்வப் பெயரோ நம் பெருமான் அடைந்திட்ட பேரனுபவத்தினையும், நமக்கு உண்டாக்கித்தரும், அவ்வனுபவம்என்றும் நிலைத்து நிற்கும்படியும் செய்திடும்.   மேலும் பேரின்பத்தில் திளைக்கவும் செய்திடும்.   மேலும், பேரின்பத்தில்திளைக்கவும் செய்திடும், அத்தகைய மேன்மை தாங்கியது அவர்களின் அருட்பெயர்.   

ஆதலின் வள்ளலின் அருட்பெயர் சமரச சுத்த சன்மார்க்க மெய்ப் பொருளாக ஒளிர்வது வெளிப்படை.   

                                                       ============ 


(திருமேனிக்கு தெய்வப் பெயர் பெற்றமை) - இராமலிங்கம்

உருநாமம் இராமலிங்கம் எனக்கொண்டார் ஓங்கருளால்
குருநாம மந்திரமாக் கொண்டுய்ந்தார் உயநினைந்தார்
பெருநாம மந்திரத்தைப் பெற்றிஅறி யார்எல்லாம்
திருநாமம் இதுபிள்ளைத் திருநாமம் என்பாரே.   (18)

உரை:

ஆதலின் நம்பெருமான் தம் திருமேனிக்கு 'இராமலிங்கம்' என்னும் தெய்வத் திருப்பெயரைத் தரித்துக் கொண்டார்கள்.   

மேலே சொல்லி வந்த பயன்களை முற்றிலும் தருவதற்காகவே அவ்வாறு தரித்துக் கொண்டார்கள், திருவருட்பேறு என்றும்ஓங்கி ஒளிரும் என்பதற்காகவே அப்பெயரைத் தரித்துக் கொண்டார்கள்.   ஆதலின் பிறவிப் பெருங்கடலை விட்டு உயர்ந்திடவிரும்பியவர்கள் அப்பெயரே தம் சற்குருநாதரின் தெயவத் திருமந்திரமாக ஏற்றுக் கொண்டு உயர்ந்து விட்டார்கள்.   

ஆனால் அந்தோ! அத்தகைய பெரும் பேற்றிற்கு உரித்தாய 'இராமலிங்கம்' என்னும் திருமந்திரத்தின் பெருமையைப் பலர்அறியாதவர்கள் இருக்கிறார்கள்.   

அம்மட்டோ? "இஃது அழகிய பெயர்; குழந்தை பருவத்தே வள்ளற்பெருமானுக்குச் சூட்டப்பட்ட பெயர் என்றும் அறியாமல்உரைக்கின்றனர்".   

                                                          ============

(வள்ளல் வளர்ந்து ஓங்கியமை)

பாசம்எனக் கிடந்தேனைப் பசுஆக்கிப் பருவம்பார்த்
தாசகல உணர்த்திஅருள் ஊட்டம்மை அப்பனுமாம்
பேசரிய பெரியாரைப் பேயுணர்வேன் பேசறியேன்
தேசுவரும் அகவைசிறந் தார்எனவும் சொலஇயைந்தேன்.   (19)

உரை:

நாம் எல்லாம் முன்பின் அறியாத பெரும் அறியாமை இருளின் அகப்பட்டு மூழ்கிக் கிடந்தோம், அத்தகைய நமக்கு மானிடப்பிறவி ஈந்து, மனமாசுகளை நீக்கி, அருட்பாங்கினை ஊட்டுவிக்கும் அம்மையும் அப்பனும் வள்ளலே!

அத்தகைய பெருமானின் பெரும்புகழை வாழ்த்திட சிறுதும் முயலாமல் இருக்கின்றோம், இனியேனும் முயன்று போற்றி மேம்பாடு அடைவோம்.   

                                                         ============

 (ஓதாது உணர்தல்)

மீதானத் துயர்பள்ளி மேவஎமை வைக்கும் எங்கள்
மேதாவைப் பள்ளிவிழைந் தருளிற்றென் றுரைப்பதெவன்
ஓதாமே எமைஎல்லாம் உணர்த்தும்உரு வெளியைஅச்சோ
ஓதாமே உணர்ந்ததென்பார் உணர்கிலார் ஒருவியப்போ.   (20)

உரை:

அருளாம் மேல்நிலையில், பேரின்ப இருக்கையில், எம்மை எல்லாம் பொருந்தவைப்பவர் இராமலிங்கப் பெருமான்.   

அத்தகைய எங்கள் சற்குருநாதர் பள்ளியில் சேர்ந்துப் படித்திட விரும்பினார் என்றும் பலரும் பலவாறாகப் பேசிப் பேசிப்பார்ப்பது எதற்காக?

எமது சற்குருநாதர் எம் போன்றவர் ஓதி உணராமல் யாவும் இயல்பாக அருளால் உணரும்படி செய்யும் மெய்ஞானத்திருமேனியர் என்பது தான் பெருவியப்பு!

அப்படி இருக்கும் போது எமது ஞானதேசிகரை ஓதாமல் யாவும் உணர்ந்திட்டார் என்கின்றார்கள் நல் உணர்வில்லாமல்.   இஃது ஒருவியப்போ?



  - தொழுவூர் வேலாயுத முதலியார்



No comments:

Post a Comment