Search This Blog

Wednesday, December 25, 2013

ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய அனுபவப் பதிகம்

முருகதாச சுவாமிகள் என்றும்,

திருப்புகழ் சுவாமிகள் என்றும் விளங்கிய
ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள்,

நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார்

மீது பாடிய

அனுபவப் பதிகம்.


பதிக விளக்கம்: இப்பதிகம் நமது பெருமானின் வருகையை குறித்தது,


நமது பெருமானின் சித்திவளாக பேற்றினை அடுத்து அவரின் வருகையை குறித்து இறைவன் ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகளிடம் உரைத்த செய்தி இது,
இது அவரின் அனுபவம் ஆகலின், இப்பதிகம் அனுபவப் பதிகம் என்றானது,


அனுபவப் பதிகம்

நேரிசை வெண்பா

திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க!

தொண்டென்றுஞ் செய்யத் துணிவா ரனைவருக்குங்
கண்டென்றினிக்குங்கவிப்பனுவல் - விண்டெனுற
வானவட லூரா னறைவிட் டெழுவானென்
றியானறைவ தீசனரு ளே.


பதம் பிரிக்கப்பட்டது:

தொண்டுஎன்றும் செய்யத் துணிவார் அனைவருக்கும்
கண்டுஎன்று இனிக்குங்கவிப்பனுவல் - விண்டெனுற
வானவட லூரானறை விட்டெழுவான் என்று
யான்அறைவது ஈசன் அருளே.

======================

கொச்சகக் கலிப்பா

ஆனந்தத் திருகூத்தா லைந்தொழிலும் புரிகின்றோன்
மீனஞ்சும் விழிநல்லார் வேட்கையற வினையேன்பான்
மானங்கொண் டறையூடு மறைந்திருக்கும் வடலூரான்
வானங்கண் டின்பமெய்த வருவானென் றுரைத்தானே - 1


பதம் பிரிக்கப்பட்டது:

ஆனந்தத் திருகூத்தால் ஐந்தொழிலும் புரிகின்றோன்
மீன்அஞ்சும் விழிநல்லார் வேட்கைஅற வினையேன்பால்
மானங்கொண் டறையூடு மறைந்திருக்கும் வடலூரான்
வானங்கண்டு இன்பம்எய்த வருவான்என்று உரைத்தானே - 1

======================
பெண்ணுருவ மொருபாதி பெற்றிருக்கும் பீடுடையான்
கண்ணுரிமை தானிமில்லார் கடைத்தலையிற் றிரிவேன்பால்
எண்ணம்வட லூர்ப்புலவ னிருட்டறைவிட் டெழுந்தொருக்கான்
மண்ணுலக மீடேற வருவானென்று ரைத்தானே. - 2


பதம் பிரிக்கப்பட்டது:

பெண்ணுருவம் ஒருபாதி பெற்றிருக்கும் பீடுஉடையான்
கண்ணுரிமை தானிமில்லா கடைத்தலையில் திரிவேன்பால்
எண்ணம்வட லூர்ப்புலவன் இருட்டறைவிட் டெழுந்தொருக்கால்
மண்ணுலகம் ஈடேற வருவான்என்று உரைத்தானே. - 2

======================
கண்டமதிற் கறையெய்தக் காரால முண்டபிரான்
புண்டருநெஞ் சினனாகிப் புலர்கின்ற பொல்லேன்பாற்
றண்டலைசூழ் வடலூரான் றனியறைவிட் டினியோர்கால்
வண்டமிழ்ச்சீர்க் கனியோங்க வருவானென் றுரைத்தானே. - 3


பதம் பிரிக்கப்பட்டது:

கண்டம்அதில் கறைஎய்தக் கார்ஆலம் உண்டபிரான்
புண்டருநெஞ் சினன்ஆகிப் புலர்கின்ற பொல்லேன்பால்
தண்டலைசூழ் வடலூரான் தனிஅறைவிட்டு இனிஓர்கால்
வண்தமிழ்ச்சீர்க் கனிஓங்க வருவான்என்று உரைத்தானே. - 3

======================
பொற்றையொரு வில்லாகப் புவியூர்ந்து புரஞ்சென்றோன்
பற்றைவென்றோர் தங்களையும் பதயாம லிகழ்வேன்பால்
அற்றையிற்சிற் சிலரோங்க அறையுட்போம் வடலூரான்
மற்றையவர் கண்கூச வருவானென் றுரைத்தானே. - 4


பதம் பிரிக்கப்பட்டது:

பொற்றைஒரு வில்லாகப் புவிஊர்ந்து புரம்சென்றோன்
பற்றைவென்றோர் தங்களையும் பதயாமல் இகழ்வேன்பால்
அற்றையிற்சிற் சிலர்ஓங்க அறைஉட்போம் வடலூரான்
மற்றையவர் கண்கூச வருவான்என்று உரைத்தானே. - 4

=====================
நம்புமவ னிமித்தமொரு நாரியிடந் தூதானோன்
வெம்புதுயர்க் காதாரமா மிடிப்பட்டு மெலிவேன்பால்
அம்புவியெல் லாமறிய வறையுட்போம் வடலூரான்
வம்புரைப்பார் பலர்நாண வருவானென் றுரைத்தானே. - 5


பதம் பிரிக்கப்பட்டது:

நம்பும்அவன் நிமித்தம்ஒரு நாரியிடம் தூதூஆனோன்
வெம்புதுயர்க்கு ஆதாரமா மிடிப்பட்டு மெலிவேன்பால்
அம்புவிஎல் லாமறிய அறையுட்போம் வடலூரான்
வம்புஉரைப்பார் பலர்நாண வருவான்என்று உரைத்தானே. - 5

====================
நீராறும் பனிமதியு நெடுஞ்சடையிற் புனைபெம்மான்
பேராசைக் கடலினிடை பிழைபட்டுக் கிடப்பேன்பாற்
சீராறும் வடலூரான் சிற்றறைவிட் டினியிங்கு
வாரானென் பவர்கண்முன் வருவானென் றுரைத்தானே. - 6


பதம் பிரிக்கப்பட்டது:

நீராறும் பனிமதியும் நெடுஞ்சடையில் புனைபெம்மான்
பேராசைக் கடலினிடை பிழைபட்டுக் கிடப்பேன்பால்
சீராறும் வடலூரான் சிற்றறைவிட்டு இனியிங்கு
வாரான் என்பவர்கண்முன் வருவான்என்று உரைத்தானே. - 6

==================
கஞ்சனடுத் தலைகொய்து கரத்தேந்தி யிரந்துண்டோன்
நஞ்சயின்ற மீனென்ன நாநிலத்திற் சுழல்வேன்பால்
நெஞ்சறிய வடலூரா னீறணியார் முதலாய
வஞ்சரையெல் லாங்கெடுக்க வருவானென் றுரைத்தானே. - 7


பதம் பிரிக்கப்பட்டது:

கஞ்சநடுத் தலைகொய்து கரத்துஏந்தி இரந்துஉண்டோன்
நஞ்சயின்ற மீன்என்ன நாநிலத்தில் சுழல்வேன்பால்
நெஞ்சறிய வடலூரான் நீறணியார் முதலாய
வஞ்சரைஎல் லாம்கெடுக்க வருவான்என்று உரைத்தானே. - 7

=================
விசையனிரு விழிகாண வேடனுருக் கொடுசென்றோன்
தசைநுகர்வார் தமையேசச் சலியாத தமியேன்பால்
திசையறிய வடலூரிற் செழுந்தமிழ்ப்பா வலன்தீயோர்
வசைமுழுதுங் கெடமீண்டு வருவானென் றுரைத்தானே. - 8


பதம் பிரிக்கப்பட்டது:

விசையன்இரு விழிகாண வேடன்உருக் கொடுசென்றோன்
தசைநுகர்வார் தமையேசச் சலியாத தமியேன்பால்
திசையறிய வடலூரிற் செழுந்தமிழ்ப்பா வலன்தீயோர்
வசைமுழுதும் கெடமீண்டு வருவான்என்று உரைத்தானே. - 8

=================
முற்கிரியைக் குரியானை முருகோனைத் தருமூர்த்தி
கற்கிணற்றாற் பலவாறு கலக்கமுறுங் கடையேன்பால்
நற்கிருபை வலியாடி நரர்வசைகொள் வடலூரான்
மற்கிளர்தோள் வேந்தர்தொழ வருவானென் றுரைத்தானே. - 9


பதம் பிரிக்கப்பட்டது:

முற்கிரியைக்கு உரியானை முருகோனைத் தருமூர்த்தி
கற்கிணற்றாற் பலவாறு கலக்கமுறுங் கடையேன்பால்
நற்கிருபை வலியாடி நரர்வசைகொள் வடலூரான்
மற்கிளர்தோள் வேந்தர்தொழ வருவான்என்று உரைத்தானே. - 9

================
நால்வருக்கன் றருள்செய்து நறுந்தமிழ்ச்சொற் றொடைகொண்டோன்
மேல்வருமா றுணராது வெதும்புகின்ற வினையேன்பாற்
சேல்வளநீர் வடலூரான் சிரிப்பார்கண் கரிப்பெய்த
வால்வளைத்தண் கடற்பாரில் வருவானென் றுரைத்தானே. - 10


பதம் பிரிக்கப்பட்டது:

நால்வருக்குஅன்று அருள்செய்து நறுந்தமிழ்ச்சொற் றொடைகொண்டோன்
மேல்வருமாறு உணராது வெதும்புகின்ற வினையேன்பால்
சேல்வளநீர் வடலூரான் சிரிப்பார்கண் கரிப்பெய்த
வால்வளைத்தண் கடற்பாரில் வருவான்என்று உரைத்தானே. - 10

================
அட்டவித மூர்த்தியுமா மவனருளால் வடலூரான்
வட்டநிலத் தினர்காண வருவானென் றுரைத்தபடி
இட்டமிகுந் திருப்புகழோ னியம்பியபாட் டினிதென்பார்
சிட்டவிதிப் படியாவுஞ் சிவன்செயலென் றுணர்ந்தோரே. - 11


பதம் பிரிக்கப்பட்டது:

அட்டவித மூர்த்தியுமாம் அவன்அருளால் வடலூரான்
வட்டநிலத் தினர்காண வருவான்என்று உரைத்தபடி
இட்டமிகும் திருப்புகழோன் இயம்பியபாட்டு இனிதுஎன்பார்
சிட்டவிதிப் படியாவும் சிவன்செயலென்று உணர்ந்தோரே. - 11


- ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள்.

No comments:

Post a Comment