Search This Blog

Sunday, August 13, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "போற்றி சங்கீர்த்தனம்"

7. போற்றி சங்கீர்த்தனம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

திருத்தகு மார்ப னூற்றின் இதழ்த்தவி சேறி வாழ்த்த
திதிக்கொரு சேய ராக்கம் அதைத்தெறு நாகர்போற்று
மருத்தகு போது மாற்றி உருத்திகழ் பாத போற்றி
மறைத்தனி நாத போற்றி மதிப்பரு சோதிபோற்றி
கருத்தரு பாச நீக்கிக் கதித்தரு நேச போற்றி
கணக்கறு வாதர் பாழ்த்த கதற்றொழி மாறு காட்டி
அருத்தியின் நீச னேற்குன் அடிப்பணி போத வாக்கும்
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (1)

கலிப்பகை நாச மாக்கக் கடிக்கமழ் பாத போற்றி
கலக்கற வாளுமாக்கிக் கழற்பணி யான வாற்றப்
புலப்பகை வீசி யேத்தும் இயற்றரும் ஈசபோற்றி
பொருப்புவில் நாணி பாப்பின் இசைத்துழல் சேர்வை
  வாட்டிச்
சலிப்பறு மூவர் காக்க ஒருப்படு நீத போற்றி
சதுர்த்தச லோகம் ஆர்த்த தவத்தனி நாதபோற்றி
அலக்கணி லாத வாழ்க்கை அளித்தருள் ஆதிபோற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (2)

மயக்குறு மூல நோய்க்கு மருத்தெனு மாசில் சீர்த்தி
வழுத்தறி யாத வோத்து மருட்கொடு நேடி யார்க்கப்
பயிர்ப்பதி லாது மூத்த பருக்கவல் சேரி வாழ்க்கை
பசைப்பில தாக வீழ்த்த எலுப்படை நாயி னேற்றுக்
கயக்குறு வேனெ னாத்த கடைப்படு பேதை ஒர்க்கில்
கழற்கணி தாகு பேற்றை இனிப்பெறு நாளெ னாக்கும்
அயர்ப்பறு சோதி போற்றி அவத்தொழில் நாச போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (3)
 
விதிக்குமு நூறு நாட்ட வனைக்கள வாத நோச்செய்
தெனக்குயர் பேற தாற்றல் வினைக்கொடு கால கூற்றுக்
கதத்தினி லேது நீத்தக் கணத்தினி லோடு கூட்டைக்
கதிக்கினி தாகி யேற்ற துணைக்கொளு மாறொ ரேற்ற
வதித்தனை ஓர்கி லாப்பொய் மடப்பிடி போலி யார்க்கு
மயக்குறு பேயனாற்று மதித்திற மேதுன் சீர்த்தி
அதிற்புகு மாற தாக்கிப் பதப்பணி சாலு மாக்க
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி     (4)

துறைத்துறை நூல்கள் பார்த்துப் சுழற்படு கீடம் ஏய்ப்பத்
துடிப்புறு வேனை நோக்கித் துகட்கெட வாள தாக்கி
மறைச்சிர நேடியாற்ற அரற்றுறு மாறு காட்டி
மயர்ப்பறு மாசு போக்கி வளர்த்தருள் பாத போற்றி
சிறைப்படு மாய வாழ்க்கைத் திறத்துள மாலல் வீழ்த்துன்
திருப்பணி சாலு மாற்றப் பெறிற்குரு நாத போற்றி
அறத்துறை வாழ வாழ்த்து மவர்க்குற வாதி போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (5)

பழிப்பறு வேத வாக்கி னியற்கரு வாகி நோக்கு
பவர்க்கறி வாகி யோர்க்கு மொளித்தனி நாத போற்றி
யிழக்குழல் பேதை யாத்த புலைச்சிறு போத போற்றி
யிணைப்பரு பாத மேத்து மொழிற்பர போத போற்றி
விழுத்தொழின் மூவர் போற்று முதற்பொரு ளாதி போற்றி
விரைக்கழ லோது வார்க்குத் தனித்துணை யாதிபோற்றி
யழுக்கடை நாயி னேற்கு னடிப்பணி யாக வார்த்த
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (6)

மலைத்தனி மாது சீர்த்த வினிப்புடை பாதி போற்றி
மணிப்பணி சூடி போற்றி மகத்தொழில் சாடி போற்றி
சலத்தவ மாது கூர்த்த தனிச்சடை யாள போற்றி
தவத்தர்கள் வாழ்வு போற்றி சகத்தொரு தாதை போற்றி
கொலைத்திகழ் சூல வேற்கைக் குருச்சுடர் மேவு நோக்கின்
குணக்கட லாதி போற்றி குகற்குய ராதி போற்றி
அலைப்படு நீல மார்த்த வணிக்கள நாத போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (7)

கனித்தநல் வாரர் வாழ்த்து மரைப்பொரு தாள போற்றி
கலைத்தலை மேவு சீர்த்த கவித்தொளிர் பாத போற்றி
மனித்தருள் போலி வேற்று வகைப்புகல் யாது நோற்பல்
மடக்கொடி பாதி போற்றி மறைக்குரு நாத போற்றி
துனிக்கிக லாதி போற்றி துணைத்துணை யாதி போற்றி
சுகக்கட லாதி போற்றி சொலற்கரி தாதி போற்றி
அனித்தமி லாத வாற்ற லளித்தரு ளாதி போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (8)

விடைத்தனி யேறு சூட்டு விறற்கொடி யாள போற்றி
மிகத்துரை கூறு மாந்தர் விடற்கரு வார போற்றி
கடற்கரி தாகி யார்த்த விடத்துண வாள போற்றி
கயற்கணி மாது சீர்த்த துணைப்பொரு ளாதி போற்றி
மடற்புனை தாம மார்த்த சடைப்பிறை யாள போற்றி
வடற்பதி வாண போற்றி மனத்துணை யாதி போற்றி
அடற்புடை சூல மாக்கொ ளழற்புனை கோல போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (9)

படைப்புடை வாண போற்றி பகைப்புர நாசபோற்றி
பணிப்புக ழாள ரேத்து பகுக்கரு சோதி போற்றி
தடப்புனல் சூடி போற்றி தவத்துற வாதி போற்றி
சகத்தொரு நாத போற்றி சகத்திர நாம போற்றி
வடற்பதி வாச போற்றி மணிக்கொளி யாதி போற்றி
வழக்கர்கள் காண லாற்றில் வழுத்தரு தூய போற்றி
அடற்கரு கால னூக்க மழித்தருள் பாத போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (10)

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

No comments:

Post a Comment