Search This Blog

Saturday, August 12, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய திவ்விய நாமாமிர்தம்

5. திவ்விய நாமாமிர்தம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை


வேதி யோமன்பு விளக்கிய கழல்கள்
வீக்கி மாமறைச் சிலம்பணிந் தொளிரும்
பாத வோம்பரம் பரசிவ சிவவோம்
பங்க யத்தனு மங்கைமார் பகத்து
நீத னுந்தொழு நீதவோ மெங்கள்
நெஞ்ச மேவிய தஞ்சமோம் அளவா
ஆதி யோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே (1)

சொல்லி னன்முடி வீற்றிருந் தருளுந்
தூய வோம்பரஞ் சோதியோம் நெஞ்சக்
கல்லை மென்கனி யாக்கிய மூன்று
கண்ண வோமருட் கண்ணவோங் காதல்
எல்லை யோமெனை யாளுடை இராம
லிங்க வோம்பக லிரவொன்று தானும்
அல்லை யோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே. (2)

பழுத்த மெய்யன்பின் சுவைமுழு துண்ட
பாத வோம்பசு பதிசிவ சிவவோம்
முழுத்த மூடனே னுளங்குடி கொண்ட
மூர்த்தி யோமருட் டீர்த்தவோம் சிவவோம்
விழுத்த குந்திருத் தில்லையம் பலத்து
வேதி யோமுத்தி வித்தக வன்பு
வழுத்த வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே. (3)

என்னை யின்னிதா யாண்டு கொண் டருளும்
ஈச வோம்பாச நாசவோஞ் சிவவோம்
முன்னை வல்வினை முற்றுமோய் வுறவே
உரைக்கு மூர்த்தியோந் தீர்த்தவோஞ் சிவவோம்
தன்னை யேநிக ருந்தய வுடைய
சம்பு ராமலிங் கப்பெயர் தரித்த
அன்னை யோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (4)

எண்ணு மெண்ணங் ளெண்ணிய வண்ணம்
இனிது ணர்ந்தேழை யோங்களுக் கருளும்
வண்ண வோமருள் வண்ணசெவ் வண்ண
மாய்வந் தகப்பட்ட மாகழன் முடியாப்
பண்ண நல்லருள் பண்ணிய வெங்கள்
பண்ண வபழ மறைமுழு தேத்து
அண்ண லோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (5)

ஏத்து வாருளத் தின்புரு வாகி
யிருக்கும் பாதவோ மெங்குலம் விளங்கப்
பார்த்துக் கண்ணரு ளாலுளம் விளக்கும்
பரம வோம்பழ மலப்பிணி யவிழ்க்கச்
சோத்த மாலைக ளுக்குளங் களிக்குஞ்
சோதி யோந்தில்லை யாதியோ மரவோம்
ஆத்த வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (6)

முடிவி லன்பின ருள்ளப்பூங் கோயில்
முழும ணச்சுட ரோஞ்சிவ சிவவோம்
படியி லென்றலை தீட்டிய செந்தாள்
பங்க யப்பரஞ் சோதியோம் நாயேன்
குடியெ லாம்விளங் கப்பெருங் கருணை
கொண்ட கோலத்துக் குருபர சிவவோம்
அடிக ளோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (7)

பொய்ய தேமுழு தும்வடி வாகிய
புலைய னேன்பொய்ப் புரைமுற்றும் போக்கிய
மெய்ய ருள்கொழிக் கும்குரு ராயவோம்
வேத ஆகமம் ஓதுசெம் பாதவோம்
பைய மானிடங் காட்டிய ஆளுடைப்
பரம வோம்பர மாபரஞ் சோதியோம்
ஐய வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (8)

ஞான நாடகங் கட்டியா ருயிர்கண்
ஞாலம் யாவையும் நடிப்பித்த நலத்து
மோன வார்கழற் பங்கய முனியோ
முதலு மீறுமி லாதமு தல்வவோம்
ஈன னேனெஞ்சி னென் றும்பி ரிந்திடா
வெந்தை யோமருட் டந்தையோந் தாயோம்
ஞான வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (9)

புத்தி யூருக்கப் புறம்பதின் காதப்
பரப்புக் கப்புறம் போய்க்குடி யிருந்த
மத்த னேன்றலைக் கேவலி தன்று
மலர்க்க ழல்வைத்து மலமெலாங் கழவச்
சித்த மேகுடி கொண்டருள் செய்த
செல்வ மேசிவ னேராம லிங்க
அத்த வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (10

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை


No comments:

Post a Comment