4. அருணாம மந்திராமிர்தம்
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அந்த மாதியு மகன்றரு மறையின்
அமலச் சென்னியு மாகமச் சிரமுஞ்
சந்த மாலய னாதிய வானோர்
தடங்கொள் சேகர முந்தட வரிதாய்ச்
சிந்தை மெய்ம்மொழி யானுமிங் கெளிதாய்த்
தீய னேற்குவந் தகப்பட்ட செந்தாள்
எந்தை யோஞ்சிவ ஷண்முக சிவவோம்
இராம லிங்கவோஞ் சிவாயசற் குருவோம். (1)
பாசம் யாவையுஞ் கழன்றுபொய் கழுவிப்
பருவெ லாங்கெட என்னுளக் கோயில்
வாச மாகவந் துட்குடி கொண்ட
வாச நாண்மலர்ப் பாதவண் புகழைப்
பேசு மாமறை பெரிதயர்த் திட்ட
பேசு மாறெவன் பேரருட் பிரகாச
ஈச ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (2)
மூல மாயையில் தூங்கிய என்னை
முழுது ணர்த்திடக் கெழுமிய உடலம்
ஞாலம் யாவையும் வைத்தருள் விளக்கும்
ஞான மாமய நாண்மலர் அடிகள்
சீலமார்புகழ் செப்பவந் தருளும்
தேவர் சிங்கமே திருவருட் பிரகாச
ஏலும் ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (3)
கல்லை யுங்கடுப் புறாதவென் னெஞ்சக்
கருங்க லூங்கனி யாய்ப்புல னுகரா(து)
ஒல்லை மாய்வுற விழங்கியின் புருவாய்
உரைக்குந் தோறும்என் உடலெலாம் இனிக்கும்
செல்வத் தாமரைத் தாள்மலர்க்(கு)எனையும்
தேர்ந்து கொண்டருள் செய்யருட் பிரகாச
எல்லை ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (4)
காணு வார்இரு கணகளும் மனமும்
கரைந்து தங்களைக் காணல ராக
மாணு லாந்திரு அருளினால் விழுங்கி
வைத்து மாசறக் கழுவியின் பூட்டும்
தாணு வாகிய சரணவா ரிசம்என்
தலைக்கு மாமுடி யாக்கிய அமல
ஏணின் ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (5)
கண்ட காட்சியும் காணுறு பொருளும்
காணு கின்றதும் காட்டுகின் றதுவும்
கொண்ட மாமறை உபநிடக் கோயில்
கொண்டி ருந்ததுங் கொடியனேன் உளத்தைப்
பண்டை யேவிழுங் குற்றுமீட் டுமிழாப்
பண்பு மிக்கது மாங்கழல் பதித்த
எண்டங் கோஞ்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (6)
இன்னல் அற்றுயிர்க ளின்பமாங் காங்கே
எய்தி எய்துற அதுவது ஆகி
மன்னி ஓய்வில்லா வான்சுவை அமுதாய்
மானி டங்காட்டி வலிதுவந் தெனக்கே
தன்னிகர் வைப்பிற் கிடைத்திடு செந்தாள்
தாம ரைப்புகழ் சாற்றுமா சாற்றும்
என்னை ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (7)
ஞான நாடரு மைந்தரு மோன
வரரு நாடரு மாண்பதாய்ப் பொதுவின்
ஞான நாடக நவிற்றிமெய் யடியர்
நலங்கொள் சிந்தைப்பூங் கோயில்கொண் டருளும்
மான வார்கழற் புகழ்வழி வழுத்த
வந்த கப்பட்ட மாநிதி மறைகள்
ஈனு ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (8)
பத்தி யுண்டுதொண் டானவர் பெரிய
பளக றுக்கவே யருட்கொடி கட்டி
முத்தி மாமகள் களிப்புற வாழும்
முழுது மெய்யறி வின்பமாங் கழல்கள்
வைத்து வைத்துளந் தலைவிழி யணைக்க
வந்த கப்பட்டவலிதெனக் கந்தோ!
வித்தி னோஞ்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (9)
வாய்ம ணக்குற மனமெலா மணக்க
வையம் வானக மற்றுள மணக்கத்
தூய்ம ணத்தமா மறைமுடி மணக்கத்
தூய ஆகமத் தொல்சிர மணக்கத்
தாய்ம ணக்குறுங் கருணையி னாயென்
தலைம ணக்குறத் தரித்தபூங் கழல்கள்
ஏய்ம ணத்தஷண் முகசிவ குருவோம்
இராம லிங்கவோஞ் சிவாயசற் குருவோம். (10)
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
------------
No comments:
Post a Comment