Search This Blog

Friday, August 18, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "திருக்கழற் சந்நிதி விண்ணப்பம்"

11. திருக்கழற் சந்நிதி விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

கொடிக்குக்காய் கனங்கொலெனுங் கோலவருண் மொழியும்
குணம்பெறவீங் கிவன்பாலி ரக்கம்வர விலைவெம்
மிடிக்கொருமா மருந்தாம் பொன் னம்பலத்தி னருளால்
விளங்குநடங் காணாத வேற்றுமையா னென்றங்
கடுத்தருளிச் செய்தவரு ளப்பாடும் ஆங்கே
யமலஅருட் கரத்தாலே கைபிடித்த வாறும்
தடித்தமனச் சிற்றேழை யறிகிலேன் அரசே
தவிக்கவிடேல் ஏன்றுகொலாய் சற்குருமா மணியே. (1)

ஆண்டநாள் அஞ்சலென்ற அருட்டிறமும் ஆங்கே
அருண்மொழிமேல் ஒருமொழியின் றெனக்கருளு திறனும்
பாங்குறப்பின் ஆங்காங்கே பருவரல்க ளுறுங்கால்
பரிந்தவரு ளுளப்பாடும் பாவியனை ஈங்கு
வீம்பறவென் மடப்பிள்ளாய் அவதரித்தாய் என்ன
விளம்பியதும் காலனுனை யணுகலிலை யென்ன
வோம்படுத்துச் சொன்னதொரு மொழியும் உண்மை
யுணர்கில்லே னுடையானே கடையேனுக் கிரங்கே. (2)

அன்றொருபுன் கனவினிடை யருளாலே வந்தென்
ஆதரவு னேக்காவாங் குறாவரையென் னுரைக்கும்
நன்றுபொருண் மொழிந்தனை நாடாமே மறந்த
நவைநோக்கா துடையானே! நனவினுநன் கருளி
வென்றிபெறக் கருணைசெய்யும் வேதியனே! துரையே!
வியலுமருட் பிரகாச மேதக்க மணியே!
நின்றுலகம் ஒருமூன்றும் ஏத்தமணி மன்றம்
நின்றவனே குன்றவில்லி நீள்கருணைக் கடலே! (3)

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

-----------------------

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "அற்பித்த விண்ணப்பம்"

10. அற்பித்த விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

தண்ணார் கொன்றையினாய் தமிழ் மெய்ப்பய னானவனே
அண்ணா வாருயிரே அணி மன்றவ ஆரழல்போல்
வண்ணா வானமுதே வட லூருறை மாணிக்கமே
எண்ணா யேழைகுற்றம் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (1)

சேலா டும்விழியா ளவள் செய்தவங் காணவன்று
நூலார் மார்பினனாய் நுணு கும்நடை கொண்டவனே
மாலோ டயனறியா வட லூருறை மாணிக்கமே
ஏலாய் ஏழைகுற்றம் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (2)

கந்தா கற்பகமே கடை யேனிரு கண்மணியே
நந்தா மணிவிளக்கே நாயி னேனைப்பொ ருட்படுத்து
வந்தாய் மானிடனாய் வட லூருறை மாணிக்கமே
எந்தாய் குற்றமெண்ணேல் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (3)

தாயே தத்துவனே தந்தை யேயெந் தயாநிதியே
சேயே செழுந்துணையே சிவ னேசிவ லோகத்தனே
மாயா மாயம்வல்லாய் வட லூருறை மாணிக்கமே
ஏயே ஏழைகுற்றம் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே (4)

குருவே கோமளமார் கொடி யேரிடைக் கொம்பனையாள்
திருவே தெள்ளமிழ்தே சிறி யேனுளச் செய்யமலர்
மருவே மன்றுடையாய் வட லூருறை மாணிக்கமே
யிருவே றெண்ணலெந்தா யெம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (5)

கொடியே னெஞ்சகமே கோயில் கொண்ட குருமணியே
படிமே லொன் றுமிலாப் பாவி யேனைப் பொருட்படுத்து
வடிவோர் மானிடனாம் வட லூருறை மாணிக்கமே
அடிகேள் குற்றமெண்ணேல் அம்மா னென்னை ஏன்றுகொள்ளே. (6)

ஊழ்மா முளையமுதம் உண்ட வெம்முடை உத்தமனே
பாழ்மா மையலுறா வகை யிற்பரிந் தாண்டுகொண்ட
வாழ்வே மாமணியே வட லூருறை மாணிக்கமே
ஏழா யென்னவெள்ளேல் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (7)

ஊனாய் உயிரானாய் ஒளிர் ஞாயிறு தண்மதியம்
வானாய் தீநிலனீர் வளி யான மரகதமே
மானார் கண்ணிபங்கா வட லூருறை மாணிக்கமே
ஆனா ஆரமுதே யடி யேனையும் ஏன்றுகொள்ளே. (8)

ஆல நறுநிழலும் அணி தண்குருந் தின்னிழலும்
போலவென் புன்றலைமேற் புனை வித்தபொ லங்கழலாய்
மாலவோர் மானிடனாம் வட லூருறை மாணிக்கமே
யேலக் குழலிபங்கா வெம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (9)

போதே போக்குகின்றேன் அவமேவெறும் புன்மைகளால்
ஏதே செயக்கடவேன் இனி யேதுவிலே னுயுமா
வாதே துள்ளுளவென் வட லூருறை மாணிக்கமே
யீதோ கருணையெந்தாய் எம் பிரானென்னை ஏன்றுகொள்ளே. (10)


அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "குறையிரந்த விண்ணப்பம்"

9. குறையிரந்த விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

அப்பா ஆரமுதே அழ காவணி அம்பலத்துள்
செப்பார் கொங்கையொடு நட மாடிய சேவகனே
மைப்பா வியகண்டத்தாய் வட லூருறை மாமருந்தே
யிப்பார் தன்னிடையே எனை யென்செய எண்ணினையே (1)

அன்னே ஆருயிரேஅணி யம்பலத் தாரழகா
கொன்னே நாள்கழித்தேன் கொடுங் கூற்றுயிர் கொள்ளைகொள்ள
மன்னே மாதவமே வட லூருறை மாமருந்தே
என்னே திருவுளந்தான் எனை யென்செய எண்ணினையே (2)

அணியே ஆரழகா வரு ளம்பலத் தென்னரசே
பிணியேன் நினையமாட்டேன் வுன பெய்கழல் பேய்மதியால்
மணியே மாநிதியே வடலூருறை மாமருந்தே
எணியே நைதல் செய்வேன் எனை யென்செய எண்ணினையே(3) 

அய்யா ஆரழகா அடி யார்தம் மனத்தவனே
பொய்யா னபலவும் புரிந் தேயவம் போக்குகின்றேன்
மையார் கண்ணிபங்கா வடலூருறை மாமருந்தே
எய்யா வாறுரையாய் எனை யென்செய எண்ணினையே (4)

ஆனிடத் தஞ்சுமாடும் அணி யம்பலத் தாரழகா
ஊனிடத் தாசைவைத்தேன் உனை யோதல்நினைத்தல் செய்யேன்
மானிடக் கோலங்கொண்டாய் வட லூருறை மாமருந்தே
ஏனிடர்ப் பாடுவைத்தாய் எனை யென்செய எண்ணினையே.  (5)

அஞ்சலென் றாண்டவனே அம் பலந்திகழ்செம்பொற்குன்றே
பஞ்சடிப் பாவை நல்லாளுடை னாடிய பண்டங்கனே
மஞ்சணி பொன்மிடற்றாய் வட லூறை மாமருந்தே
எஞ்சலி லாதவனே எனை யென்செய எண்ணினையே  (6)

அன்றயன் மாலறியாஅடி யேன்றலைக் கேமுடியா
நன்றணிந் திட்டவனே பொது வாடிய நம்பரனே
வன்றுயர் நீக்கவல்லாய் வட லூருறை மாமருந்தே
என்றனி ஆருயிரே எனை யென்செய எண்ணினையே   (7)

அரியவ னேயரசே அணி யம்பலத் தாரமுதே
தெரிகிலன் நின்னையின்னம் செறி யுந்நெறி தேவதேவே
வரியர வார்த்தவனே வட லூருறை மாமருந்தே
இருவினை வல்லிபூண்ட எனை யென்செய எண்ணினையே   (8)

அரனே யம்பலவா வழ லாடிய வாரமுதே
மரனேர் வன்கணன் கல் மனமோவுரு காவலிது
வரனேர் மங்கைபங்கா வட லூருறை மாமருந்தே
இரவேன் உன்னையெந்தாய் எனை யென்செய எண்ணினையே(9)

அற்றவர்க் கற்றவனே அழ காவம்பலத் தாடல் செய்வாய்
குற்றமெலாம்படிகொள் கொடியேனிற்குறித்துக்கொள்ளேல்
மற்றுங்கொட விருந்தேன் வட லூறை மாமருந்தே
எற்றினி விண்ணப்பிப்பேன் எனையென்செய எண்ணினையே    (10)

ஆதனை ஆளுடையாய் அம் பலந்திகழ் ஆரமுதே
ஓதலி னியவனே ஒற்றி யூருறை உத்தமனே
மாதிடங் கொண்டபிரான் வட லூருறை மாமருந்தே
ஏதினிச் செய்யவல்லேன் எனை யென்செய எண்ணினையே      (11)

   
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

Sunday, August 13, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "முறையீட்டு விண்ணப்பம்"

8. முறையீட்டு விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

விடையத் தழ்த்தீ ருய்யும் படிக்கு வீடுஞ் காட்டில்லீர்
அடைய வென்னை யவலப் படுத்த லழகோ வருட்கையா
கடல்சூழ் வையம் பரவப் படுவீர் கண்ணே களைகண்ணே
வடலூ ரொடுமென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே(1)

அறவும் விடுக்கீ ருறநல் லருளுட் புகுத லதுவொட்டீர்
அறமுன் சொன்னீர் ரென்னை யவலப் படுத்த லழகேயோ
கறவை புனிற்றோ டுலவும் வடலூர் கண்ணே களைகண்ணே
மறமன் னியவென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்து போதிரே (2)

உமக்காட் படுத்தீ ரிடையே கள்ள வினையுற் றாளவே
அமைவுற் றிருந்தீ ரென்னை யவலப் படுத்த லழகேயோ
கமச்சூன் முகில்சேர் பொழில்சூழ் வடலூர்கண்ணே களைகண்ணே
மமதை உறுமென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே   (3)

கெடவே யுலக நடையிற் செலுத்தீர் கேடில் பதந்தாரீர்
அடைபே ரருளீ ரென்னை யவலப் படுத்த லழகேயோ
கடனஞ் சுண்டீர் வானோர் உய்யக் கண்ணே களைகண்ணே
வடலுங் கொடியே னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே   (4)

நினையா திருக்க வொட்டீர் நீரா யுருக்கி யுயக்கொள்ளீ
ரணைமெ வியநீ ரின்ன மவலப் படுத்த லழகேயோ
கனைவா னுரிஞ்சும் பொழில்சூழ் வடலூர் கண்ணே களைகண்ணே
வனையா நெஞ்ச மிடங்கொண் டிருந்தீர் வாழ்ந்துபோதீரே   (5)

தாழ்வே படுத்தித் தாழ்ந்தாற் பொறுக்கா தெடுத்தீ ரெடுத்தாங்கே
ஆள்வா னிசையீரின்ன மவலப் படுத்த லழகேயோ
காழ்மா மரஞ்சூழ் வடலூ ரிருந்த கண்ணே களைகண்ணே
வாழ்வா னருளீர் வாளாங் கிருந்தீர் வாழ்ந்து போதிரே.          (6)

விணே யடிமை யெனப்பேர் பட்டேன் மெய்ம்மை நெறிகாணேன்
ஆணாய்ப் பிறந்திவ் வவல முழந்தேனழகோ வருட்கையா
காணீர் போலு மென்னோய் வடலூர் கண்ணே களைகண்ணே
மாணா வென்னெஞ் சிடங்கொண் டிருந்தீர் வாழ்ந்துபோதிரே.

கெட்டா லவமே நானே நீரே பழிபட் டீராளப்
பட்டே யொழிந்தே னின்ன மவலப் படவே படுமேயோ
கட்டார் புனல்சூழ் வேலி வடலூர்க் கண்ணே களைகண்ணே
மட்டா கரவென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே   (7)

பிறர்தந் திரமொன் றெண்ணேன் பிறிதுமதியேன் பொருளாக
அறமன் னியசே வடியல் லானா னவலப் படுவேனோ
கறுவில் கருணைக் கடலே புலியூர்க் கண்ணே களைகண்ணே
மறுவில் வடலு நெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்து போதிரே.    (8)

மறந்தான் மறக்கப் படுமோ வுமைநான் வடலூர் வாழ்ந்துள்ளீர்
அறந்தா னுரைத்தீ ரால நிழலி லவலங் களையீரோ
கறந்தான் கன்றோ டுலவு மொற்றிக் கண்ணே களைகண்ணே
மறந்தாழ் நெஞ்சில் வாளாங் கிருந்தால் வாழ்ந்துபோதீரே   (9)

எதுநான் செய்கேன் யாரே களைகண்ணெனைமுன் னாட்கொண்டீர்
புதுமா முகப்பே லுயுமா றுளதோ வவலம் புகுவேனே
கதுவா தொன்னுள் ளமர்ந்தீர் தணிகைக் கண்ணே களைகண்ணே
மதுவார் பொழில்சூழ் வடலூ ரிருந்தீர் வாழ்ந்து போதீரே.    (10)

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "போற்றி சங்கீர்த்தனம்"

7. போற்றி சங்கீர்த்தனம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

திருத்தகு மார்ப னூற்றின் இதழ்த்தவி சேறி வாழ்த்த
திதிக்கொரு சேய ராக்கம் அதைத்தெறு நாகர்போற்று
மருத்தகு போது மாற்றி உருத்திகழ் பாத போற்றி
மறைத்தனி நாத போற்றி மதிப்பரு சோதிபோற்றி
கருத்தரு பாச நீக்கிக் கதித்தரு நேச போற்றி
கணக்கறு வாதர் பாழ்த்த கதற்றொழி மாறு காட்டி
அருத்தியின் நீச னேற்குன் அடிப்பணி போத வாக்கும்
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (1)

கலிப்பகை நாச மாக்கக் கடிக்கமழ் பாத போற்றி
கலக்கற வாளுமாக்கிக் கழற்பணி யான வாற்றப்
புலப்பகை வீசி யேத்தும் இயற்றரும் ஈசபோற்றி
பொருப்புவில் நாணி பாப்பின் இசைத்துழல் சேர்வை
  வாட்டிச்
சலிப்பறு மூவர் காக்க ஒருப்படு நீத போற்றி
சதுர்த்தச லோகம் ஆர்த்த தவத்தனி நாதபோற்றி
அலக்கணி லாத வாழ்க்கை அளித்தருள் ஆதிபோற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (2)

மயக்குறு மூல நோய்க்கு மருத்தெனு மாசில் சீர்த்தி
வழுத்தறி யாத வோத்து மருட்கொடு நேடி யார்க்கப்
பயிர்ப்பதி லாது மூத்த பருக்கவல் சேரி வாழ்க்கை
பசைப்பில தாக வீழ்த்த எலுப்படை நாயி னேற்றுக்
கயக்குறு வேனெ னாத்த கடைப்படு பேதை ஒர்க்கில்
கழற்கணி தாகு பேற்றை இனிப்பெறு நாளெ னாக்கும்
அயர்ப்பறு சோதி போற்றி அவத்தொழில் நாச போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (3)
 
விதிக்குமு நூறு நாட்ட வனைக்கள வாத நோச்செய்
தெனக்குயர் பேற தாற்றல் வினைக்கொடு கால கூற்றுக்
கதத்தினி லேது நீத்தக் கணத்தினி லோடு கூட்டைக்
கதிக்கினி தாகி யேற்ற துணைக்கொளு மாறொ ரேற்ற
வதித்தனை ஓர்கி லாப்பொய் மடப்பிடி போலி யார்க்கு
மயக்குறு பேயனாற்று மதித்திற மேதுன் சீர்த்தி
அதிற்புகு மாற தாக்கிப் பதப்பணி சாலு மாக்க
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி     (4)

துறைத்துறை நூல்கள் பார்த்துப் சுழற்படு கீடம் ஏய்ப்பத்
துடிப்புறு வேனை நோக்கித் துகட்கெட வாள தாக்கி
மறைச்சிர நேடியாற்ற அரற்றுறு மாறு காட்டி
மயர்ப்பறு மாசு போக்கி வளர்த்தருள் பாத போற்றி
சிறைப்படு மாய வாழ்க்கைத் திறத்துள மாலல் வீழ்த்துன்
திருப்பணி சாலு மாற்றப் பெறிற்குரு நாத போற்றி
அறத்துறை வாழ வாழ்த்து மவர்க்குற வாதி போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (5)

பழிப்பறு வேத வாக்கி னியற்கரு வாகி நோக்கு
பவர்க்கறி வாகி யோர்க்கு மொளித்தனி நாத போற்றி
யிழக்குழல் பேதை யாத்த புலைச்சிறு போத போற்றி
யிணைப்பரு பாத மேத்து மொழிற்பர போத போற்றி
விழுத்தொழின் மூவர் போற்று முதற்பொரு ளாதி போற்றி
விரைக்கழ லோது வார்க்குத் தனித்துணை யாதிபோற்றி
யழுக்கடை நாயி னேற்கு னடிப்பணி யாக வார்த்த
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (6)

மலைத்தனி மாது சீர்த்த வினிப்புடை பாதி போற்றி
மணிப்பணி சூடி போற்றி மகத்தொழில் சாடி போற்றி
சலத்தவ மாது கூர்த்த தனிச்சடை யாள போற்றி
தவத்தர்கள் வாழ்வு போற்றி சகத்தொரு தாதை போற்றி
கொலைத்திகழ் சூல வேற்கைக் குருச்சுடர் மேவு நோக்கின்
குணக்கட லாதி போற்றி குகற்குய ராதி போற்றி
அலைப்படு நீல மார்த்த வணிக்கள நாத போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (7)

கனித்தநல் வாரர் வாழ்த்து மரைப்பொரு தாள போற்றி
கலைத்தலை மேவு சீர்த்த கவித்தொளிர் பாத போற்றி
மனித்தருள் போலி வேற்று வகைப்புகல் யாது நோற்பல்
மடக்கொடி பாதி போற்றி மறைக்குரு நாத போற்றி
துனிக்கிக லாதி போற்றி துணைத்துணை யாதி போற்றி
சுகக்கட லாதி போற்றி சொலற்கரி தாதி போற்றி
அனித்தமி லாத வாற்ற லளித்தரு ளாதி போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (8)

விடைத்தனி யேறு சூட்டு விறற்கொடி யாள போற்றி
மிகத்துரை கூறு மாந்தர் விடற்கரு வார போற்றி
கடற்கரி தாகி யார்த்த விடத்துண வாள போற்றி
கயற்கணி மாது சீர்த்த துணைப்பொரு ளாதி போற்றி
மடற்புனை தாம மார்த்த சடைப்பிறை யாள போற்றி
வடற்பதி வாண போற்றி மனத்துணை யாதி போற்றி
அடற்புடை சூல மாக்கொ ளழற்புனை கோல போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (9)

படைப்புடை வாண போற்றி பகைப்புர நாசபோற்றி
பணிப்புக ழாள ரேத்து பகுக்கரு சோதி போற்றி
தடப்புனல் சூடி போற்றி தவத்துற வாதி போற்றி
சகத்தொரு நாத போற்றி சகத்திர நாம போற்றி
வடற்பதி வாச போற்றி மணிக்கொளி யாதி போற்றி
வழக்கர்கள் காண லாற்றில் வழுத்தரு தூய போற்றி
அடற்கரு கால னூக்க மழித்தருள் பாத போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி         (10)

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "நம சங்கீர்த்தனம்"

6. நம சங்கீர்த்தனம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

திருத்தகும் ஆரண வாகம சிரத்தொளி யேவெளி யேயென
தியக்கற வாயுரை நாடரு சிறப்பினெர் மானிட நாடக
வுருத்திகழ் காரண நேயர்க ளுளத்தனி யாலய மேவிய
வுருக்க வலாயறி யாவறி வொளிக்கவ லாயெனை யாளென
இருத்திய வானவ ரேமுத லெவர்க்குமொ ணாவிய லார்பணி
யெனக்கென வேபொது வோவுற விசைத்திடு பாதந மோநம
அருத்தியி னோர்மட வாண்மகி ழறத்தனி மால்விடை யாய்நம
வருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (1)

வழக்கர்க ளாமறு வோரவர் மருட்டிகழ் பாசக வாசக
மதித்தவ மேபெறு நாள்கழி வழக்கற வேதன தாளிணை
முழுக்குறு சீரது வேபுனை முழுத்தவ ரேவலை யேநித
முயற்றுற வோர்மதி யேவர முளைத்தவெ னாதந மோநம
விழுக்கறு காரண காரிய மிசைக்கறி யாவடி வாயுல
கெவைக்குமொர் தாயக மாகிய விணைப்பத தாமரை நாண்மலர்
அழுக்கடை பேதையே னோர்முடி யமைத்தருணாளுமெ தோவினம்
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (2)

மலத்துழ லோர்சிறு கீடம தெனத்தகு பேதையை வாவென
மயக்கறு சீரடி யேபுனை வளப்பணி யாளர்கு ழுஉவிடை
விலக்கற வேயிரு நாமுனை விடுக்கில மேலினி வீணினின்
மிகுத்தலை யேனிலை வாயென விதித்தவ னேவினை யேனுள
நலத்தனி யாலய னேமறை நவிற்றரு சோதியெ னாயக
நகக்கொடி மாதர சாரணி நயத்தணி பாதித யாநிதி
அலக்ககெண லாமறு மாறரு ளறத்தனி வானவ னேநம
வருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (3)

குணக்கிது மேல்குட பாலிது வெனத்தெரி யேனெரு நாயது
குணத்தினு மேகடை யாகிய வெனக்கிணை யேனையு மோர் பொருள்
கணக்குசெய் வாய்புல வோரொடு கருத்தற வேநினை யேநினை
கவற்றிரு வாளர்கண் ஞானியர் கணத்திடை யாயவர் தாமெண
இணக்குறு சீரிது தானுற விசைத்தரு ளேதெது தானெனில்
எணிக்குணி மாறுள தோவுன தியற்புக ழோபெரி தாரிய
அணக்குறு வார்சுர ராதிய ரருட்கடை சேரிய நெடுபு
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (4)

எனைத்தெரி யேனெனை யோர்பொரு ளெனக்கொடு மாலலர்மேலய
னெனப்படு வார்பெரி யாரவ ரியற்கரி தாகிய சீரடி
தனித்துணை யேயுறு மாரியர் தவத்துறு வாயென வேவலி
தவக்கனி யேயுண ரேனின நினற்றிரு வாரரு ளோரியல்
மனித்தருள் போலிய னாதலின் மதித்தறி யேனருள் வாய்மையை
மயக்குறு வேனவ மேயினி வழக்குள வோசிவ னேசிவ
அனித்தமெ லாமற மானிட மணித்தவ னேயரு ணாசல
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (5)

வடித்தனி வேல்கொடு மாமலை மதத்தனி மாமுக னாசற
மலைத்தவ னேமலை யாளர்கள் வளர்த்தவ ளாசைய னேகுக
குடித்தெழு வாரிநி னாதருள் குளித்தவ மாமுனி யாரிய
குணக்கட லேகொடி யேனெரு குடிக்கிறை யேகுர வாவெனப்
படித்தில னேரினி னோர்புகழ் படிற்றுழல் வேனவ மேயெனில்
பகட்டிறை யாள்வரி னாருயிர் பதைத்திடு மேயென
நோவதென்
அடிச்சிறு நாயனை யேனினி யருட்படி யாகப ராபர
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (6)


படைத்திடு வானறி யாநெடு முடிச்சடை மேலர வோடொளி
பனிச்சிறு மாமதி பாதியை பழிப்பற வேபுனை வாயெனில்
விடைத்தனி கேதன னேயெனை மிறைப்படு போதையெ னாவெணி
விடப்படு மோவடி நீழலி லொதுக்கிட மேபெறு மேபல
கடைப்படு வேனிசை யேனுடல் கதிக்கிசை வாய்சில வோர்பகல்
கருத்துனி னாலும் தாவகை கணித்தறி வாயிசை யாதன
அடைத்திட லாரருளாவன வமைத்தரு ளாரிய நாயக
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (7)  

மறத்தொழி லோவரு மாமதில் வளர்த்தெழு தீயிடை வேவுற
மதித்தொரு மூவரை யேவல்கொள் வளத்தவ னேமலை
யாண்மகிழ்
திறத்தவ னேகரு ணாலய திகைப்பற வானிழன் மேவுபு
திருத்தவர் நால்வர்க ளாசறத் திருச்செவி யாரவு ணாவருள்
குறக்கொடி மாமவி மாசல குலத்திறை யோர்மரு காவென
குடிக்கொரு மாமுத லேயெமுள் குடிக்கொளு வாய்சிவதாசிவ
அறத்தனி நாததி லாபுரி யருட்பொது வாளந மோநம்
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (8)

கயற்கடு வேல்பழி நீல்விழி கனித்துவர் வாய்மட வார்முலை
கலிற்றலை நோவுற வேவிடி படப்படு மோவின மேல்வரு
துயர்க்குளெ லாமர சாகிய சொலப்படு சாவெனு மோர்பகை
துணுக்குற வேவரு நாளினிற் றுணைப்படு வாருள ரோபுவி
யியற்பல பேதமெ லாமெணி யிடர்ப்படு வேனல தாசற
விணைப்பரு சீரடி யோர்புக ழினைத்தொழு மாறெது வோமலர்
அயற்கரு மாமறை யோடுந லரிக்கரி யாயெளி யாயெமக்(கு)
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (9)

விரித்தனை மாமறை யாகமம் விதித்தனை யாருயிர் யாவையு
மிகுத்துயு மாறரு ளாயினும் விழற்கொடி யேனுண ரேனதைத்
திரித்தன னாய்மன மோடுபு தெருக்கடை யேயுழல் வேனொரு
சிறுத்தபு லாதிக ளேயுறச் சிரித்தகு பேதையெனாயிடில்
தரித்தன யேமதி யோடுபுல் சலத்தவ மாமக ளோடுறத்
தவப்பய னேதமி யோர்பிழை தனைக்குறி யேலுடையாய்சிவ
அருட்டுறை யாயற வாழிய வறத்தனி நாயகி நாயக
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (10)


வேறு

பிணிப்புறு மூல ஆணவப் பெயர்ப்புற வேத மோதுபு
பிணக்குறு பேத வாதியர் பிதற்றது நாடி யேயுழல்
வணத்தெனை  நேடி வாவென வலித்தென தாவி யோடுடல்
மதித்திடு காயம் யாவையும் வசப்பட வேகொ ளாதிய
கணக்கறு சீவ பேதமு மிணக்குறு பாத தாமரை
கடைப்படு பேதை யோர்முடி கருத்துளு மாக வேபுனை
வணித்தரு ளாதி யோநம வரட்டனை யாளு வாய்நம
அருட்பிர காசந மோநம அருட்பிர காசந மோநம. (11)


 அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

Saturday, August 12, 2017

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய திவ்விய நாமாமிர்தம்

5. திவ்விய நாமாமிர்தம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை


வேதி யோமன்பு விளக்கிய கழல்கள்
வீக்கி மாமறைச் சிலம்பணிந் தொளிரும்
பாத வோம்பரம் பரசிவ சிவவோம்
பங்க யத்தனு மங்கைமார் பகத்து
நீத னுந்தொழு நீதவோ மெங்கள்
நெஞ்ச மேவிய தஞ்சமோம் அளவா
ஆதி யோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே (1)

சொல்லி னன்முடி வீற்றிருந் தருளுந்
தூய வோம்பரஞ் சோதியோம் நெஞ்சக்
கல்லை மென்கனி யாக்கிய மூன்று
கண்ண வோமருட் கண்ணவோங் காதல்
எல்லை யோமெனை யாளுடை இராம
லிங்க வோம்பக லிரவொன்று தானும்
அல்லை யோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே. (2)

பழுத்த மெய்யன்பின் சுவைமுழு துண்ட
பாத வோம்பசு பதிசிவ சிவவோம்
முழுத்த மூடனே னுளங்குடி கொண்ட
மூர்த்தி யோமருட் டீர்த்தவோம் சிவவோம்
விழுத்த குந்திருத் தில்லையம் பலத்து
வேதி யோமுத்தி வித்தக வன்பு
வழுத்த வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே. (3)

என்னை யின்னிதா யாண்டு கொண் டருளும்
ஈச வோம்பாச நாசவோஞ் சிவவோம்
முன்னை வல்வினை முற்றுமோய் வுறவே
உரைக்கு மூர்த்தியோந் தீர்த்தவோஞ் சிவவோம்
தன்னை யேநிக ருந்தய வுடைய
சம்பு ராமலிங் கப்பெயர் தரித்த
அன்னை யோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (4)

எண்ணு மெண்ணங் ளெண்ணிய வண்ணம்
இனிது ணர்ந்தேழை யோங்களுக் கருளும்
வண்ண வோமருள் வண்ணசெவ் வண்ண
மாய்வந் தகப்பட்ட மாகழன் முடியாப்
பண்ண நல்லருள் பண்ணிய வெங்கள்
பண்ண வபழ மறைமுழு தேத்து
அண்ண லோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (5)

ஏத்து வாருளத் தின்புரு வாகி
யிருக்கும் பாதவோ மெங்குலம் விளங்கப்
பார்த்துக் கண்ணரு ளாலுளம் விளக்கும்
பரம வோம்பழ மலப்பிணி யவிழ்க்கச்
சோத்த மாலைக ளுக்குளங் களிக்குஞ்
சோதி யோந்தில்லை யாதியோ மரவோம்
ஆத்த வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (6)

முடிவி லன்பின ருள்ளப்பூங் கோயில்
முழும ணச்சுட ரோஞ்சிவ சிவவோம்
படியி லென்றலை தீட்டிய செந்தாள்
பங்க யப்பரஞ் சோதியோம் நாயேன்
குடியெ லாம்விளங் கப்பெருங் கருணை
கொண்ட கோலத்துக் குருபர சிவவோம்
அடிக ளோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (7)

பொய்ய தேமுழு தும்வடி வாகிய
புலைய னேன்பொய்ப் புரைமுற்றும் போக்கிய
மெய்ய ருள்கொழிக் கும்குரு ராயவோம்
வேத ஆகமம் ஓதுசெம் பாதவோம்
பைய மானிடங் காட்டிய ஆளுடைப்
பரம வோம்பர மாபரஞ் சோதியோம்
ஐய வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (8)

ஞான நாடகங் கட்டியா ருயிர்கண்
ஞாலம் யாவையும் நடிப்பித்த நலத்து
மோன வார்கழற் பங்கய முனியோ
முதலு மீறுமி லாதமு தல்வவோம்
ஈன னேனெஞ்சி னென் றும்பி ரிந்திடா
வெந்தை யோமருட் டந்தையோந் தாயோம்
ஞான வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (9)

புத்தி யூருக்கப் புறம்பதின் காதப்
பரப்புக் கப்புறம் போய்க்குடி யிருந்த
மத்த னேன்றலைக் கேவலி தன்று
மலர்க்க ழல்வைத்து மலமெலாங் கழவச்
சித்த மேகுடி கொண்டருள் செய்த
செல்வ மேசிவ னேராம லிங்க
அத்த வோமர கரகர சிவவோம்
அருட்பிர காசவோஞ் ஜெயஜெய ஜேஜே                     (10

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை


தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "அருணாம மந்திராமிர்தம்"

4. அருணாம மந்திராமிர்தம்

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

அந்த மாதியு மகன்றரு மறையின்
அமலச் சென்னியு மாகமச் சிரமுஞ்
சந்த மாலய னாதிய வானோர்
தடங்கொள் சேகர முந்தட வரிதாய்ச்
சிந்தை மெய்ம்மொழி யானுமிங் கெளிதாய்த்
தீய னேற்குவந் தகப்பட்ட செந்தாள்
எந்தை யோஞ்சிவ ஷண்முக சிவவோம்
இராம லிங்கவோஞ் சிவாயசற் குருவோம். (1)

பாசம் யாவையுஞ் கழன்றுபொய் கழுவிப்
பருவெ லாங்கெட என்னுளக் கோயில்
வாச மாகவந் துட்குடி கொண்ட
வாச நாண்மலர்ப் பாதவண் புகழைப்
பேசு மாமறை பெரிதயர்த் திட்ட
பேசு மாறெவன் பேரருட் பிரகாச
ஈச ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (2)

மூல மாயையில் தூங்கிய என்னை
முழுது ணர்த்திடக் கெழுமிய உடலம்
ஞாலம் யாவையும் வைத்தருள் விளக்கும்
ஞான மாமய நாண்மலர் அடிகள்
சீலமார்புகழ் செப்பவந் தருளும்
தேவர் சிங்கமே திருவருட் பிரகாச
ஏலும் ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (3)

கல்லை யுங்கடுப் புறாதவென் னெஞ்சக்
கருங்க லூங்கனி யாய்ப்புல னுகரா(து)
ஒல்லை மாய்வுற விழங்கியின் புருவாய்
உரைக்குந் தோறும்என் உடலெலாம் இனிக்கும்
செல்வத் தாமரைத் தாள்மலர்க்(கு)எனையும்
தேர்ந்து கொண்டருள் செய்யருட் பிரகாச
எல்லை ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (4)

காணு வார்இரு கணகளும் மனமும்
கரைந்து தங்களைக் காணல ராக
மாணு லாந்திரு அருளினால் விழுங்கி
வைத்து மாசறக் கழுவியின் பூட்டும்
தாணு வாகிய சரணவா ரிசம்என்
தலைக்கு மாமுடி யாக்கிய அமல
ஏணின் ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (5)

கண்ட காட்சியும் காணுறு பொருளும்
காணு கின்றதும் காட்டுகின் றதுவும்
கொண்ட மாமறை உபநிடக் கோயில்
கொண்டி ருந்ததுங் கொடியனேன் உளத்தைப்
பண்டை யேவிழுங் குற்றுமீட் டுமிழாப்
பண்பு மிக்கது மாங்கழல் பதித்த
எண்டங் கோஞ்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (6)

இன்னல் அற்றுயிர்க ளின்பமாங் காங்கே
எய்தி எய்துற அதுவது ஆகி
மன்னி ஓய்வில்லா வான்சுவை அமுதாய்
மானி டங்காட்டி வலிதுவந் தெனக்கே
தன்னிகர் வைப்பிற் கிடைத்திடு செந்தாள்
தாம ரைப்புகழ் சாற்றுமா சாற்றும்
என்னை ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (7)

ஞான நாடரு மைந்தரு மோன
வரரு நாடரு மாண்பதாய்ப் பொதுவின்
ஞான நாடக நவிற்றிமெய் யடியர்
நலங்கொள் சிந்தைப்பூங் கோயில்கொண் டருளும்
மான வார்கழற் புகழ்வழி வழுத்த
வந்த கப்பட்ட மாநிதி மறைகள்
ஈனு ஓம்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (8)

பத்தி யுண்டுதொண் டானவர் பெரிய
பளக றுக்கவே யருட்கொடி கட்டி
முத்தி மாமகள் களிப்புற வாழும்
முழுது மெய்யறி வின்பமாங் கழல்கள்
வைத்து வைத்துளந் தலைவிழி யணைக்க
வந்த கப்பட்டவலிதெனக் கந்தோ!
வித்தி னோஞ்சிவ ஷண்முக சிவஓம்
இராம லிங்கவோம் சிவாயசற் குருவோம். (9)

வாய்ம ணக்குற மனமெலா மணக்க
வையம் வானக மற்றுள மணக்கத்
தூய்ம ணத்தமா மறைமுடி மணக்கத்
தூய ஆகமத் தொல்சிர மணக்கத்
தாய்ம ணக்குறுங் கருணையி னாயென்
தலைம ணக்குறத் தரித்தபூங் கழல்கள்
ஏய்ம ணத்தஷண் முகசிவ குருவோம்
இராம லிங்கவோஞ் சிவாயசற் குருவோம். (10)

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை

------------


--
Regards,

Anandhan. L
Ph: +91 74-112759-38
Web : http://vallalar.org/