Search This Blog

Friday, October 27, 2017

திருவருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - மூன்றாம் பத்து

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************



(வேறு)
             மாதர் மையலற் றில்லற வாழ்வினை யொறுத்து
             வேத மோது மெய்ப் பொருளினை வேட்டுளத்துறவே 
             போது மென்றுசொற் றொண்டொடு மாதவம் புரிந்த 
             நீத ராமலிங் காரிய நின்னடி சரணம்...                          ...(21)

             சரணஞ் சார்ந்தவர்க் கிரங்குநற் றயவுசா லந்தக்
             கரண மேயரா மலிங்கர்தாட் கமலமே சனன 
             மரண நீங்கவென் சென்னிமேல் வைகியஞ் ஞானா
             வரணம் பேர்த்தலின் மவுனவான் சுகமரு விடுமே ...             ...(22)

             மருவு நின்னருட் பாவினில் வருமுதல் வெண்பாத் 
             தெரிவ ருங்கதி தெரிக்குநூன் முழுவதுந் தேர்வோர்
             குரவ ராயுலகோர்குறிக் கொள்ளவாழ்குவரேற்
             பொருவி லாதரா மலிங்கநின்புகழ்கண்டார் புகல்வார் ...           ...(23)

             வார மோங்குநின் றிருவருட் பாவினுள் வழுத்து
             நாரி பாகனார் திருவடிப் புகழ்ச்சிதேர் நலத்தோர்
             ஆரி யத்திரு மறைப்பொரு ளறிந்துய்கு வாரேல்
             யார ளந்தறி குவரிரா மலிங்கநின் னிசையே ...                  ...(24)

             இசையி னோடிய னாடகத் தமிழ்வடக் கெல்லை
             யசல வேங்கடம் போன்றுதண் டணிகைவே ளாருளா
             னசையு றாதமெய்ஞ் ஞானசம் பத்தெலா நண்ணு
             நிசசொ  ரூபரா மலிங்கமென் வாழ்முத னிதியே ...              ...(25)

             நிதியு மீகுவ னிடமுடனேவலு நேர்வன்
             கதியு மீகுவன் கற்பவை கற்றவ ரவையிற்
             பதியு மாகவைத் தருளுவன் றன்பதம் பரவும்
             விதியு ளார்க்கிரா மலிங்கவே ளென்பர்மே லவரே ...             ...(26)

             மேலு லாஞ்சித்தர் மதித்திடச் சித்தெலாம் விளங்கிக்
             கால மூன்றையுங் கருத்தினுட் கண்டுவாழ் நினைக்கல்
             லாலின் கீழமர் தக்ஷிணா மூர்த்தியென் றடைந்தேன்
             சீல மேவிரா மலிங்கதே சிகவருள் செய்யே ...                  ...(27)

             செய்யுண் மாலைநின் சேவடி புனைந்திடுஞ் சிறியேன்
             பையு ணீங்கியுய் பாக்கருள் பாலிக்க வேண்டு
             மையுண் கண்ணியர் மாலறவென்றரா மலிங்கத்
             துய்ய னேவடல் வாழ்வெனத் துலங்குகின் றவனே ...            ...(28)

             துலங்கு சீர்வட லருட் பெருஞ் சோதிவாழ் சவையை
             யிலங்கத் தோற்றுவித் தலகில் சித்தாடுவா னெண்ணி
             விலங்கு றாதனற் சமாதியின் மேவுமா தவரா 
             மலிங்க தேசிகா வென்றனை வாழ்விக்க நினையே ...            ...(29)

             நினையு நின்னடித் தாமரை நெஞ்சிடை நிறுவி
             வனையு மென்றமிழ் மாலையைச் சூட்டுபு வணங்கு
             மெனையு நின்றிருத் தொண்டருட் கூட்டுதற் கிசைவா
             யனையு மத்தனு மாமிரா மலிங்கவா ரியனே    ...              ...(30)



திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - இரண்டாம் பத்து

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************


வேறு.

வாயிலோ ரைந்திற் புலனெனும் வேடர் வசத்தனாய் மறனெலா மியற்றி
நாயிலோர் கடைய னாயினே னந்தோ நரகிடை விழாமலென்றனை நீ
தாயிலோர்கருணைகாட்டியாண்டருள்வாய்தமியனேனின்சரணடைந்தேன்
காயிலோர் புகலு மில்லைகாண் வடலூர்க்கத்தரா மலிங்கசற் குருவே.  11

குருபரனெனவே குவலயத் தறிஞர் குறிக்கொளச் சிவநெறி விளக்கி
யொருபர ஞான மெய்தியாறந்த முஞ்சம ரசமெனத்தெரித்தாய்
வருபர வுணர்வில் வயங்குபே ரொளியே மன்னுசீர் வடலுறு மோன
சொருபமே யிராம லிங்கவாரியனே சோர்வற வென்னையாண்டருளே. 12 

என்னையாண் டருளுமெலாம்வல்லசித்தே யெழில்வடன்மேவுசிற்சபையிற்
றன்னையாண் டவனாச்சகத்துளோர் மதிக்கத் தன்னிகர்ஞானநாடகஞ்செய்
மன்னையாண் டேத்தியருட்பெருஞ்சோதிவடிவுபொற்றொளிர்தருங்கோவே
மின்னையாண் டிருக்கு மிடத்திரா மலிங்க விகிர்தனே யுய்யுமாறுரையே. 13

உய்யுமாறுரையா யுன்பத மடுத்தே னுன்புக ழியம்பிடுகின்றேன்
ஐயனே களைக ணீயென நினைத்தே னருட்பெதிஞ் சோதிவாழ் வடலூர்த்
துய்யனே யிராம லிங்கமா மணியே துணைவனேயணை தியென்றிறைஞ்சிப்
பொய்யனே னினையேநம்பினேனென்னைப் புனிதனாச்செயவல்லரசே. 14

வல்லவா வடலூ ரருட்பெருஞ் சோதி வாழ்வினைத் தாழ்வறப்பெற்ற
நல்லவா தூய வருட்பிர காச நற்றவா நினதுசந் நிதிச்சீர்
சொல்லவாக் களித்தராமலிங் காநின்றுணையடி துணையெனப் பிடித்தேன்
பல்லவா வுலகர் மதித்திடவேண்டும் பரிசெலா மீந்தருளெனக்கே.  15

ஈந்தனை யுனையேத் திடுமதியதனா லெனைப்பணி கொண்டனை வடலூர்
வேந்தனி லோங்குமருட்பிர காச வித்தகா வான்மசொ ரூப
மாந்தனி யதுல வான்பொரு ளானா யடியனேற் குறிக்கொளல் வேண்டுஞ்
சாந்தநற் பதமே திகழிரா மலிங்க சற்குரு மாணிக்கமணியே.      16

மாணிக்க வாச கப்பெரு மான்சொன் மலர்த்தமிழ்த் தேனைவாய் மடுத்து
காணிக்கை யாக வருட்பெருஞ் சோதிக்கடவுளைப் புகழ்ந்தபா வலங்கல்
பேணிக்கு நறுஞ்சா றெனவினித் திடநீ பேசினை திருமுறை யாறும்
வாணிக்கு வரம்பா மருட்பிரகாச வள்ளலாய் வயங்குமா தவனே.  17

மாதவச் சித்த சிகாமணி யெனவே வயங்கிய ஞானசற் குருநீ
யாதவற் கிணையா வெனதகத்திருளை யறுத்தது பளிங்கென விளங்க
வோதவத் தைகளையொழித்தெனைக் காட்டியொளிர்ந்தனைவாழியென்னரசே
தீதறு மிராம லிங்கமா மணியே சேதனர் போற்றவாழ் பவனே. 18

பவந்தனை யீட்டிப் பதைத்தபல்பிறப்பும் பயன்பட விம்மையேயெனக்குச்
சிவந்தனை வடல்வா ழருட்பெருஞ் சோதி திருவினை வழங்கவல்லவனீ
யுவந்தனை யெனையுந்தொண்டுகொண்டனையீ துண்மையேலுய்யுமாறருளாய்
தவந்தனை யுலகர் தம்பொருட் டாற்றுந் தனியிரா மலிங்கநாயகனே. 19

இராமலிங் காய நமவெனப்பணிவோ ரிடருறார் நலமெலாம்பெறுவார்
அராமலிந் தாடு சடையனார் வடலூ ரருட்பெருஞ் சோதியாரருளா
னிராமயங் குவல வருட்பெருஞ் சித்து நினைந்தவா றாடுவர் மீட்டும்
வராமலின் பத்தேனுகர்வர்தாமெனவே மதிஞர்சொன்முழுங்குவமாதோ. 20 

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - முதற்பத்து

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி நூலின் பழம்பதிப்பு (1902) வெளியீடு.

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
***********************

காப்பு.

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

மேகம்போற் கருணைபொழி யருட்பிரகா சப்பெருமான் மிகுதிராட்சைப்
பாகம்போன்மெனவாறு திருமுறைசேர் திருவருட்பாப்பகர்செவ் வாயான்
மோகம்போக் கியராம லிங்ககுரு பரற்கணிவான் மொழியப்புக்க
சோகம்போம் பதிற்றுப்பத் தந்தாதிக் கானைமுகன் றுணைத்தாள்காப்பே.

சித்தர்குல சேகரனி ராமலிங்க தேசிகன்மேற் செவந்திமாலை
சுத்தமுறத் தொடுத்தணியும் பரிசெனச்செந் தமிழ்மொழியாற் றொடுத்துச் சாத்தும்
பத்திவிளை பதிற்றுப்பத் தந்தாதி பாகமுறப் பகர்தற் கன்னேன்
வைத்தருளும் பெருங்கருணை துணையாக வவன்மலர்த்தாள் வணங்கி வாழ்வாம்.

இந்தமிழ்தம்போலினிப்பாள் வெண்பளிங்குபோலுருவாளிசையார்சங்கச்
செந்தமிழ் தந்தொளிர் தருமான் வெண்கமலா சனச்செல்வி திருத்தமாக
நந்தமிழ்தண் கடனிகரும் பேரருள்செய் தெனதுசெந்நா நயந்திருந்தாள்
வந்தமித வருள்பொழியி ராமலிங்கதேசிகன்சீர் வழுத்தத்தானே.

***********************
 நூல்.

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

தேருர்ந்த மேருவலன் சூழ்தருமோர் செங்கதிர்போற் றிகழ்ந்து வற்றா
நீரூர்ந்த கடலுலகி லருட்கிரணந் தனைப்பரப்பி நெடியமூலக்
காரூர்ந்த குப்பாய நீக்கியருட் பெருஞ்சோதி காணக்காட்டுந்
தாரூர்ந்த வயங்கெழுதோ ளிராமலிங்க குருவடலூர்ச் சபைகண்டோனே. 1

கண்டாய்நீ வடலுறுசிற் சபையுளருட் பெருஞ்சோதி கண்டபின்னே
கொண்டாய்நீள்மோனபதங்கல்லாலின் புடையமர்ந்தோன்கோலம்பூண்டய்
தண்டாய்நீங்காத்தொழும்பருடனின்றாயெனையுனடித்தண்டேன்மாந்தும்
வண்டாநீர் மையனாகப் பணித்தியருட் பிரகாச வள்ள லானே.  2

வள்ளலாய் வடலூருள் வருவார்க்கு னருளமுதம் வழங்கா நின்றாய்
கொள்ளலாம் பரிபாக மின்மையினாற் பரிந்தேத்திக் கொளமாட்டாம
லெள்ளலா மலத்தழுந்தி மாழாந்தே னெனக்குமெந்தா யிரங்குவாயோ
பொள்ளலா மலவுடல்பொன் னுடலாக்கு மிராமலிங்கப் புனிதத்தேவே.  3

தேவேமெய்ஞ் ஞானவருட்பிரகாச வள்ளலெனத் திகழா நிற்குங்
கோவேயெண் குணமலையே வடலுறுசிற் றம்பலத்துட் குலவுஞானப்
பூவேயப் பூமணமே மணங்கமழ்செந்தேனேநின் பூந்தாட் கென்சொற்
பாவேறத்தொண்டுகொண்டாய்முன்னெதுமா தவம்புரிந்தேன்பாதகனேனே. 4

பதமலரைக்கும்பிடுவோர் குறிக்கொண்டு நாவாரப் பாடாநிற்போர்
நிதமலரைச் சொரிந்திடுவோ ரிதயமலர் மிசையிருத்தி நினையா நிற்போர்
மதமலரை நிகருமகத் தருக்கொழிந்தோர் தரிசிக்க வடலூர் வாயற்
புதமலர வருஞான சித்தசிகா மணியேயொற் புரந்தாள் வாயே.  5

புரப்பாயிச் சிறுநாயேன் றனையெனநின் மலர்ப்பாதம் போற்றா நின்றேன்
இரப்பாருக் கிரங்குநர்போ லெனக்கிரங்கி யருள்புரிய வெண்ணுகண்டாய்
வரப்பாவ லோர்வணங்கத் தக்கவருட் பிரகாச வள்ள லேபுன்
னிரப்பாலெய்த் தவர்க்கருளுங் கற்பகமே யிராமலிங்க நிமலவாழ்வே. 6

வாழ்வனைத்து நின்மலர்க்கட் கடைநோக்கா லன்பர்பெற வழங்கி யன்னார்
தாழ்வனைத்து மவர்பகைவர் தமைச்சாரப் புறம்போக்குந் தயவு ளானீ
சூழ்வனத்து வடலூருட் கதிர்மதிதீ மண்டலத்துட் சோதிபோலூழ்
போழ்வனப்புத் திகழ்தரவாழிராமலிங்கா ரியநின்றாட் புகல்புக்கேனே. 7

புகன்றார்க்குன் சீர்நினைப்பார்க் கருள்காமதேனுவெனப் பொலிந்துளாய்நீ
யிகன்றார்முன்னெனைப்பாதுகாத்தருளும்பெருந்துணை நீ யெனவடைந்தே
னகன்றாழ்ந்தவருட்கடலே வடலுறுசிற்சபைமருவு மருட்சோதிக்கோர்
மகன்றானென் றெணவிளங்கு மிராமலிங்ககுருவேகண் மணியன்னானே. 8

அன்னையொப்பாயத்தனொப்பாயிருநிதியம்போல்வாய்நின்னடியனேற்கோர்
மன்னையொப்பா யுனதுதிரு வடித்துணையே புகலாக வழிபாடாற்று
மென்னையொப்பாருணர்வில்லார் பிறருளரோ வெனையுனருட்கிலக்காவைப்பாய்
பொன்னையொப்பா யருட்பெருஞ்சோதியைப்போற்று மிராமலிங்கப் புலவரேறே.9

புலவர்புகழ் சைவநெறிக் குரவரொரு நால்வர்பதம் போற்றி யன்னார்
நிலவுபெருங் கருணைதனக் கிலக்காகிப் பரம்பரன் சீர்நிகழ்த்தி நின்றாய்
மலவலிநீத் தருள்வலிபெற் றெல்லாஞ்செய் வல்லசித்தாய் வடலூர்வாழுங்
குலவரையே யிராமலிங்க குருமணியே குறைதவிர்த்தாட்கொள்ளு வாயே. 10 

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - பாயிரம் / சாற்றுக்கவி

திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்சோதி துணை

திருவருட் பிரகாச வள்ளலார்
  பதிற்றுப் பத்தந்தாதி.
----------------------------------------
இஃது
ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தலைவரும்
உத்திரஞான சித்திபுரச் சிற்சபை வகுத்தவருமாகிய
திருவருட் பிரகாசவள்ளலார்
சிதம்பரம்
இராமலிங்க சுவாமிகள் மேல்,
--------------------------------------
திரிசிபுரம் ஸ்ரீலஸ்ரீ
மஹாவித்வான் சிந்தாந்த ரத்னாகரம்
அ. வேங்கடசுப்புப்பிள்ளை யவர்களாலியற்றி
-------------------------------------
பெங்களூரில் வணிகர் குலதிலகம்
மேற்படி சுவாமிகள் திருவடிக்கன்பருமாகிய
மஹா-ராஜ-ராஜ-ஸ்ரீ ம. அப்பாசாமி செட்டியாரால்
------------------------------------
பெங்களூர் தண்டு:
நேஷனல் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
பிலவ வருஷம் மாசி மாதம் 3
-----------------------------------
1902
(Copy Right Registered)


====================================================

இஃது
சென்னை வைசியவணிகர் குலப் பெரியதனக்காரரும், திருவொற்றியூர்
அகத்தீசுரர் தேவதான தர்மகர்த்தருமாகிய
ஸ்ரீலஸ்ரீ கோவளம் அப்பாசாமி செட்டியார் இயற்றியது

சிறப்புப்பாயிரம்.

வெண்பா

பொருணயமுஞ் சொன்னயமும் பொற்பு மிகுத் தோங்குந்
தெருணயமுங் காட்டிச் சிறக்கும் - அருணன்
றுதித்தனவி ராமலிங்க வொண்குருமேற் சாற்றும்
பதிற்றுப்பத் தந்தாதி பார்.

---------------------------------
திருச்சிற்றம்பலம்

நிலைமண்டில ஆசிரியப்பா

அருட்பெருஞ் சோதி யாந்தனிச் சிவமே
தொருட்பெரு முத்தருஞ் சித்தரும் வியப்புற
உலகின் மன்னுயி ருவப்புற மலவிருள்
விலகிக் கரந்திட விளங்குபவன் மதத்தரும்
சமரசச் சுத்த சன்மார்க்கத்தினை
யமைவுட னுணர்ந்தங் கபேத நலம்பெறத்
திருவருண் மேனி சிறந்துறக் கொண்டு
வெருவற மேதினி மேலவ தரித்தெனச்
செய்தவ மனைத்துந் திரண்டு வந்துற்றென
ஐதருள் விளங்க அவதரித்திட்டவன்
சற்குணக் கடலாய்த் தழைத்ததூயவன்
சிற்குணக் கடலுளந்தெளிந்து படிந்தவன்
தயவலா லொன்றைத் தானறியாதவன்
உயவெலாச் சமயத்துண்மை கண்டுணர்ந்தோன்
ஒழுக்க மென் பனவெலா முள்ளவாறடைந்தோன்
தன்னிளங்காலையிற் சரவணோற்பவனார்
இன்னருளெய்தினோ னிருந்தமிழ்க் குரிசில்
ஒற்றியம்பதியி லுமாபதிதன்னை
நற்றிடம் பெறவே நாடொறுந்துதித்துத்
திருவருள் விளக்கஞ் சிறப்பவாய்ந்தவன்
பொருவருந் தமிழ்நயம் புணர்ந்தநன்மதுரச்
செந்தமிழ் நிதியாந் திருவருட் பாவினைத்
தந்ததயாளன் தன்னிகர் நாவலன்
ஜீவகாருணியத் திறனெலாந்தெரித்தவன்
பாவகாரியக்கொலை பண்ணாதகற்றினோன்
இருட்பிரகாச மிலாவகைமுயன்ற
அருட்பிரகாச வள்ளலாயமர்ந்தவன்
உத்தரஞான சிதம்பரமுஞற்றிச்
சித்திகள் விளையுஞ் சிற்சபைகண்டவன்
பற்பலகாலைப் பத்தர்களுணர்ந்திட
அற்புதம்புரிந்தவ னகண்ட வியாபகச்
சச்சிதானந்தம் தானாய்விளங்கி
நச்சினார்க்கினிய நாயகமானவன்
என்றுலகேத்திடு மிராமலிங்காரியன்
குன்றுறழ் பொற்றோன் குலவுபேரணியெனப்
பதிற்றுப் பத்தந்தாதிப்பெயரிய பனுவலைத்
துதித்துச் சூட்டினன் சுகுணமிக்கவன்
நாற்கவிப்புலமை நண்ணிய நாவலம்
நூற்கடல் வரம்புதேர் நுண்ணறிவுடையோன்
சுத்தசித்தாந்த ரத்தினாகரமெனப்
பெற்றசிறப்புப் பெயரொடு திகழ்வோன்
சிரகிரிதனிலுஞ் சீரான்வாயிற்
புரியினும் வாசம் புரிதரு நலத்தினன்
என்மனக்கினிய வென்னருநண்பன்
தன்மனக்கலைப் பொருள் தமியேற்கீந்தே
இளமையினென்னுட னிருந்தமிழ் பயின்றவன்
உளமலியன்பு சிவத்திடையுய்த்த
தேங்கடமனைய செந்தமிழ் வாக்கின்
வேங்கடசுப்பென விளங்கு நற்சைவன்
அப்புவியமிழ்தெனச் செப்பின்னாக
இனையவன்றருநூ லினிமைநோக்கித்
தனைநிக ரிராமலிங் காரியன்றாண்மலர்
பத்திசெய்குநர் பயின்றருள் சார்ந்திட
மாநிலம்புகழ மண்ணூர்ப்பேட்டை
தானிடமாக்கிய சற்சனர் புகழும்
உத்தமன் தமிழ்நூ லுவப்பொடு கற்பவன்
வர்த்தகச்சிறப்பின் வைசியவணிகர்
தங்குலத்திலகன் பெங்களுரென்னும்
மங்களாகரமா மன்னுகல்யாண
புரத்தினில்வாழ்க்கை தரித்தவனப்பா
சாமிவேளன்பாற் றோமிலாவச்சிற்
பத்திது நறுந்தமிழ்ப் பாருளோரெவரும்
மதிக்கவழங்கினன் மாரிபோல்பவனே.

--------------------------------

இஃது
அருட்பெருஞ்சோதியாண்டவர் அடியார்க்கடியராகிய
பெங்களூர்
நாராயணசாமி செட்டியார் இயற்றிய,

வெண்பா.

வித்துவ சிகாமணியாம் வேங்கடசுப் பேந்த்ரனருட்
சித்த னிராமலிங்க தேசிகன்மேற் - சித்தமிகு
மன்பாற் பதிற்றுப்பத் தந்தாதி பாடினான்
இன்பா லதுகற்கண்டே.

-----------------------------------

Saturday, October 14, 2017

"திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி" நூலின் பழம்பதிப்பு (1902) வெளியீடு.

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி நூலின் பழம்பதிப்பு (1902) வெளியீடு.

நூலாசிரியர்:
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்'

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" -

நூல் அறிமுகம்:
திருஅருட்பிராகாச வள்ளல் பெருமான் நம்மை உய்விக்க வந்த அருளாளர், அவர் தம் சீடர்கள் அனைவரும் அவரின் பெருமையை முற்றும் நன்கு உணர்ந்தவர்களே, அவர்கள் உணர்ந்த விதத்தையும், பெருமானார் தம்மை ஆண்டுகொண்ட அருளினையும், வள்ளலாரின் பெருமைகளையும் "தமிழ்பாக்களாகவும், தோத்திரங்களாகவும், நூல்களாவும் வெளியீட்டு" அந்நூல்களுக்கு "பெருமானாரின் திருப்பெயரைச் சூட்டி வழங்கியுள்ளனர். எளியவனுக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் தோன்றிய அருளாளர் ஒருவருக்கு அவர்களின் மாணவர்களால் எண்ணிலடங்கா தோத்திரங்கள் எழுதப்பட்டது என்றால் அது வள்ளல் பெருமான் ஒருவருக்கேயாம்.

அந்த வகையில் வள்ளல் பெருமானின் மாணவர்களுள் ஒருவரும், திருஅருட்பாவிற்கு உரை எழுதத்தொடங்கி முதல் திருமுறை முழுவதும் உரை கண்டவரும், தமிழ் அறிஞருமான "'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" வள்ளல் பெருமான் மீது "திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி" என்னும் நூலினை தோத்தரித்து, வள்ளல் பெருமானின் அன்பராகிய "பெங்களூரில் வணிகர் குலதிலகம்" ம. அப்பாசாமி செட்டியார் அவர்களின் உதவியால் 1902 ஆம் ஆண்டு இந்நூலினை "பெங்களூர் நேஷனல் அச்சியந்திரசாலையில்" பதிப்பித்தார்கள்.

நூலின் அமைப்பு:

பதிற்றுப்பத்து என்னும் நூல் அமைப்பு சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. அரசனுக்குப் பத்துப் பாடல் என்று 10 சேர அரசர்கள்மீது பாடப்பட்ட நூல் சங்க இலக்கிய பதிற்றுப்பத்து ஆகும், அந்த முறையில் "திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி" 100 பாடல்களைக் கொண்டுள்ளது, இன்னூறு பாடல்களும் வள்ளல் பெருமானின் சிறப்பினை மெய்ஞானத் தேன் என எடுத்து இயம்புகின்றது,

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள் மஹாவித்துவான் ஆகையால் பதிற்றுப்பத்துடன் அந்தாதி செய்யுள் (ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ, தொடரோ அடுத்தப் பாடலின் தொடக்கத்தில் வரும்படிப் பாடுவது அந்தாதி)முறையையும் இணைத்து மெய்ஞானத் தமிழில் தம் குருநாதர் மீதுபாடல்களை தோத்திரமாக சாற்றியுள்ளார். இப்பாடல்கள் உள்ளபடியே உள்ளத்தினை உருவக்குவதாயும் வள்ளல் பெருமானின் திருவடிக்கண் அன்பினை நமக்கு அதிகரிக்கச் செய்வதாயும், மிக எளிமையாகவும் அமைந்துள்ளது.

இன்னூல் நமக்கு கிடைத்த செய்தி:

தொழுவூர் வேலாயுதமுதலியாரின் மகன் செங்கல்வராய முதலியாரின் வழித்தோன்றலும் (பெயர்த்தி), பெங்களூர் சீராமபுரம் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியருமான திருமதி. அருளாம்பிகை அம்மையார் அவர்கள் சன்மார்க்க சான்றோர்களின் வேண்டுகோளுக்கு இனங்கி தம் பாட்டனார் மற்றும் தந்தையார் ஆகியோர் சேர்த்துவைத்திருந்த சன்மார்க்க நூல்களை பெங்களூரு சன்மார்க்க சங்கத்தின் மூலமாக "வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின்" இயக்குனரும் மேனாள் தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனருமான முனைவர் இராம. பாண்டுரங்கன் அய்யா அவர்களிடம் வழங்கினார்கள்,

வள்ளல் பெருமானின் சீடர்கள் பெருமான் மீது இயற்றிய பாடல்களை தொகுக்கும் எனது(ஆனந்தபாரதி) முயற்சியை அறிந்த இராம. பாண்டுரங்கன் அய்யா அவர்கள் இன்னூலினையும் அப்பணியில் சேர்த்துக்கொள்ளப்பணித்தார்கள், அன்னாருக்கு, அம்மையாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன், இதுபோல நூல்கள் தங்களிடம் இருப்பின் இத்தொகுப்பிற்க்கு தந்து உதவும் படியும் அன்போடு வேண்டுகின்றேன்.

(வள்ளல் பெருமான் மாணவர்கள் வள்ளலார் மீது பாடியபாடல் தொகுப்புகளை இன்றுவரை தொகுத்தவை அனைத்தினையும் vallalarpootri.blogspot.com என்ற இணைய முகவரியில் காணலாம்)

அன்பர்களின் வசதிக்காக இன்னூலின் படக்கோப்புவடிவம் (PDF) இங்கு வெளியிடப்படுகின்றது,

பதிவிறக்க இணைப்பு : http://www.vallalarspace.org/AnandhaBharathi/c/V000026699B

 இன்னூலினை கணினி மயமாக்க தட்டச்சுசெய்து உதவியவர்கள், தயவுத்திரு. ஹரிஹரன், தயவுத்திரு. ஆனந்தபாரதி. 

இவ்வரிய நூலினை வள்ளல் பெருமானின் அன்பர் ஓதியும் உணர்ந்தும், பிறருக்கு பரிந்துரைத்தும் உய்வார்களாக.

நன்றி 

Monday, October 2, 2017

திருவருட் பிரகாசனார் சந்நிதி முறை வாழ்த்து

13. வாழ்த்துத் திருவிருத்தம்

திருவிருந்திடு தெய்வத் தாமரை செய்ய
உருவிருந்திடும் பதமல ருவப்பினென் றலைக்கே
பெருவிருந்திடும் அருட்பிர காசனார் பெருஞ்சீர்
வருவிருந்திடும் வாயதே வாழிநீ டூழி.

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

-----------------------

14. வாழ்த்துத் தனி நேரிசை வெண்பா

ஆரியனார் சீர்பாதந் தாங்க அமைசிரமும்
ஆரியனார் சீர்பாட வாநாவும் - ஆரியனார்
செம்மொழியே சிந்திக்கு நெஞ்சுந் தருந்தவமே
எம்மையினும் வாழ்க இனிது.

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை


திருவருட் பிரகாசனார் சந்நிதி முறை முதற்பகுதி முற்றும்.

--------------------

தொழுவூர் வேலாயுதனார் வள்ளலார் மீது பாடிய "மங்கள் வாழ்த்து"

12. மங்கள் வாழ்த்து

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

புளின மாமாது பங்கினன் பொருவில்சூ ராடு கண்டகன்
புதல்வ னேயாக வந்துறும் புனிதபா லாய மங்களம்
களிசெய் காமாதி யந்தகன் கழியபா தார விந்தமுன்
கருணை யானேநி மிர்த்திடுங் கனகவா காய மங்களம்
விளிவி லாலால சுந்தரன் விரைவினா சார முன்றரும்
விடமு மேனாள்வி ருந்ததின் மிகைகிரீ வாய மங்களம்
நளின மீதேயி யந்தவ னளினமா தாவி யுந்தொழும்
நலப தாராம லிங்கவென் னடநபா தாய மங்களம் (1)

தகவி லாதேனை யுங்கொளுந் தருணமீ தாக வந்துதன்
சரண வாரீச முந்தருந் தயவினாய்ராம லிங்கவென்(று)
உகலி லோர்நாம மும்புனைந்து உவமையாதேனு மின்றியங்கு
ஒருவ னாபாச நெஞ்சக மொருவிலா யோக மிங்குறுஞ்
சுகசொ ரூபாய மங்களஞ் சுருதியா தார மங்களம்
துதிசெய் வார்பால மங்களம் சொலவொணா சோதி மங்களம்
நகமி னாதாய மங்களம் நடவினே தாய மங்களம்
நடந ராசாய மங்களம் நடநபா தாய மங்களம். (2)

பரம போதாய மங்களம் பவதி லோலாய மங்களம்
பவள ரூபாய மங்களம் பசுவினே றாய மங்களம்
சரப கோலாய மங்களம் சகலமா லாய துன்புறும்
சரச சீலாய மங்களம் சகுண லீலாய மங்களம்
வரப்ர தாபாய மங்களம் மதில்கள்கோ பாய மங்களம்
மயலு லோபாய மங்களம் மகவிலா பாய மங்களம்
நரனெ னாராம லிங்கனென்(று)ஒருபொன் ஆம்நாம வங்கிதர்
அணியெ னாளாவு வந்திடும் நடநபா தாய மங்களம். (3)

சகமி லாசாய வம்பர மதனி லாசாய லென்றிடும்
தனிவி லாசா யமங்களம் சபையு லாசாய மங்களம்
சுகசு ரேசாய மங்களம் துயர்வி தேசாய மங்களம்
சுகுண வாசாய மங்களம் துரிய தேசாய மங்களம்
மகவின சாய மங்களம் மதுர வாசார மங்கலை
மகிண நேசாய மங்களம் மதிளி னாசாய சிந்திடும்
நகவி னாணாமு கஞ்சர மரியுமோர் சார்ப தென்றிடு
  நடலை யாய்ராம லிங்கவென் னடந பாதாய மங்களம்.    (4)

சகல வேதாக மங்களும் தலைமை நாடாவ ணங்கிடும்
சமர சாசார விங்கிதம் தழவு மேலாய சங்கநின்று
அகில நோனாமை யுய்ந்திட வருளுவா னாக மொன்றணிந்து
அமல மா நாடகஞ் செயும் அமுதகோ லாய மங்களம்
இகல றாதாம தங்களென் பவையெ லாமோவி யம்புவி
இனிய சீபாத பங்கயம் இயையு சாவாமை யொன்றுற
நகலி லாவாழ்வு வந்தரு ணகமினா தாய மங்களம்
நடந ராசாய மங்களம் நடந ராசாய மங்களம்.     (5)

அருட்பெருஞ்சோதி                          தனிப்பெருங்கருணை

----------------------