Search This Blog

Monday, July 21, 2014

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது காரணப்பட்டு, கந்தசாமி பிள்ளை பாடிய " வள்ளலார் துதி" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 
காரணப்பட்டு, கந்தசாமி பிள்ளை பாடிய 
" வள்ளலார் துதி" .
எத்தனைப் பிறவிகள் எடுக்கவைத்தும் பிரமன் இன்னும் சலிக்க வில்லை
இறப்புத் தொழில்பல இசைத்துஅவ் இயமனுக்கு என்பால் இரக்கம் இல்லை
நித்தமும் விடாது அனுபவிக்கவரு முன்செய்த நீள்வினை ஒழிந்தது இல்லை
நெஞ்சம் எண்பதுகோடி நிதம்நினைக்கும் தொழிலை நிமிடமும் மறக்க வில்லை
சித்தமொடு புத்தியும் சிந்தனை விசாரமும் சிறிதும் குறைந்த தில்லை
சிறியனேன் என்செய்வேன் இவ்வகை துன்பெலாம் தீர்ந்திடச்செய் தருளுவாய்
சித்தர் முத்தர்கள் பத்தர் நற்றவர் பெரும்புலவர் சேர்வடற்சிற் சபையில் வாழ்
திருவருட் புரவாச மருவும் உத்தமர்நேச திருஅருட்பிரகாசனே.
ஞாலமதில் மனம்ஒத்த நண்பினரை வஞ்சிக்கும் நயமுளேன் நல்லோர்தமை
நாத்தழும்பு ஏற வன்மொழிநவிலுவேன் உன்தன் நாமம்ஒரு போதும்உரையேன்
சாலமடவார் தமை தஞ்சமென்று எண்ணுவேன் தவவிரத தருமம் நினையேன்
தானஞ்செய்வோரைத் தடுக்க அறிவேன் தீயோர் தம்மினும் தவறு புரிவேன்
காலமெல்லாம் களவு செய்வோர் தமக்குஉளவு கரவிற் கலந்து சொல்வேன்
கலியுறும் கயமைபல கருதினேன் எனினும் இக்கடையேனை ஆண்டருளுவாய்
சீலமிகு மெய்யடியர் சேரும் வடலூரெனும் சித்திபுர சிற்சபையில் வாழ்
திருவருட் புரவாச மருவும் உத்தமர்நேச திருஅருட்பிரகாசனே.

- காரணப்பட்டு, கந்தசாமி.

No comments:

Post a Comment